15 மார்., 2023

நூல் நயம்

"புனித பிரான்சிஸ் சவேரியார்"
புனித மரியன்னை அச்சகம்.
விலை ரூபாய் 20 மொத்த பக்கங்கள் 50

#இது ஒரு சரித்திர நூல் 
# வாழ்க்கை வரலாறு என்று கூறி விடலாம்.

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் "
இது திருக்குறள் .

      விவசாயத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவ்வப்போது புத்தூட்ட பயிற்சி அளிப்பார்கள். ஒருமுறை குடுமியா மலைக்கு பயிற்சி பெற சென்றிருந்தபோது வழக்கம் போல தொழில்நுட்பம் குறித்து பேசாமல் வேறு பேசலாமா என்று கேட்டார் அங்கிருந்து அதிகாரி .சரி என்றதும் அவர் மேற்கண்ட குறளுக்கு  விளக்கம் கொடுத்தார். மூன்று மணி நேரம் தொடர்ந்து விளக்கம் கொடுத்தார். மிகவும் அருமையான ஒரு விளக்கம்.

       எவன் ஒருவன் தன்னை உணர்ந்து அடக்கமாக இருக்கின்றானோ அவனுக்கு அழிவில்லை என்பதின் சாரம் அது அந்த குறள்.

       புத்த பெருமானுக்கு அழிவில்லை உடல் அழிவில்லை ஆன்மா அழிவில்லை .
      ஸ்ரீ ராமானுஜருக்கும் அது போலவே உடல் அழிவில்லை ஆன்மா அழிவில்லை .
காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது .

       அது போன்றதே இந்தியாவிற்கு சேவை செய்ய வந்த பிரான்சிஸ் என்கிற மத போதகருக்கு தன்னை உணர்ந்து ஏழை எளிய நோயாளி பெரு நோய் மக்களுக்கு அருவருப்பு படாமல் அசுசைப்படாமல் ஒரு எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சேவை செய்ததன் காரணமாக அவரது உடல் இன்றும் அழியாமல் அப்படியே இருந்து வருகிறது .

        கோவாவில் உள்ள அந்த கிறிஸ்துவ மத ஆலயத்திற்கு சென்று பார்த்தோம் .உயரமான மாட பீடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருக்கிறது .ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவரது உடல் வெளியே வெளியே கொண்டு வந்து எதிர்புறம் உள்ள ஒரு பழைய சர்ச்சில் பார்வைக்கு வைக்கப்படும். புதிதாக தயாரிக்கப்படும் ஒரு பெட்டியில் அவரது உடல் மாற்றி வைக்கப்படும் .இது ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் .
அவரது வரலாறு குறித்து சுருக்கமாக பார்ப்போம் இந்த புத்தகத்தின் வாயிலாக.

###

         1506 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி ஸ்பெயின் தேசத்தில் பிரான்சிஸ் சவேரியார் பிறக்கின்றார் .சவேரியார் என்ற வரலாற்று சிறப்பு பெற்ற கோட்டையில் பிறந்ததால் அவர் பிரான்சிஸ் சவேரியார் என்று அழைக்கப்பட்டார் .அவரின் இரண்டு அண்ணன்கள் ராணுவ வீரர்கள் வீரமும் உறுதியான உள்ளமும் கொண்டவர்கள்.
சவேரியார் கோட்டையை எதிரிகளால் தகர்க்கப்படவே பிரான்சிஸ் அவர்களின் தந்தை இறந்துவிடவே தாயார் குடும்ப பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார் .

     சவேரியார் மல்யுத்தம் குதிரைச் சவாரி நீச்சல் ஈட்டி எறிதல் போன்றவற்றில் மிகவும் ஆர்வம் காட்டினார் .எத்தனையோ பரிசுகளை வென்றார் .படிப்பிலும் முதன்மை வகுத்தார். அவருடைய தாய் இவருக்கு கடவுள் பக்தியை ஊட்டினார் ஒழுக்கமும் கற்பித்து, பாரிஸ் மாநகரத்தில் உள்ள பெயர் பெற்ற கல்லூரியில் பட்டம் பெற்றார் .கல்லூரியில் உடன் பயிலும் மாணவர்கள் மதுபான கடைகளுக்கு சென்றாலும் இவர் அங்கு செல்லாமல் அவர்களை நல்வழிப்படுத்தினார் .
      ஒழுக்கத்திலும் படிப்பிலும் உறுதிப்பூண்டு இரவும் பகலும் உழைத்தார் .உயர்ந்த மதிப்பெண் பெற்றார் .இறுதியில் அங்கேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டார் .மாணவரிடம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது .

        இதனால் அவருக்கு தற்பெருமை உண்டாகியது. பொருளுக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டார். இவற்றை அடைவதே தன் வாழ்க்கையின் நோக்கமாக்கினார் அ.வரது அறையில் ஒரு முன்னாள் போர் வீரர் மாணவர் கால் உடைந்தவர் தங்கி இருந்தார் .அவர் மனமாற்றம் அடைந்து கடவுள் பாதையில் சென்றார் .அவர் பிரான்சிஸ் சவேரியாரிடம் ,"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கி கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பார் என்றால் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன ?"
என்னும் கிறிஸ்துவின் கூர்மையான கேள்வியை அடிக்கடி  கூறி வந்தார். இதனால் மனமாற்றம் ஏற்பட்டது .இதன் காரணமாக கடவுளுக்காகவே வாழ வேண்டும் என்னும் உறுதி பூண்டு வேறு சிலரும் நண்பர்களாய் சேர்ந்து ஒருநாள் பாரிஸ் நகருக்கு அருகே இருந்த மலைக்குச் சென்றனர் .தங்கள் உறுதியின் அடையாளமாக தங்கள் நல்ல உடைகளை கலைந்து விட்டு துறவியின் அங்கி அணிந்தனர்.
        மலை உச்சியில் இருந்த ஆலயத்தின் குரு முன் நிலையில் இவர்கள் எல்லோரும் கிறிஸ்துவுக்கு தம்மை அர்ப்பணித்தினர்.
இந்த நிகழ்வில் தான் இயேசு சபை உருவானது.
அதன் பின் இஞ்ஞாசியரும் அவருடைய தோழர்களும் ரோமாபுரியை நோக்கி புறப்பட்டனர். நடுங்கும் குளிரும் பாதை முழுவதும் விழுந்து கிடந்த பனிக்கட்டிகளும் அவர்களின் நடை பயணத்திற்கு தடை இட்டன. சவேரியாருக்கோ கடுமையான காய்ச்சல் இருந்தாலும் உறுதியோடு  ரோமபுரியை அடைந்ததும் இஞ்ஞாசியரும்  அவரது தோழர்களையும் திருத்தந்தை வரவேற்று அவர்களுக்கு குருத்துவப் பட்டம் அளித்தார் .

      சவேரியார் 40 நாட்கள் தியானம் செய்தார் .ஜபம் உபவாசம் மற்றும் தபசுக்கள் பல செய்து அந்த 40 நாட்களையும் கழித்தார் .அதன் பின் தன் முதல் திருப்பலியை நிறைவேற்றினார் .அப்போது அவர் இதயம் மகிழ்வில் துடித்தது .கண்கள் ஆனந்த கண்ணீர் வடித்தன.

       மருத்துவமனைக்குச் சென்று உடலெல்லாம் சீழ் வடிந்து துர்நாசம் வீசிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார் .

      ஒரு நாள் ஒரு இரவு ஒரு இந்தியனை தனது முதுகில் சுமந்து செல்வது போல கனவு கண்டார். அடுத்த நாள் இஞ்ஞாசியர் சவேரியாரை அழைத்து நீங்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள் .கிறிஸ்துவின் நற்செய்தி இந்திய மக்களுக்கு எடுத்துரைத்து அவர்கள் வாழ்வு உயர்விற்கு பாடுபடுங்கள் என்று கூறினார் .எனவே இந்தியாவுக்கு புறப்பட்டு வந்தார் .
     மறுநாள் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் உள்ள லிஸ்பனுக்கு புறப்பட்டார் .பயணத்திற்கு குதிரை கொடுக்கப்பட்டும் அவர் நடந்து சென்றார்.

     அந்த வருடம் நான்கு கப்பல்கள் இந்தியாவிற்கு புறப்பட இருந்த சமயத்தில் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த பிரசங்க மேடையில் சவேரியார் மக்களுக்கு போதித்தார் .கப்பல் புறப்பட்டது 

    ஆப்பிரிக்கா கண்டத்தை சுற்றி செல்ல வேண்டி இருந்தது .
 இந்தியாவை அடைவதற்கு ஓராண்டு காலம் பிடிக்கும். வீசுகின்ற புயலை சமாளித்து உயிரோடு திரும்பி வருவது மிகவும் துர்லபம் .கப்பலில் உள்ள மக்களுக்கு தினமும் உபதேசம் செய்து வந்தார் .பணிவிடை செய்து வந்தார் .மாலுமி தூங்கி விடவே கப்பல் ஓட்டும் பணியையும் மேற்கொண்டார் .கப்பல் லிஸ்பனை விட்டு புறப்பட்டு ஓராண்டு முடிந்த பிறகு கோவா வந்து சேர்ந்தது .

      அன்று இரவு பல மணி நேரம் அவர் ஜெபம் செய்தார் .மறுநாள் அவரது அலுவலை ஆர்வத்துடன் தொடங்கினார் . வீடு வீடாக சென்று ஜெபித்தார் .நோயாளி மக்களுக்கு பணிவிடை செய்தார்.

      ஒருவன் தன் பாவ வாழ்வை விட்டுவிட மறுத்து விட்டான் .எனவே அவர் ஒருநாள் காட்டுக்குள் சென்று தன் அங்கியை களைந்து விட்டு அவன் மனம் திருந்துவதற்காக தன்னையே சாட்டையால்  அடித்துக்கொண்டு ஜெபித்தார் .ஒளிந்து இருந்து பார்த்த அந்த மனிதன் உள்ளம் உருகி மாறிவிட்டது .

       சவேரியார் கோவாவில் சில மாதங்கள் தங்கி இருந்த பிறகு கன்னியாகுமரியில் இருந்து மன்னார் தீவு வரை உள்ள மீனவர் வாழும் பகுதிகளுக்கு சென்றார் .அங்குள்ள பரத குல மக்கள் மீன்பிடிப்பதிலும் முத்து குளிப்பதிலும் திறமையானவர்கள் .அவர்களுக்கு உபதேசம் செய்தார் .ஜெபம் செய்தார் .இயேசுவின் நற்செய்தியை எல்லோரும் அறிய வேண்டும் அன்பு அவர் காட்டிய அன்பு நெறியில் அவர் நடக்க வேண்டும் என்று தனியாக ஆவலுடன் அவர் இன்னல்களையும் இடையூறுகளையும் மேற்கொண்டார்.

        எப்போதும் இறைவனோடு இணைந்து வாழ்ந்த சவேரியார் வழியாக இறையாற்றல் வெளிப்பட்டது.

        ஒரு முறை மரணப்படுக்கையில் இருந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று பிரார்த்தனை செய்தார் .அவள் பிழைத்துக் கொண்டாள் .
       அதேபோல் தண்ணீரில் மூழ்கி இறந்து இறந்துவிட்ட தன் மகனை ஒரு தாய் தன் கைகளில் ஏந்தி அவர் முன் மண்டியிட்டு கண்ணீர் விட்டு கதறினாள்.அவர் உருக்கமாக ஜெபித்து சிலுவை அடையாளம் இட்ட உடனே அந்த சிறுவன் கண்விழித்தான்.
இப்படி பல அதிசயங்கள் அவர் நடத்திக் காட்டினார்.

      ஒருமுறை படகில் பயணம் செய்யும்போது புயல் ஒன்று எழுந்தது .உடனே அவர் தன் பாடுபட்ட சிலுவையை எடுத்து மன்றாடினார் .அப்போது சிலுவை அவரது கையில் இருந்து நழுவி கடலுக்குள் விழுந்து விட்டது .வருத்தமாக கடற்கரையில் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு நண்டு அப்பாடுபட்ட சுரூபத்தை பற்றி கொண்டு தன்னிலிருந்து கரையை நோக்கி ஊர்ந்து வந்தது .

       தேள் பாம்பு போன்றவற்றால் தீண்டப்பட்டோரும் புலி போன்ற கொடி விலங்குகளால் தாக்கப்பட்டவர்களும் அவரிடம் குணம் பெற்றார்கள்.

        பிறகு திருவாங்கூர் சென்று மன்னரை சந்தித்து ஜெபம் செய்யவும் மக்களுக்கு போதனை செய்யவும் அனுமதி பெற்று அவர் பணி செய்தார்.

      1546 ஆம் ஆண்டு மலாக்கா தீவுக்கு பயணமானார் அங்கிருந்து மோரோ தீவுகளுக்கு சென்ற வண்ணம்  ஏழை மக்களுக்கு உதவிட திட்டமிட்டார் .அந்த தீவுகளில் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர் அவர்களுக்கு ஜெபம் செய்து பணிவிடை செய்தார்

      சவேரியார் ஜப்பானுக்கு செல்ல நினைத்தார் .அந்த நேரத்தில் மலாக்காவில் தொற்றுநோய் பரவி எண்ணற்ற மக்கள் அதற்கு பலியானார்கள் .எனவே தனது பயணத்தை நிறுத்திவிட்டு பணிவிடை செய்தார்.

         அதன் பிறகு ஜப்பான் சென்றார் .மன்னரை சந்தித்து தனது நோக்கம் குறித்து கூறி அனுமதி பெற்றார் .அங்கிருந்த மக்களுக்கு உபதேசம் செய்தார் ஜபம் செய்தார்.

     மன்னனுக்கு ஒரு சந்தேகம் .மனிதன் இறந்த பின் அவனுக்கு என்ன நிகழும் என்ற கேள்வி இருந்தது .அந்த கேள்விக்கு விடையாக சவேரியார் ,"நம் உடல் மட்டும் அழியுமே தவிர ஆன்மா அழியாது .நல்லவரின் ஆன்மா விண்ணகத்தில் நிலையான வாழ்வு பெறும் .தீமை செய்தவரின் ஆன்மா நரகத்தில் தண்டனை பெறும் ",என்று விளக்கினார். மன்னனுக்கு இந்த பதில் மன நிறைவு தந்தது.

     சீனாவுக்கு செல்ல முடிவு செய்தார் .சீனாவுக்குள் நுழைய கூடாது என்று கண்டிப்பான தடை உத்தரவு இருந்தது .அதை மீறுபவர்கள் கொடிய தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் .இருந்த போதும் சீனா நாட்டிற்கு அருகில் உள்ள சான் சியான் தீவை அடைந்தார்.

        அங்கு சவேரியார் நோயற்றார் .அந்தோணி அவருக்கு உடனிருந்து பணிவிடை புரிந்து வந்தார் .சவேரியாரின் உடல்நிலை கவலைக்கிடமாயிற்று .பிணியும் பட்டினியும் அவரை வாட்டின. பாடுபட்ட சுரூபம் ஒன்றுதான் அவருக்கு ஆறுதல் தந்தது .மணிக்கணக்காய் அதையே பார்த்துக் கொண்டிருப்பார் .தான் செல்ல விரும்பிய சீன நாட்டை நினைத்தார் .அந்த திசையை நோக்கி பாடுபட்ட சுரூபத்தை காட்டி அந்த நாட்டு மக்கள் கிறிஸ்துவை அறிந்து பொதுவாழ்வு பெற வேண்டுமென உருக்கமாக வேண்டினார் .

      1552 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் நாள் தான் இறக்கப்போவது உணர்ந்த சவேரியார் அருள் வடி வீசு முகத்துடன் ஆண்டவரே உம்மையே நம்பி இருக்கிறேன் .என் ஆன்மாவை உம்மிடம் ஒப்படைக்கிறேன் ,"என்று கூறி அமைதியாக உயிர் துறந்தார்.

      அவர் இறந்ததும் அந்தத் தீவில் இருந்த சில மாலுமிகள் அவரது உடலை ஒரு சவப்பெட்டிக்குள் வைத்து உடல் விரைவில் அழிய வேண்டும் என்பதற்காக சுண்ணாம்பு கற்களை அந்த பெட்டியில் பரப்பி கல்லறையில் அடக்கம் செய்தனர் .
       இரண்டு மாதங்கள் கழித்து அந்த மாலுமிகள் அந்தத் தீவில் இருந்து புறப்படும் நேரத்தில் கல்லறையை தோண்டி சவப்பெட்டியை திறந்து பார்த்தனர் .
என்ன ஆச்சரியம் !
சவேரியாரின் உடல் அழியாமல் அப்படியே உயிரோட்டத்துடன் காட்சியளித்தது.

        பின்னர் அவரது உடலை மலாக்காவிற்கு எடுத்துச் சென்றனர் .அப்போது அங்கிருந்த தொற்றுநோய் அவர் உடனே மாயமாயிற்று .
       அதன் பின் கோவாவிற்கு அவரது புனித உடலை எடுத்துச் சென்று அங்குள்ள தேவாலயத்தில் வைத்தார்கள் .

       இன்றும் அவரது உடல் அழியாமல் இருக்கிறது .சவேரியார் இயேசுவை அறிந்தார் .அவரது அன்பின் ஆழத்தை தன் உள்ளத்தில் உணர்ந்தார் .தான் பெற்ற பெருவாழ்வை பிறரும் பெற வேண்டும் எனும் ஆவலோடு பாரத நாட்டிற்கு வந்தார் .தனக்கென வாழாமல் பிறர்க்குரியராளாராய்த் தியாகத்தீயில் பலி ஆனார்.

##₹₹

புனித சவேரியார் வாழ்வில்...

07 ஏப்ரல், 1506.      : பிறப்பு

16 அக்டோபர், 1515.   : தந்தையார் இறப்பு

01அக்டோபர், 1525.  : பாரீஸ் பல்கலைக் கழகப் படிப்பு

15 மார்ச், 1530.       : எம்.ஏ. பட்டம், இஞ்ஞாசியாரோடு தொடர்பு

15 ஆகஸ்ட், 1534.  : முதல் வார்த்தைப்பாடு

24 ஜூன், 1537.         : குருப்பட்டம்

07 ஏப்ரல், 1541:: இந்தியாவுக்குப் புறப்படல்

06 CLD, 1542 :இந்தியா வந்தடைதல் (கோவா)

15 ஏப்ரல், 1549 :ஜப்பான் பயணம்

17 ஏப்ரல், 1552  : சீனா நோக்கிப் பயணம்

ஆகஸ்ட், 1552.   : சான்சியன் தீவில்

03 டிசம்பர், 1552. : இறப்பு

25 அக்டோபர், 1619. : 'அருளாளர்'பட்டம்

12 மார்ச், 1622. : 'புனிதர்' பட்டம்

####

புனித பிரான்சிஸ் சவேரியார்
அருள் வேண்டி மன்றாட்டு.

ஓ அன்பின் ஆண்டவரே.
புனித சவேரியாரை
அன்னை திருச்சபைக்கும்,
குறிப்பாகக் கீழை நாடுகளுக்கும்,
இன்னும் சிறப்பாக இந்தியாவுக்கும் கொடையாகக் கொடுத்ததற்காக
உம்மை வாழ்த்துகிறோம்,

உமக்கு நன்றி கூறுகின்றோம் |

உம் திருமகன் இயேசுவைப் பின்பற்றவும்

அவரது நற்செய்தியைப் பறைசாற்றவும்
அவரைத் தேர்ந்தெடுத்தீர் !
தன்னார்வத்தோடும் தாராள மனத்தோடும்
அவ்வழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

முழு மனத்தோடு தம்மை அர்ப்பணித்தார். இறையாட்சிக்காகவே தம் வாழ்வு அனைத்தையும் செலவிட்டார்.

இயேசுவின் மீது அவர் கொண்டிருந்த
ஆழ்ந்த நம்பிக்கை, அசைக்கவியலா அன்பு,
ஆன்ம தாகம், மனோபலம், உற்சாகம், களைப்பறியா நற்செய்திப் பயணம்,
ஆகியவை.... ஆயிரக் கணக்கான ஆன்மாக்களை உம் அரசுக்காக வென்றெடுத்தன !

ஆகவேதான், அன்னை திருச்சபை மூலம்,
அவரைத் திருத்தூதுப் பணி நாடுகளின் பாதுகாவலராக்கியுள்ளீர் !

அவரது பரிந்துரையால்
பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தியுள்ளீர்.

அவரது உடலை அழியாமல் காத்துவருகின்றீர் ! 

புனிதமான அவரது வாழ்வும் பணியும்
எப்போதும் எங்களுக்கு உந்துசக்தியாகட்டும்;
உயர் சாதனைக்கு வழிகாட்டட்டும்;
உம்மை நோக்கி எம்மை என்றும் இட்டுச்செல்லட்டும்,

ஆமென்,

*2024 டிசம்பர் மாதம் பிரான்சிஸ் சவேரியார் அவர்களின் பூத உடல் மீண்டும் பொதுமக்கள் காட்சிக்கு மீண்டும் வைக்கப்படும்*

*உலகிலேயே இரு கல்லறைகள் தான் திறந்த நிலையில் உள்ளன. ஒன்று எருசலேம் யேசுவின் கல்லறை, மற்றொன்று மலேஷியா மலாக்கா தீவில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் கல்லறை*

நன்றி :
திரு கருணா மூர்த்தி 
மற்றும் 
முகநூல்

கருத்துகள் இல்லை: