From s.raa's website
செகாவின் நாய்கள்
புகழ்பெற்ற எழுத்தாளரான ஆன்டன் செகாவிற்கு ரஷ்யாவில் நினைவில்லமும் சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கூடுதல் சிறப்பு செகாவ் வளர்ந்த டச்ஷண்ட் நாய்களுக்கும் கூட நினைவுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
செகாவ் கதைகளில் வரும் நாய்கள் மறக்கமுடியாதவை. The Lady with the Dog” கதையில் வரும் அன்னா ஒரு வெள்ளை நாய் வைத்திருக்கிறாள். இந்த நாய் அவளது அப்பாவித்தனத்தையும் இளமையையும் குறிக்கும் குறியீடு போலவே கதையில் சித்தரிக்கப்படுகிறது.
கஷ்டங்கா என்ற சிறுகதையும் நாயைப் பற்றியதே. இக்கதையில் வரும் நாய் ஒரு தச்சருக்குச் சொந்தமானது, அவர் ஒரு நாள் கஷ்டங்காவை வெளியே அழைத்துச் செல்கிறார், வழியில் ஒரு இராணுவ அணிவகுப்பின் குழப்பத்தில் கஷ்டங்காவைத் தொலைத்துவிடுகிறார். போக்கிடம் தெரியாமல் அலையும் கஷ்டங்காவை ஒருவன் மீட்டு உணவளித்துத் தனது வீட்டிற்கு அழைத்துப் போகிறான். வேடிக்கை நிகழ்ச்சி நடத்தும் அவனிடம் பெயர் மாற்றப்பட்டுக் கஷ்டங்கா புதிய சூழலில் வாழ ஆரம்பிக்கிறது.
அதற்கு விசேச பயிற்சிகள் தந்து விசித்திர நாயாக அடையாளப்படுத்துகிறான். புதிய வாழ்க்கையைக் கஷ்டங்கா ஏற்றுக் கொள்கிறது. ஆனால் முடிவில் தனது பழைய எஜமானனை அடையாளம் கண்டு அவரிடமே போய்ச் சேர்ந்துவிடுகிறது கஷ்டங்கா. இக்கதையில் நாயின் விசுவாசத்தை, இயல்பை செகாவ் சிறப்பாக எழுதியிருப்பார்.
செகாவ் மெலிகோவோவில் வாழ்ந்த போது ப்ரோம் மற்றும் கினா என்ற இரண்டு நாய்களை வளர்த்தார். அந்த நாய்களின் நினைவாகச் சிற்பி அலெக்சாண்டர் ரோஷ்னிகோவ் இந்தச் சிற்பங்களைச் செய்துள்ளார்
செக்கோவின் நாய்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசித்த நாடக ஆசிரியர் ஆசிரியர் நிகோலாய் லெய்கின் வளர்த்த டச்ஷண்ட் நாயின் குட்டிகளாகும். இரண்டு நாய்க்குட்டிகளையும் அவர் செகாவிற்குப் பரிசாக அளித்தார். இந்த நாய்க்குட்டிகளுக்குப் பெயர் வைத்தவர் செகாவின் சகோதரி மரியா.
ப்ரோம் மற்றும் கினா, கறுப்பு மற்றும் சிவப்பு நிறமுடையதாக இருந்தன. கினாவுக்குக் குறுகிய கால்கள் இருந்தன, வயிறு கிட்டத்தட்டத் தரையில் இழுக்கப்பட்டது. ஒவ்வொரு நாளின் மாலையும் கினா செகாவும் நாய்களுடன் அரை மணி நேரம் பேசுவார், விளையாடுவார். அந்த நேரத்தில் கினா அவரது கால்களை ஆசையுடன் நக்குவது வழக்கம்..
கினா மற்றும் ப்ரோம் ஆகியவற்றின் சிற்பம் செய்யப்பட்ட பிறகு இங்கே வரும் பொதுமக்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற நாய்களின் மூக்கைத் தடவுகிறார்கள். நாய்களின் முன்னால் உள்ள தொப்பியில் நாணயங்களைப் போட்டுச் செல்கிறார்கள்.
செகாவைக் கொண்டாடுவதன் அடையாளமாக அவரது நேசத்திற்குரிய நாய்களுக்குச் சிலை செய்து வைத்திருப்பது ரஷ்யப் பண்பாட்டின் சிறப்பு என்றே சொல்வேன்.
நன்றி: திரு எஸ்ரா, திருமதி எஸ்ரா மற்றும் முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக