5 ஜன., 2021

குட்டிக்கதை

அடம் பிடிக்காம குளிக்கிற 
தாத்தாவைக் குறித்து
பேரன் சொன்னான் அம்மாவிடம்,
தாத்தா சமத்தா குளிக்கிறாருன்னு...!

மரித்துப்போன தாத்தா
குளிப்பது கடைசிக்குளியல்
என்பது தெரியாமல்...!!

மாலை போட்டு 
உட்கார்ந்த நிலையிலிருந்த
தாத்தாவை மல்லுக்கட்டி 
இழுத்துப்பார்த்தான் பேரன்,
வாங்க தாத்தா வாக்கிங் போலாம்னு…

அடுத்த நாள் காரியத்தில்
அழுதபடி கேட்டான்,
தாத்தா எங்கன்னு...?

ஆண்டவன் வீட்டுக்கு போயிருக்காரு
அடுத்த வாரம் வருவாருன்னு
ஆறுதலுக்குச் சொல்லிவைத்தார் அப்பா...!

ஒம்மேல கோவப்பட்டு
அத்தை வீட்டுக்கு போயிருக்காருன்னு
அடக்கமுடியா அழுகையுடன்
சொல்லிப்போனாள்
அம்மா...!!

அம்மாவின் துணை கொண்டு
அடுத்த நாளே எழுதினான் பேரன்,
தாத்தாவுக்கு ஒர் கடிதம்...!

அன்பும் பாசமும் நிறைந்த தாத்தாவுக்கு,
உன் அன்பு பேரன் எழுதுவது...
ஒன்னோட வாக்கிங் ஸ்டிக்
இங்க ஹாலில் மாட்டிகிடக்கு,
இது இல்லாம, 
எப்படி நீயும் வாக்கிங் போவ...?

ஒன்னோட மூக்குப்பொடி டப்பா,
உன் மாலை போட்ட படத்துக்கு
முன்னாலே பத்திரமா இருக்கு,
அது இல்லாம, 
எப்படி நீயும் சமாளிக்க போற...?

பேப்பர் படிக்கும்போதெல்லாம்
பேரன் என்னத் தேடுவியே...எங்க
வந்து ஒனக்குத் தர...
நீ விட்டுப்போன மூக்குக்கண்ணாடிய...?

அத்த வீட்டுக்கு போனாலும் 
அடுத்த நாளே பேசுவியே,
அழுதபடி வாட்ஸப்பில் நீயும்,
பத்திரமா வச்சிருக்கேன்...
நீ வந்தவுடன் விளையாட
மொபைலில் ஒரு கேம்மும் தானே...!

வந்துரு தாத்தா வாக்கிங்
போலாம் ரெண்டு பேரும்...
ஒனக்கே கொடுத்துர்றேன்
விளையாட மொபைல...

நீ இல்லாமே, 
இப்போல்லாம்
அப்பா அம்மா வர்ற வரைக்கும் 
அடுத்த வீட்டுல தான்
அதிக நேரம் குடி இருக்கேன்...!!

கருத்துகள் இல்லை: