"பாரத மாதாவின் கடிதங்கள்:".
வெ. சாமிநாத சர்மா. பூங்கொடி பதிப்பகம் முதல் பதிப்பு 2001 மொத்த பக்கங்கள் 112. விலை ரூபாய் 25.
ஆசிரியர் குறிப்பு:
வெ. சாமிநாத சர்மா தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர், இதழாசிரியர் எனப் பல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று அரசறிவியல் தலைப்புகளில் விரிவாக எழுதினார்.
திருவண்ணாமலை , செய்யாறு வட்டம் வெங்களத்தூர் என்னும் சிற்றூரில் 1895 இல் பிறந்த இவர் தம் பள்ளிப் படிப்பை செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் படித்து, பல மொழிகள் கற்றுப் புலமை அடைந்தார்.
சர்மா அவர்கள் துவக்கத்தில் தேசபக்தன் இதழிலும், பின்னர்
திரு. வி. க.வின் நவசக்தி இதழிலும்
ஸவராஜ்யாவிலும் பணியாற்றினார்.
பின்னர் பர்மாவுக்கு சென்று அங்கு பத்தாண்டுகள் இருந்தார். அங்கு ஜோதி என்ற இதழைத் துவக்கி நடத்திவந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் பர்மாமீது படையெடுத்ததால் சென்னை வந்து சேர்ந்தார். இவர் பர்மாவில் இருந்தபோதே பல நூல்களை எழுதினார்.. இவரது நூல்களுக்காகவே சொக்கலிங்கம் செட்டியார் என்பவர் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் என்ற பதிப்பகத்தை துவக்கினர்.
இவரைப் பற்றி கண்ணதாசன் பின்வருமாறு கூறுகிறார்.
“ உலகத்து அறிவையெல்லாம் ஒன்று
திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே. ”(விக்கிபீடியாவிலிருந்து திரட்டியவை)
###₹₹
காலத் தேவைக்கு ஏற்ப தமிழை வளர்த்த எழுத்துலக யோகிகளுள் ஒருவர் அமரர் வெ. சாமிநாத சர்மா .
அவருடைய இலக்கிய ஆளுமையின் பன்முகப் பரிமாணங்களுள் ஒன்று, கடித இலக்கியத் துறை.
1958-இல் நாகர்கோயிலில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் "தமிழ் எழுத்தாளர்கள் கடித இலக்கியத் துறையில் கவனஞ் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்" என்று தமது தலைமையுரையில் குறிப்பிட்டார், சாமிநாத சர்மா.
'கடித இலக்கியம்' என்று ஒன்று உண்டா? என்று கேட்கப்பெற்ற ஒருகாலமும் இருந்துள்ளது. நவீன தமிழ் இலக்கியத் துறையை வளர்த்த முன்னோடிகளுள் வ.வே.சு. ஐயர், மறைமலையடிகளுடன். வெ. சாமிநாத சர்மாவும் இணைந்தார்.
சர்மா அன்றைய பர்மா - ரங்கூனில் வாழ்ந்த காலத்தில் 'ஜோதி' எனும் மாத இதழில் ஆசிரியராகவிருந்தார்.
அரசியல், இலக்கியம், கலை, நவீன படைப்பிலக்கியம். பொருளாதாரம், விஞ்ஞானம் எனப் பலவாறாக 'ஜோதி'யின் ஒளிக்கற்றைகள் விரிந்தன. இவற்றுள் ஒன்றாகக் கடித இலக்கியமும் தோன்றியது.
'வ.பார்த்தசாரதி' எனும் புனைபெயரில் சர்மாஜி. 'ஜோதி'யில் 'மகனே உனக்கு!' எனும் தலைப்பில் கடிதங்கள் எழுதி வந்தார்.
இந்தக் கடிதங்கள், வாசகர்களுக்கு தன்னம்பிக்கையுடன் வாழ்வியல் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை விளங்க வைத்தன. '
'மகனே உனக்கு' என எழுதப்பெற்றக் கடிதங்கள் சென்னை 1956-இல் அதே தலைப்பில் நூலாக பிரபஞ்ச ஜோதி பிரசுராயலம் வெளியீடாக வந்தது.
புகழ்பூத்த காந்தியவாதியான ஏ.கே. செட்டியாரின் 'குமரி மலர்' எனும் மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய போது சர்மாஜி,'வ. பார்த்தசாரதி' என்ற புனை பெயரிலேயே "பாரதமாதாவின் கடிதங்கள்'' எனும் தலைப்பில் குமரி மலரி'ல் எழுதினார். மொத்த 12 கடிதங்கள் வெளிவந்தன.
'பாரத மாதாவின் கடிதங்கள்' சர்மாஜியின் பிற கடித இலக்கிய நூல்களான 'அவள் பிரிவு' (1957), 'பிளேட்டோவின் கடிதங்கள்' - 1976, 'வரலாறு கண்ட கடிதங்கள்' - 1979 - போன்று நூல் வடிவம் பெறவில்லை.
இந்த நூலில் "சிறகு படைத்தத் தூதர்களாக" கடிதங்களைக் குறிப்பிட்டு. ''ஒருவர் எழுதும் கடிதத்தில்தான் அவருடைய ஆத்மாவை அசல் வடித்தில் காண முடியும்" எனும் சீரிய கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது.
கடித இலக்கியத் துறையில் 'வீரவிளக்கு' வ.வே.சு.ஐயரின் பங்களிப்பையும் சாமிநாத சர்மா சுட்டிக்காட்டியுள்ளார். "தமிழ்" தமிழின் "மறுமலர்ச்சி" குறித்து வ.வே.சு.ஐயர் எழுதிய ஆய்வு நலம் செறிந்த கட்டுரைகள், தமிழியலில் குறிப்பிடத்தக்கன. இவ்வாறே அவர், பாரதியார் ஆசிரியராகவிருந்த 'இந்தியா' (புதுச்சேரி) போன்ற இதழ்களிலும், தமது "பாலபாரதி" இதழிலும் எழுதிய கடிதங்கள் தமிழ் கடித இலக்கியத் துறைக்கு அருங்கொடையாகும்."
#####
இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம் :
இந்த புத்தகமும் கீழ்க்கண்ட தலைப்புகளில் அடங்கிய கடிதங்கள் வரையப்பட்டுள்ளது.
1)தேச சேவை
2)உன்னை நீ அறி
3)தேச பக்தி
4)முயற்சியும் பயிற்சியும
5)ஸ்தாபனத்தின் அவசியம்
6)பிரச்சாரம்
7)பொதுக்கூட்டம்
8)பிரசங்கம்
9)கட்சிக் கட்டுப்பாடு
10)தலைவனுக்குரிய தன்மைகள்
11.தனிவாழ்வும் பொது வாழ்வும்
12.பொது ஜனங்கள்.
#####
இளைஞர்களுக்கு சிறுவர்களுக்கு அன்றைய பாரத மக்களுக்கு அறிவுரை வழங்கும் பொருட்டு பல்வேறு தலைப்புகளில் சாமிநாத சர்மா அவர்கள் எழுதிய கடிதங்கள் தான் இவை .இது எந்த காலத்திற்கும் பொருந்தும் .சில விஷயங்கள் அன்றைய தினத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் இளைஞர்களுக்கு எழுதப்பட்ட சில கருத்துக்கள் தவிர மற்றவை அனைத்தும் எல்லோருக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும் அளவில் கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது .அந்த கடித இலக்கியத்தை மிகவும் ஆர்வமாக பயன்படுத்தி எல்லோரும் அதை செயலூக்கம் செய்ய
வேண்டும் என்கிற எண்ணத்தை பரப்பியவர் சர்மா அவர்கள்.
1) தேச சேவை.:
மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்களும் வேலை வெட்டியே இல்லாதவர்களும் வீட்டை மறந்து நாட்டை நினைந்து தேச சேவை செய்ய வேண்டும் என்று பாரத மாதா அழைப்பு விடுப்பதாக ஆசிரியர் கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்த கடிதத்தில் ஆசிரியர் பதிந்துள்ள சில முக்கிய கருத்துக்கள் கீழ்க்கண்டவாறு.
முதலாவது நீ ஓர் அடிமையென்பதை உணரவேண்டும். அந்நிய ஆதிக்கத்திற்கு அடிமையாயிருப்பது ஒருபுறமிருக்கட்டும்; உனக்கே நீ அடிமையாயிருக்கிறாய். இப்படி நான் சொல்வது, இந்தக் காலத்து இளைஞனாகிய உனக்கு ஒரு புதிராயிருக்கலாம்; நான் ஏதோ தத்துவம் பேசுகிறேன், வேதாந்தம் பேசுகிறேன் என்று என்னைப் பார்த்து அலட்சியச் சிரிப்பு சிரிக்கலாம்; அல்லது என்னைப் பரிகாசம் செய்யலாம். நீ என்னைப் பார்த்துச் சிரிப்பதனால் நான் குறைந்து விடமாட்டேன். நான் காலங் கடந்தவள். சரித்திர அறிஞர்கள் என்னுடைய வயதை நிர்ணயிக்க முயன்று தோல்விய டைந்து போயிருக்கிறார்கள். உன்னைப்போல் யுகக் கணக்கிலே வந்து கொண்டிருக்கிற கோடிக்கணக்கான இளைஞர்களுடைய அசட்டையும் பரிகாசமும் என் முகத்திலே ஒரு சுருக்கத்தையும் உண்டுபண்ணவில்லை; அப்படி உண்டு பண்ணவும் பண்ணாது. நோயினால் அவதிப்படுகிற ஒருவன், அந்த நோய் தாங்கமாட்டாமல், 'தாயே, என்னை ஏன் பெற்றாய்?' என்று தாயை நோகிறான்; 'கடவுளே, என்னை ஏன் படைத்தாய்?' என்று கடவுளை நோகிறான். இதற்காக அவனைத் தாயோ கடவுளோ வெறுப்பதில்லை; அவன் மீது வருத்தங் காட்டுவதுமில்லை.
பாரசீக ஏகாதிபத்தியம், கிரேக்க ஏகாதிபத்தியம், ரோம ஏகாதிபத்தியம் ஆகிய இவைகளெல்லாம் தங்களுக்கு ஆட்பட்டிருந்த ஜாதியினருடைய வேற்றுமைகளில் தான் வாழ்ந்தன; அந்த ஜாதியினர்களை வேற்றுமைப்
படுத்தித்தான் வாழ்ந்தன. ஆனால் வேற்றுமைகளின் மீது வளர்ந்த, வாழ்ந்த ஏகாதிபத்தியங்கள் ஒன்றுகூட நீடித்து நிலைக்கவில்லை; நல்லவிதமாக மறையவுமில்லை.
"ஆதலின் மகனே!
முதலில் உன்னை நீ அறி. பிறகு எனது உண்மையான நிலை உனக்குப் புலப்படும். என்னுடைய சேவைக்காக உன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வாய். அப்படித் தகுதிப்படுத்திக் கொள்வதிலேதான் உன்னுடைய எதிர்காலம் இருக்கிறது. நீ வாழ்க!"என்று பாரத மாதாவின் முதல் கடிதம் முடிகிறது.
2). உன்னை நீ அறி:
இந்தக் கடிதத்தில் கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது.
" உலகத்திற்காவது, இவ்வளவு சதுர மைல் விஸ்தீரண முடையது, இவ்வளவு டன் நிறையுள்ளது ;அப்படியே சமுத் திரத்தின் ஆழம் இவ்வளவுதான் ; ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களைக்கூட எண்ணிச் சொல்லிவிடுகிறார்கள்.
ஆனால் கற்க வேண்டிய விஷயங்கள் இவ்வளவுதான் என்று இதுவரையில் யாரா வது ஒரு வரையறை செய்திருக்கிறார்களா?
'கற்றது கைம் மண்ணளவு, கல்லாதது உலகளவு' என்ற வாசகம் வெறும் ஏட்டுச் சுரைக்காயல்ல; அழியாத உண்மை. இந்த உண்மையை நீ தெரிந்து கொண்டிருந்தாயானால் அதுவே உன்னை நீ அறிந்து கொண்டதாகும்.
'உன்னை நீ அறிய வேண்டும்' என்றால் உன் தகுதியை, உன் சக்தியை, உன் திறமையை நீ தெரிந்து கொள்ள வேண்டும், உன் பொறுப்பை நீ உணரவேண்டும், உன் கடமையை நீ அறியவேண்டும் .. உன் தகுதியை, சக்தியை, திறமையை நீ தெரிந்து கொண்டால் அதற்குத் தக்கபடி காரியங்களைச் செய்வாய்; தோல்வி யென்பது உனக்கு ஏற்படாது.
மற்றவர்கள் அறியாமையை பரிகசிக்க வேண்டாம் .அதனால் நஷ்டம் உனக்குத்தான். அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ளவேண்டியதிருந்தால் அந்த சந்தர்ப்பத்தையும் போக்கடித்துக் கொண்டு விடுகிறாய். அவர்களுடைய அறிவையும் நீ விருத்தி செய்யவில்லை; உன்னுடை ய அறிவையும் நீ விருத்தி செய்து கொள்ளவில்லை.
பிரதியொரு மனிதனுக்கும் இயற்கையாகவே சில சக்திகள் இருக்கின்றன. அவை அவனோடு பிறந்தவை. மனிதன் வளர்ந்து கொண்டு வருகிறானென்றால் அவன் தன்னிடத்திலுள்ள சக்திகளை வளர்த்துக்கொண்டு வருகிறான் என்றுதான் அர்த்தம். "
உன்னை நீ அறிய நிறைய படிக்க வேண்டும்." என்கிறது கடிதம்.
3) தேசபக்தி:
தேசபக்தி என்றால் என்ன எப்படி கைகொள்ள வேண்டும் தேச பக்தி உள்ளவன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது கடிதத்தில் எழுதப்பட்டு இருக்கிறது..
உண்மையான தேசபக்தன், தேசத்தை முன்னணியிலே நிறுத்தித் தான் பின்னணியிலே நிற்கிறான்; தேசநலனுக்காக, தன்னை அழித்துக்கொள்வது அவசியமாயிருந்தால் அதற்கும் அவன் பின்வாங்குவதில்லை; புன்சிரிப்போடு தூக்கு மேடையில் ஏறி நிற்கிறான்; பீரங்கி முன்னர் மார்பைத் திறந்து காட்டுகிறான்; எதற்கும் அவன் பின்வாங்குவதில்லை. அவன் அஞ்சாமையின் வடிவம்; உண்மையின் உரைகல்; தர்மத்தின் பிரகாசம். இப்படிப்பட்ட ஒரு தேச பக்தனாக நீ செய்கிற சேவை உனக்குச் சந்தோஷத்தை அளிக்கக் கூடியதாகவும், மற்றவர்களுக்கு நன்மையைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்.
4) முயற்சியும் பயிற்சியும்:
இந்த கடிதத்தில் முயற்சி செய்ய வேண்டும் அது குறித்தான பயிற்சி எப்படி மேற்கொள்ள வேண்டும் பயிற்சியின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து தெளிவாக எழுதப்பட்டிருந்தன .தாய்மொழி படிக்க வேண்டும் இந்தி சமஸ்கிருதம் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசிரியர் கடிதம் வாயிலாக அறிவுறுத்துகிறார்.
5) ஸ்தாபனத்தின் அவசியம்:
ஸ்தாபனம் என்றால் என்ன அதில் சேர்ந்து எவ்வாறு பணி செய்வது என்பது குறித்தான விஷயங்களை இந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருக்கிறது .மொத்தம் 18 கருத்துக்கள் தெளிவாக குறிக்கப்பட்டிருக்கிறது.
6) பிரச்சாரம்:
பிரச்சாரம் என்பது ஒரு கலை. இந்த கொள்கையை கடைப்பிடித்து வரும் அதில் உறுதியாக இருந்து எப்படி பேச வேண்டுமோ அப்படி தயார் செய்துகொண்டு பேச வேண்டும் என்கிறது இந்த கடிதம் .
.
7) பொதுக்கூட்டம்:
பொதுக்கூட்டம் என்றால் என்ன பொதுக்கூட்டத்திற்கு மக்களை எப்படி கூட்டவேண்டும் பொதுக்கூட்டத்தில் வருகின்ற மக்களை எப்படி நடத்தவேண்டும் பொதுக்கூட்டத்தில் எப்படி பேச வேண்டும் என்று விவரமாக கடிதத்தில் எழுதப்பட்டு இருக்கிறது.
8) பிரசங்கம்:
8. பிரசங்கம்
*" பேச்சு ஒரு கலை; அதை நீ பயிலவேண்டும்; அதில் நீ வல்லவனாக வேண்டும். அப்பொழுதுதான் உன்னுடைய பிரசாரம் பலனுடையதாயிருக்கும்.
பேச்சிலே என்ன இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. பேச்சைக் காட்டிலும் செயல் முக்கியம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் செயலுக்குத் தூண்டுவது பேச்சு.
கல்விச் செல்வத்தைக் காட்டிலும் கேள்விச் செல்வம் விசேஷமானதென்று சொல்வார்கள். இந்தக் கேள்விச் செல்வம் எதனை முக்கியமாகக் கொண்டு பெருமை யடைகிறது? பேச்சையல்லவோ? "
கடிதம் பேச்சுக்களை குறித்து பிரச்சாரம் முக்கியத்துவம் குறித்து சிறப்பாக பேசுகிறது.
9) கட்சிக் கட்டுப்பாடு:
ஒரு கட்சியில் சேர்ந்து விட்டால் அதன் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொண்டவைகளே கடிதம் அமைந்திருக்கிறது.
10) தலைவனுக்கு உரிய அம்சங்கள் தன்மைகள்:
தலைவனாக வரக்கூடியவனுக்கு
இருக்கக்கூடிய இலக்கணங்களை இந்த கடிதம் கோடிட்டு காட்டுகிறது.
11) தனி வாழ்வும் பொது வாழ்வும்:
மகனே! நீ ஒரு தனி வியக்தி.தேசத்தின் சிறிய அம்சம் நீ. பெரிய அம்சம் தேசம்.
ஆகவே உன்னுடைய ஒழுங்கான நடவடிக்கையை உங்களுடைய ஒழுங்காக வாழ்க்கையில்தான் தேசம் ஒழுங்கு படுத்துவது .சொந்த வாழ்க்கையில் நீ எவ்வளவு சிரத்தை உடையவராக இருக்கிறாயோ அந்த அளவுக்கு உனது தேசபக்தியின் பிரதிபலிக்க வேண்டும்
தேசத்தில் நல் வாழ்வில் உன் வாழ்வு பிரதிபலிக்க வேண்டும் என்று கடிதம் எடுத்து உரைக்கிறது.
12) பொதுஜனங்கள்:
"மகனே! பொது ஜனங்களை உன்னிலிருந்து வேறாகப் பிரித்து எண்ணாதே. அவர்களிலே நீ ஒருவன். உன்னுடைய வாழ்க்கையும் அவர்களுடைய வாழ்க்கையும் ஒன்றுதான்.
பொது ஜனங்களை எப்பொழுதும் அலட்சி யம் பண்ணாதே. அவர்களுக்கு, உன்னைப்போல் அழகாகப் பேசுஞ் சக்தி இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இதயமுண்டு; அதில் உணர்ச்சிகள் பொங்குவதுண்டு.
அவர்களுடைய புருவங்கள் எப்பொழுது நெற்றியிலே ஏறுகின்றன, எப்பொழுது அவர்கள் உதட்டைப் பிதுக்குகிறார்கள், அவர்களுடைய முகத்திலே எப்பொழுது சிணுக்கம் ஏற்படுகிறது, இவைகளையெல்லாம் நீ நன்றாகக் கவனி. அவர்களுடைய குமுறல்களைச் செவிகொடுத்துக் கேள். அப்பொழுதுதான் அவர்களுக்கும் உனக்கும் நல்ல உறவு ஏற்படும்."
பொதுஜனங்கள், பொதுஜனங்களுடன் கலந்து உறவாடுவது ஒரு கலை ,அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடிதம் வலியுறுத்துகிறது.
####
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு எழுதப் பெற்றதால், தேசத் தொண்டாற்ற தம் மக்களை பாரத மாதா தூண்டுவதாகக் கடிதங்களின் உள்ளடக்கம் அமைந்தது.
இக்கருத்து, இறுதிக் கடிதத்தில் பின்வருமாறு கூறப் பெற்றுள்ளது.
"மகனே! இதுதான் என்னுடைய கடிதம். என்னுடைய நாற்பது கோடி மக்களும் பசியாற உண்டு உடம்பு மறைய ஆடையணிந்து, நிம்மதியான வாழ்க்கையை நடத்த வேண்டுமென்பதே என் விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றிட நீ ஒரு கருவியாயமைய வேண்டுமென்பதற்காகவே இந்தக் கடிதங்களை உனக்கு எழுதிக் கொண்டு வந்தேன். இந்தக் கடிதங்கள் உன்னுடைய தேசத் தொண்டுக்கு வழிகாட்டியிருக்குமானால் அதுவே நான் அடைகிற திருப்தி'"
கடிதங்கள் ஒவ்வொன்றும் ஒன்வொன்றின் தலைப்பும், தேசிய அரசியல் பாட போதனைக்குரியதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் போராட்டக் காலத்திற்கு உரியனவாக இருந்தாலும், அவற்றின் பொதுப்பண்புகள், தேசபக்திப் பண்பு போலவே நித்தியமானவை. எனவே, தற்காலம் பொருத்தத்திற்கும் உரியதே 'பாரத மாதாவின் கடிதங்கள்' எனும் இந்நூல்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக