24 ஏப்., 2021

கட்டுரை நேரம் : வைரஸ் ராஜ்ஜியம் - சுஜாதா


வைரஸ் ராஜ்ஜியம் - சுஜாதா
சுஜாதா 1995-ல் எழுதிய கட்டுரை

அறிவியலின் எட்டாவது கவலை - 'வைரஸ் கிருமிகள் அனைவரையும் அழித்து விடுமா?'

வைரஸ் என்னும் நுண்கிருமி பாக்டீரியாவை விட சிறியது. அதற்கு உயிர் இருக்கிறதா என்றால் உயிர் என்றால் என்ன என்பதைப் பொறுத்தது.

பாக்டீரியா போல வைரஸுக்குத் தன்னைத்தானே இரட்டிப்பு ஆக்கிக்கொள்ளும் தன்மை கிடையாது. 

ஆனால், அதற்கு ஆர்என்ஏ (RNA), டிஎன் ஏ (DNA) உண்டு. சுற்றிலும் கொஞ்சம் ப்ரோட்டீன் வைத்திருக்கிறது. 

இந்தப் ப்ரோட்டீனைப் பார்த்து மனித ஸெல்கள் ஏமாந்து போகின்றன.

 'என்னடா நம்மிடம் உள்ளது போலவே இருக்கிறதே....நம் ஆள்தான் என்று வைரஸ் கிருமியை உள்ளே அழைத்துக் கொள்கிறது. 

உள்ளே நுழைந்ததும் இந்தச் சதிகார வைரஸுக்கு உயிர் வந்துவிடுகிறது.

 மனித ஸெல்லின் ஊட்டச் சக்திகளை பயன்படுத்தி, தன் இஷ்டத்துக்கு வளர்ந்து, ஸெல்களை மெல்ல, மெல்ல அழித்துத் தன் ராஜ்யத்தை நிறுவிக்கொள்கிறது.

வைரஸால் வரும் வியாதிகளுக்கு நேரடியாக நிவாரண மருந்து எதுவும் கிடையாது. தடுப்பு ஊசி (வாக்ஸின்), தடுப்பு மருந்துதான் சாத்தியம். 

பாக்டீரியாவால் வரும் வியாதிகளுக்கு ஆன்டிபயாட்டிக்ஸ் கொடுத்து அந்தக் கிருமியை மேலும் வளர விடாமல் தடுக்கலாம். 

காரணம் - பாக்டீரியா என்பது தனியான அடையாளம் கொண்டது. ஆனால், வைரஸ் அப்படி அல்ல.

 ஸெல்லுக்கு உள்ளே நுழைந்து அட்டகாசம் செய்யும் அரக்கன். அதைக் கொல்ல நம் ஸெல்லையே கொல்ல வேண்டும். 

இதனால் நம்முடைய வைரஸ் தடுப்புச்சக்திகளை அதிகரிப்பதைத் தவிர வேறு எதுவும் வழி இல்லை.

இப்படித்தான் போலியோ, ஃப்ளூ போன்றவை வைரஸால் வருபவை. அதற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டார்கள்.

எய்ட்ஸ் (AIDS) வைரஸால் வரும் மிகப் பயங்கர வியாதி. அதைத் தடுப்பதற்கு மருந்து கண்டுபிடிக்க கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள்

(இந்தக் கட்டுரையை சுஜாதா 1995-ல் எழுதினார். பின்னர், 2001/ 2002 இல் எய்ட்ஸ் நோய்க்கு ஸிடோவுடின் - Zidovudine-  என்ற மருந்தை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பர்ரோஸ் வெல்கம் (Burroughs Wellcome) என்ற பன்னாட்டு மருந்து நிறுவனம் RETROVIR என்ற பெயரில் சந்தையில் அறிமுகப்படுத்தியது.

 இதை, இங்கு, இந்தியாவில் promote செய்தவர்களில் ஒருவன் என்ற முறையில் இந்த மருந்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்.

அறிமுகமான போது கும்பல், கும்பலாக மருத்துவர்களைச் சந்தித்து இந்த மருந்தின் மகத்துவம் பற்றி விளக்கியிருக்கிறோம். இப்போது, இதனுடைய மேம்படுத்தப்பட்ட மருந்து வகைகள் சந்தையில் வந்துவிட்டன).

வைரஸால் வரும் வியாதி மிக வேகமாகப் பரவக்கூடியது. காரணம் - வைரஸ் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும் (Mutation) வேகம் சாதாரண ஸெல்லைவிட மிக அதிகம்.

 ஒரு ஸெல் இரட்டிப்பாகும் போது (தன்னைப் போலவே) படியெடுப்பதில் நூறு கோடி முறைக்கு ஒரு தடவைதான் பிழை ஏற்படும். 

வைரஸ் கிருமியின் இரட்டிப்பில் அப்படியில்லை. மிக அதிகமாகப் பிழைகள். இரண்டாயிரத்துக்கு ஒரு முறை பிழைபட்டு புதிய வைரஸ் வந்துவிடும்.

 இதனால், மனித இனம் புதுப்புது வைரஸ்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. 

உதாரணமாக, இன் ஃப்ளூவன்ஸா வுக்கான வைரஸ் வருடாவருடம் வேஷம் மாறுகிறது. 

புதுப்புது தடுப்பூசி தொடர்ந்து தேவையாக இருக்கிறது.

எய்ட்ஸ் எப்படி வந்தது என்பது பற்றி பல கருத்துக்கள் உள்ளன.

ஆப்ரிக்காவில் உள்ள ஒரு குரங்கில் இருந்து வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். அது மனிதனுக்கு வந்தது எப்படியென்றால், ஏதாவது எய்ட்ஸ் குரங்கைக் கொன்று தோல் உரிக்கும் போது கத்திபட்டு ரத்தம் கலந்திருந்தால் போதும், வைரஸ் மனிதனின் உள்ளே புகுந்திருக்கலாம் என்கிறார்கள். 

சென்ற நூற்றாண்டில் அதிகப் பயணம் இல்லாததால் இந்த வியாதி உலகம் முழுக்கப் பரவுவதற்குச் சாத்தியக் கூறுகள் கம்மியாக இருந்தன.

சமீபத்தில் (1995-ல்) இபோலா (Ebola) எனும் வைரஸ் Zaire எனும் நாட்டின் முழு மக்கள் தொகையையும் பாதித்தது. எய்ட்ஸ் அதைவிட பயங்கரம். அது பரவுவதற்கு மனித இனத்தின் ஸெக்ஸ், போதைப் பொருட்கள் சம்பந்தமான கலப்பால் இது உலகம் பூரா பொதுவானது. 

இந்தியாவில் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை எய்ட்ஸ் பரவியதற்கு முக்கிய காரணம், நம் நேஷனல் பெர்மிட் லாரிகளும் வழியில் பாயா, குஸ்காவுடன் கிடைக்கும் சந்தோஷங்களும் என்கிறார்கள்.

எய்ட்ஸ் வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உலகம் முழுவதையும் மனிதன் ஆக்கிரமிப்பதற்கு முன் எய்ட்ஸ் கிருமி ஆக்ரமித்து மனித இனமே அழிந்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்

(இவ்வாறு ஆகாமல் பல நாட்டு அரசுகள் முனைப்பாக எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் விடாமல் பரப்பியதால் எய்ட்ஸ் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துவிட்டது).

நோபல் பரிசு பெற்ற ஜோஷுவா லெடர்பெர்க் (Joshua Lederberg) சொன்னது: "உலகை ஆக்கிரமிப்பதில் நமக்கு ஒரே ஒரு போட்டி வைரஸ்தான்."மனித இனம் பிழைப்பது முன் நிச்சயித்ததல்ல.

(தற்போதைய கொரானா அச்சுறுத்தலை நினைக்கும் போது சுஜாதாவின் இந்த வார்த்தை மண்டையில் அடிக்கிறது).

அடுத்த முறை ஓட்டல்களில் தனியாக இருக்கும்போது வீட்டுக்கு போன் போட்டு பெண்டாட்டி, பிள்ளைகளுடன் பேசிவிட்டு, ஒரு மெகா சீரியலையும் பத்து நிமிஷம் பார்த்து விடுங்கள் - அத்தனை ஆசையும் அடங்கிப்போகும்.

கருத்துகள் இல்லை: