21 மே, 2023

நூல் நயம்

"அடிமையின் காதல் ."
ரா கி ரங்கராஜன் எழுதியது .
வி.கே. புக்ஸ் இன்டர்நேஷனல் . முதல்பதிப்பு 2012 .விலை ரூபாய் 205    .மொத்த பக்கங்கள் 456..

         ரா. கி. ரங்கராஜன் ,ஒரு  எழுத்தாளர் மற்றும் இதழாளர். வரலாற்றுப் புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார்.

            இவர் 1500-க்கும் மேற்பட்ட கதைகளையும் , 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம் ஆனந்த விகடன் முதலான இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன. இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்தன. பல படைப்புகள் சின்னத் திரையிலும் இடம் பெற்றுள்ளன. 

இளம் எழுத்தாளர்களுக்குக் கதை எழுதும் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் எப்படிக் கதை எழுதுவது? என்ற வகுப்பினையும் தான் ஒருவராகவே நடத்தி வந்தார்.

####₹₹

        முன்னுரையில் ரா.கி .ரங்கராஜன் அவர்கள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார் .அதனை படித்தால்  இந்த கதையின் சுருக்கம் தெரிந்துகொள்ளலாம் .
        வரலாற்றை பின்னணியாக வைத்து பல கட்டுரைகள் எழுதிய 
தீ நா.சுப்பிரமணியம் ,"வெள்ளைக்காரன் சென்னையில் குடியேற காலம் ரொம்ப சுவாரசியமானது .அதற்கான தகவல்களும் வண்டி வண்டியாக  கன்னிமரா நூலகத்தில் கிடைக்கும் .அதை வாசித்து எழுதி", என்று எனக்குக் கட்டளையிட்டார் .

        சென்னை கார்ப்பரேஷன் மூன்றாவது நூற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் ஒரு கட்டுரையில் சென்னை நகரில் அடிமை வியாபாரம் நடந்ததாக ஒரு கட்டுரையைப் படித்தேன் .
   எடிட்டர் எஸ்ஏபி அவர்கள் The Man from Rio என்ற ஆங்கில படத்தை பார்த்துவிட்டு வந்து ,அதில் வரும் உல்லாசமான உற்சாகமான ஆபத்துக்களை சிரித்துக்கொண்டே எதிர்நோக்கும் ஹீரோவைப் போல அடிமையின் காதல் கதாநாயகனைப் படைக்கும்படி யோசனை சொன்னார் .
     இவை எல்லாமாகச் சேர்ந்து தான் அடிமையின் காதல் கதாநாயகனுக்கு காஞ்சிபுரத்தான் என்று பெயரிட்டேன் . திமுக கட்சியும் அறிஞர் அண்ணாவும் ஆட்சிபீடத்தில் நெருங்கிக் கொண்டிருந்த சமயம் ஆகையால் காஞ்சிபுரத்தான் என்ற பெயருக்கு மவுசு கூடியது என்கிறார் ரா.கி ரங்கராஜன் அவர்கள் தனது முன்னுரையில்.

##
            குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி.அவர்கள் மீது பெருமதிப்பும் மரியாதையும் கொண்டவன் நான். அவர் எழுதிய அத்தனை புத்தகங்களையும் படித்து விட்டேன் .அவர் படித்த சில புத்தகங்களையும் படித்து இருக்கிறேன் .குறிப்பாக * The Intimate sex lives of famous people *என்கிற புத்தகத்தையும் படிக்க முயன்று இதுவரை முடியாமல் அந்தப் புத்தகம் கிடைக்காமல் தவித்து நிற்கிறேன் .எஸ். ஏ.பி அவர்கள் பார்த்த The Man from Rioதிரைப்படத்தை இன்று ஸ்மார்ட் டிவியில் பார்த்து மகிழ்ந்தேன் .என்ன ஒரு அற்புதமான மனிதர் .அவரை நினைத்து நினைத்து புளங்காகிதம் அடைந்து போறேன்.
####
          இந்தப் புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கருத்தினை படிக்கும்பொழுது ரா.கி. ரங்கராஜன் அவர்களின் உன்னதம் பெருமை தெரிந்து கொள்ளலாம்.
         அந்தக் கால கட்டத்தில் சரித்திர நாவல்கள் அதிகம் படிக்காத ஒரு சிறுவனுக்கு ஞானக்கண் திறந்த மாதிரி இருந்தது அடிமையின் காதல்.     
      இன்றும் என்னை வாசிக்கத் தூண்டும் நாவல் இது .
   காஞ்சிபுரத்தான் வீட்டில் கோபித்துக்கொண்டு புறப்படும் வேளைதொட்டு ,இந்திய ஆங்கிலேய உறவின் கதையின் நடு அத்தியாயத்தில் காஞ்சிபுரத்தான் கதையை கொண்டு போய் கோட்டை வாசலில் முடித்திருப்பார் ரா.கி.ர.
       மனமெல்லாம் வியாபித்த கதை "அடிமையின் காதல்." சரித்திர நாவல்களை படிக்க வேண்டும் என்ற ஆவலை என்னுள் ஏற்படுத்திய முதல் நாவல் அடிமையின் காதல் .மீண்டும் ஒரு தலைமுறையை இது வியக்கவைக்கும் .
      இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தால் ஆங்கிலமே படிக்கும் தமிழரில் சிலர் தமிழ் சரித்திர நாவல்களை படிக்க ஈர்க்கப்படலாம் ,"என்கிறார் கமல்ஹாசன் தனது வாழ்த்துரையில்.
    

#####₹#

             சரித்திரக் கதைகள் சில சமயம் உற்சாகமூட்டுவதாக இருக்கும் ,சில சமயம் சோம்பல் ஊட்டுவதாக இருக்கும் .
          நேற்றைய நிகழ்வு நாளைய சரித்திரம் .
       இதுவரை சாண்டில்யன் முதல் சுஜாதா வரை எத்தனையோ ஆசிரியர்களின் சரித்திர படைப்புகளை படித்திருக்கிறேன் .முதன்முதலாக ரா.கி .ரங்கராஜனின் சரித்திரக் கதையை இப்போதுதான் படிக்கிறேன் .அருமையாக இருக்கிறது.

        மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு தமிழ் தைரியம் கூட்டிக்கிட்டு , காஞ்சிபுரம் வீட்டை விட்டு வெளியேறுகிறான் காஞ்சிபுரத்தான்.

             அவன் பல துறைகளில் வல்லவன், எந்தச் சூழ்நிலைகளையும் சாதூரியத்துடன் அணுகி, வெளியே வரத்தெரிந்தவன். நாயகி 'தாமரை'யைக் காதலிப்பவன். பல வேடங்களில் பின் தொடர்ந்து அவளை ஆபத்திலிருந்து காப்பவன். அடிமையாகி அடிமையின் காதல் கொள்வதுதான் தான் கதை.
       இப்பொழுதுகூட அடிமைகள் விடுவிக்கப்பட்டார்கள் என்கிற செய்தியை செய்தித்தாள்களில் அவ்வப்போது பார்த்துக்கொண்டுதான் வருகிறோம் .
        ஆனால் ஒரு காலத்தில் சென்னை மாநகரத்தில் அடிமைகள் வியாபாரம் நடந்தது என்ற ஒரு சிறுகுறிப்பு மூலமாக அறிந்து கொண்ட ரா.கி. ரங்கராஜன் அவர்கள் இந்த பெரிய சரித்திர நாவலைப் படைத்திருக்கிறார்.

        ஒரு சாதாரண காஞ்சிபுரத்தான் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்து எப்படியெல்லாம் சாகசம் புரிந்து அடிமையாகி பின் விடுதலை வேட்கை கொண்டு ஒரு அடிமையை மீட்டு ,அடிமை தாமரையின் காதலை பெறுகிறான் என்பதுதான் கதை .

      இதன் இறுதிப் பகுதியில் ஆசிரியர் இவ்வாறு எழுதுகிறார்.
  சிப்பாய் ஒருவன் பறையறைந்து உரக்கப் படித்தார்.

      "மாட்சிமை தங்கிய இங்கிலாந்து மன்னருடைய பிரதிநிதியான கிழக்கிந்தியக் கம்பெனியார் இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் கும்பினியாரின் ஆளுகைக்கு உட்பட்ட சென்னை பட்டணம் பிரதேசத்திலும் எழும்பூர் மயிலாப்பூர் திருவல்லிக்கேணி வேப்பேரி புரசைவாக்கம் கிராமங்களிலும் இன்று முதல் யாரும் அடிமைகளை வாங்கவும் விற்கவும் கூடாது என்றும் அப்படி செய்பவர்கள் ஈவு இரக்கமின்றி தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம் .தப்பியோடிய அடிமைகளை திரும்பி பிடிப்பதும் அயல்நாடுகளுக்கு அனுப்புவதும் சட்டப்படி குற்றமாகும் ",என்று முரசு அறிவிக்கிறான்.

        இன்றைய தினத்திற்கு பொருந்தக்கூடிய வாக்கியமாக இறுதி வாக்கியம் : 
       *தோல்வி இரவாகி முடியும் ;வெற்றி பகலாக விடியும் ,*என்று கூறியது காஞ்சிபுரத்தான் விரல்.


கருத்துகள் இல்லை: