23 பிப்., 2020

கருத்தைக் கவர்ந்தவை!

தமிழ் இலக்கியத்தின் தசரத் மாஞ்சி – எஸ்.ராமகிருஷ்ணன். 

தசரத் மாஞ்சி பிகார் மாநிலத்தில் தனி ஒரு மனிதனாக ஒரு சிறு உளியையும், சுத்தியலையும் கொண்டு 22 ஆண்டுகள் ஒரு மலையை குடைந்து பல கிராமங்களுக்கு பாதையை உருவாக்கித் தந்தவர். அவரால் தான் இன்று பல கிராம மக்கள் சுலபமாக பயணிக்க முடிகிறது. பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. ஆனால் அவரை எத்தனை பேருக்கு தெரியும். போற்றப்பட வேண்டிய அந்த மனிதருக்கு இறக்கும் தருவாயிலேயே மிக மிக சிறிய வெளிச்சம் கிடைத்தது.

இதே போல் உலகம் முழுக்க பல துறைகளில் பல சாதனைகளை செய்தவர்கள் யாருக்கும் தெரியாமலேயே மண்ணோடு மண்ணாக மறைந்திருக்கிறார்கள். தமிழகத்தில், அதுவும் தமிழ் இலக்கியத்தில அப்படி நிறையப்பேர் இருந்திருக்கறார்கள். தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெறாத காலகட்டத்தில் ஒருவரை அறிய நமக்கு தடைகள் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படி ஒருவர் மறைக்கப்பட்டால், பரவலாக தெரியாமல் இருந்தால் அல்லது மேம்போக்காக மட்டுமே தெரிந்திருந்தால் அல்லது சுத்தமாக தெரியாமலேயே இருந்தால் அது திட்டமிட்டு ஒருவரை காணாமல் போக செய்யும் செயலாகவே கருதமுடியும்.

எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் இலக்கியத்திற்கு செய்திருப்பதை இனி எவராலும் அப்படி ஒன்றை செய்ய முடியுமா என்றால், நிச்சயமாக முடியாது என்று சொல்லாம். யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள் என்று நம்புகிறேன். அப்படி வந்தாலும் அவர்களுக்கு நம்மால் நிரூபிக்கமுடியும்.

அப்படி என்ன செய்துவிட்டார் எஸ்.ரா.?

எஸ்.ரா. வின் இரண்டு தொகுப்புகள் முக்கியமானது. நூறு சிறந்த சிறுகதைகள் மற்றும் உலக சினிமா பற்றிய தொகுப்பு.

நீங்கள் பெரிய துணிக்கடைக்கோ அல்லது பல மாடிக்கட்டிடத்திற்கோ சென்றீர்கள் என்றால் வாசலில் ஒருவர் நின்று உங்களுக்கு ஒரு வழிகாட்டியை வழங்குவார். அதில் எந்தெந்தா தளத்தில் என்னென்ன உள்ளது என இருக்கும். அப்படி இலக்கிய உலகத்திற்கும் உலக சினிமா உலகத்திற்குள்ளும் நுழைய விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த இரு நூல்களும் அமையும். சினிமாவை பற்றியும், இலக்கியத்தை பற்றியும் இந்த நூலகள் தான் எழுதியுள்ளாரா என்றால் இல்லை, இது வெறும் துவக்கம் தான்.

சினிமா பற்றிய நூல்கள்:

1. காட்சிகளுக்கு அப்பால்

2. குற்றத்தின் கண்கள்

3. நான்காவது சினிமா

4. பறவை கோணம்

5. சாப்ளினுடன் பேசுங்கள்

6. அயல் சினிமா

7. சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்

இலக்கிய அறிமுக நூல்கள்:

1. உலகை வாசிபபோம்

2. கதாவிலாசம்

3. நிலவழி

4. நாவலெனும் சிம்பொனி

5. நம் காலத்து நாவல்கள்

6. வீடில்லாப் புத்தகங்கள்

7. வாசக பர்வம்

8. வாக்கியங்களின் சாலை.

9. காப்கா எழுதாத கடிதம்

ஜன்னலை திறந்து ஓவியங்களை காண்பித்தவர் எஸ்.ரா. ஓவியங்கள் மேல்தட்டு மக்களின் கலை என எப்போதும் ஒரு கருத்து நிலவிவருகிறது. பிகாஸோ முதல் வான்கா வரை முக்கியமான பல ஓவியர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். என்னதான் இனையத்தில் கொட்டிக் கிடந்தாலும் நமக்கு யாராவது ஒருவர் சொன்னால் ஒழிய தெரிந்து கொள்வது இயலாது. எல்லாராலும் ஏகலைவனாக முடியாதே.

ஓவியங்களை பற்றிய நூல்கள்:

1. கோடுகள் இல்லாத வரைப்படம்.

2. சித்திரங்கள் விசித்திரங்கள்

3. பிகாசோவின் கோடுகள்

எஸ்.ரா வும் ரஷ்ய இலக்கியமும்:

எஸ்.ரா. தன்னுடைய எல்லா உரைகளிலும் தவறாமல் குறிப்பிடுவது தான் ரஷ்ய இலக்கியத்தை படித்து
வளர்ந்தவன். ரஷ்ய இலக்கியமே தன்னை வளர்த்ததாக கூறுவார். ரஷ்ய இலக்கியதின் மேல் அவர் அளவுக்கடந்த பற்று வைத்திருக்கிறார். டால்டாய், செக்கோவ், தஸ்தாவிஸ்கி, துர்கனேவ் என பலரை பற்றி எழுதியும் பேசியும் உள்ளார்.

ரஷ்ய இலக்கியத்திற்கு ஒரு காலத்தில் தமிழகத்தில் பெரும் வரவேற்பு இருந்தது. அது அப்படியே மெல்ல மங்கத்தொடங்கியது. அதன் பிறகு பங்கேற்கும் மேடை தோறும் ரஷ்ய இலக்கியத்தை பற்றி பேசி அதற்கு மீண்டும் உயிரூட்டினார். ரஷ்ய நாவலாசிரியர்கள் மற்றும் இலக்கியத்தை பற்றிய அவரின் பல உரைகள் யூடியுப்பில் உள்ளன. மேலும் அவரின் உலக இலக்கிய பேருரைகள் குறுதகடுகளாக கிடைக்கிறது.

ரஷ்ய இலக்கிய நூல்கள்:

1. எனதருமை டால்ஸ்டாய்

2. செகாவ் வாழ்கிறார்

மேலும் பல படைப்புகளை பற்றிய அறிமுக நூல்களை எழுதியுள்ளார். இவையில்லாமல் பயணம், வரலாறு, சமயம் என பலவற்றை பற்றி எழுதியுள்ளார். வழிக்காட்ட அவர் தயாராகவுள்ளார். ஆனால் நாம் தான் அந்த திசை பக்கம் திரும்ப விரும்பவில்லை.

குறிப்பு: இந்த பதிவில் எஸ்.ரா.வின் சிறுகதை மற்றும் நாவல்கள் பற்றி எதுவும் பேசவில்லை. அதை தனியாக தான் பேச வேண்டும் என்று இருக்கிறேன்.

நன்றி
அரிசங்கர்.

கருத்துகள் இல்லை: