தேவை ஓடிபி....
-சிறுகதை
——
சிவராமன் அரசு அதிகாரியாக ஓய்வு பெற்றார். அவருக்கு சேர வேண்டிய பி. ஃஎப், கிராச்சுவிடி, கம்முடேஷன், லீவ் என்காஷ்மென்ட், இத்யாதி நாளாவட்டத்தில் வங்கி அக்கவுண்டுக்கு வந்து சேர்ந்தது. அரை கோடிக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். வானில் பறப்பது போல உணர்ந்தார்.
வசிப்பது 700 சதுர அடி ஃபிளாட்டில்தான் ஆனாலும்
சொந்த வீடு எனபதால் வாடகை மிச்சம்..மாசா மாசம் பென்ஷன்
60 ஆயிரம் வரும் எனபதால் நோ டென்ஷன். மாதாந்திர செலவுக்கு ( காரை மெயின்டெயின் செய்யும் செலவையும் சேர்த்து )
தாராளமாக போதும்.
இந்த பணத்தை ரிஸ்க் இல்லாத வண்ணம் மியுசுவல் பண்டிலும்
வங்கி டெபாசிட்டிலும் பிரித்து போடவேண்டும். கொஞ்ச நாளாகட்டும்...அதுவரை சேமிப்புக்கணக்கிலேயெ இருக்கட்டும்
இவர் ஓய்வு பெறுவதை மோப்பம் பிடித்த இஷ்ட மித்திர பந்துக்கள் உடனே நிதி வேண்டி கருணை மனுக்களை ஈமெயில் வாட்ஸப்,
எஸ் எம் எஸ், நுணுக்கி எழுதிய போஸ்ட் கார்ட் , இனலன்ட் லெட்டர், ஏ4 சைஸ் மனு இவற்றின் மூலம் அனுப்பலானார்கள்.
மகளின் திருமணம், மகனின் கல்வி, எண்சாண் உடம்பில் இருக்கும் ஏராளமான நோய்களுக்கான சிகிச்சை, இப்படி காரணங்களை சொல்லி..
சிவராமனா கொக்கா?
இந்த பங்காளிகளூக்கு
இப்படி பதில் அனுப்பினார்:
'' அன்புடையீர்,
ஒய்வு பெற்றதால் எனக்குக் கணிசமான தொகை கிடைக்கும் என்பது என்னமோ உண்மைதான், ஆனால் நான் ஏற்கெனவே ஆபீசில் வாங்கியிருந்த கார் லோன் ஹவுசிங்க் லோன்,பி எஃப் லோன் இதெல்லாம் போக அற்ப சொற்ப தொகைதான் கையில் கிடைத்தது. அது எனக்கே போதுமா என்று தெரியவில்லை. இதனால் உதவ மனமிருந்தும் கைவசம் காசு இல்லை. என்னை மன்னிக்கவும்''
மேற்படி நபர்களை கையோடு போனில் பிளாக் செய்தார்.
அடுத்து தன் வங்கி அக்கவுண்டை மனைவியின் பெயரை சேர்த்து ஜாயின்ட் அக்கவுண்டாக மாற்றினார்.
தனக்கு ஏதாவது ஆனாலும் ஃ பாமிலி பென்ஷன் அக்கவுண்டில் வந்துவிடும்.
அவளிடம் தமாஷாக சொன்னார் : இந்த ஜாயின்ட் அக்கவுண்டில் இருக்கும் பாதி பணம் என்னுது..
பாதி உன்னுது. புரியுதா?''
புரிந்தாற்போல அலமேலு
தலையை ஆட்டினாள்.
அடுத்து மனைவிக்கு
நெட் பாங்கிங்க் செய்வது
குறித்து சொல்லிக் கொடுத்தார்.
அக்கவுண்டில் லாக் இன் செய்து நுழைந்து பண பரிமாற்றத்துக்கான பின் நம்பரையும் அடுத்து மொபைலில் வரும் ஓடிபியையும் போடுவது எப்படி என்றெல்லாம் சொல்லித் தந்தார், ஒரு அவசரத்துக்காக அவள் தெரிந்துகொள்வது நல்லதுதானே என்று நினைத்ததால்...!
''அலமேலு..ஒண்ணு மட்டும்
ஞாபகம் வச்சிக்க. பாஸ்வர்டும்
ஓடிபி என்பதும் ரொம்ப முக்கியம். ரகசியம்.....யாருக்கும் சொல்லவே கூடாது. புரியுதா ...மறந்துடாதே. போன்ல யாராவது கேட்டா
போனை கட் பண்ணிடு'' என்றார்.
ஒரு நாள் கோவிலுக்கு
போய் விட்டு வந்தார்.
வந்ததும் அலமு சொன்னாள்
"ஏங்க, பேங்குலேருந்துபோன் வந்தது 'உங்க அக்கவுண்டில்
புது சாஃப்ட்வேர் போட்டிருக்கோம். அதுக்கான ஒரு ஓடிபி மொபைலில் வந்திருக்கும் ..அதை ஷேர் பண்ணுங்க' ன்னு கேட்டாங்க.''
சிவராமன் வயிற்றில் அரை கிலோ தும்கூர் புளி கரையலாயிற்று.
'பேங்குலேருந்துதான் போன் வந்ததுன்னு எப்படி தெரியும்?'' என்றார் கலவரத்துடன்
“அவங்களே சொன்னாங்களே?''
'' உனக்கு அறிவு இருக்கா... யாராவது சொன்னா நம்பிடுவியா? ''
ஒரு முறை மூச்சை நன்றாக இழுத்துவிட்டு கேட்டார்
''ஓடிபியை சொல்லிட்டியா?''
''ஆமாங்க...வெறும் சாஃப்ட்வேர் அப்டேஷந்தானே, மணி டிரான்ஸ்பர் இல்லையே அதனால ஓடிபியை ஷேர் பண்ணிட்டேன்.''
நெஞ்சைப் பிடித்தபடி
சோபாவில் சாய்ந்தார்.
' அம்பது லட்சம்டி .....
மினிமம் பாலன்ஸ் கூட வைக்காமல் வழித்து எடுத்திருப்பாங்களே''
என்று முணுமுணுத்தபடி.
அலமேலுவின் எட்டு பவுன் பிஸ்மார்க் தாலி செம ஸ்டிராங்க் என்பதாலும், சிவராமன் பரம்பரையில் யாருக்கும் ஹார்ட் அட்டாக் ஹிஸ்டரி இல்லாததாலும் இந்த சூழ்நிலையிலும் யாருக்கும் வந்திருக்கூடிய இன்ஸ்டன்ட்
ஹார்ட் அட்டாக், ஸ்டிரோக் இவற்றிலிருந்து தப்பினார்.
அவருடைய ஈஸிஜியை மட்டும்
அந்த க்ஷணத்தில் எடுத்திருந்தால் அது உக்ரைன் யுத்தத்துக்கு பிந்தைய ஷேர் மார்க்கெட் கிராப் போல இருந்திருக்கும் என்பது மட்டும் திண்ணம்.
ஒரு காபியை சூடாக பருகி ஆஸ்வாசப் படுத்திக் கொண்டு டெஸிபல் சற்றே குறைந்த ஹார்ட் பீட்டுடன் மொபைலில் லாக் இன் செய்துகணக்கைப் பார்த்தார்.
என்ன ஆச்சரியம்....
50 லட்சம் ரூபாய் அக்கவுன்டில் சமர்த்தாக அமர்ந்திருந்தது....
அவரைப் பார்த்து ஹாய் சொன்னது. அப்பாடா... பெருமூச்சை வெளியேற்றினார். ஆபத்து நீங்கிவிட்டது. ஓடிபி வந்து நெடுனேரம் ஆனதால் இனிமேல்
அது காலாவதியாகியிருக்கும்.
அதை யாரும் உபயோகிக்க முடியாது என்பதால் நிம்மதி அடைந்தார்.
மொபைலில் ஓடிபியைப் பார்த்தார்
'அலமேலு ... 2422 அப்படின்னு
ஓடிபி வந்திருக்கு...அதை கரெக்டா ஷேர் பண்ணீயா? இல்லை ஏதாவது தப்பான பிகர் சொன்னியா?''
''நம்ம அக்கவுண்ட் ஜாயின்ட் அக்கவுன்ட் இல்லையா. பாதி பாதின்னு சொன்னீங்களே...
அதனால் போன்ல வந்த ஓடிபி நம்பரை ரெண்டால வகுத்து
என் ஷேரான 1211 மட்டும் சொன்னேங்க.. அவங்ககூட
தப்பா இருக்கேன்னு திருப்பி திருப்பி கேட்டாங்க. நான் அந்த நம்பரைதான் மறுபடி சொன்னேன். போனை வச்சுட்டாங்க...
நான் செஞ்சது தப்பாங்க ?''
''லைஃபுல முதல் தடவையா
ஒரு தப்பை கரெக்டா பண்ணியிருக்கே ...அதனாலே
நம்ம பணம் தப்பிச்சது........
சரி கிளம்பு...''
''எங்கே..?''
''உனக்கு தனியா ஒரு புது மொபைலும் சிம் கார்டும் வாங்கித் தரேன்.. இன்னொரு தடவை இந்த ஓடிபி ரிஸ்க் எடுக்க முடியாதும்மா....'' என்றார் புன்முறுவலுடன்...
🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக