24 ஏப்., 2021

கவிதை நேரம்

' நூலைப்படி ' பாடலை எழுத எவ்வளவு
  நேரம் எடுத்துக்கொண்டீர்கள் ? 
 பாடலைப் படித்துவியந்த பலர் 
 பாவேந்தரிடம் கேட்டபோது , 
 அவர் சொன்ன பதில் :
   " நீங்கள் படிக்க எடுத்துக் கொண்ட
     நேரம் எவ்வளவோ , நான்
     எழுத எடுத்துக்கொண்ட 
     நேரமும் அவ்வளவே! "
~~~~~~~~~~~~~~~~~~~~~~
============================
            - பாவேந்தர் பாரதிதாசன் 

      நூலைப் படி - சங்கத்தமிழ்
      நூலைப்படி - முறைப்படி
      நூலைப்படி

காலை யில்படி கடும்ப கல் படி
மாலை இரவு பொருள்ப டும்படி 
                                 ( நூலைப் படி )
கற்பவை கற்கும்படி
     வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டும் அப்படிக்
    கல்லாதவர் வாழ்வ தெப்படி ? 
                                 ( நூலைப்படி )
அறம்படி பொருள் படி
    அப்படியே இன்பம் படி
இறந்ததமிழ் நான்மறை
     பிறந்த தென்று சொல்லும்படி 
                                 ( நூலைப்படி )
அகப்பொருள்படி அதன்படி
    புறப்பொருள்படி நல்லபடி
புகப்புகப் படிப்படியாய்ப் 
    புலமைவரும் என்சொற்படி 
                                ( நூலைப்படி )
சாதிஎன்னும் தாழ்ந்தபடி
    நமக்கெல்லாம் தள்ளுபடி!
சேதிஅப்படி  தெரிந்துபடி
    தீமை வந்திடுமே மறுபடி
                                ( நூலைப்படி )
பொய்யிலே முக்காற்படி
     புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
     வைத்துள்ள நூல்களை ஒப்புவதெப்படி?
                                ( நூலைப்படி )
தொடங்கையில் வருந்தும்படி
      இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
      ஆகும் என்ற ஆன்றோர்சொற்படி 
                               ( நூலைப்படி )

( குயில் இதழ் :  30.12.1958 )
 இசை: ' யதுகுலகாம்போதி '

                - சூலூர் பாவேந்தர் பேரவை

கருத்துகள் இல்லை: