2 அக்., 2023

நூல் நயம்

"ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் ".
தோப்பில் முகமது மீரான் .அடையாளம் பதிப்பகம்.முதல் பதிப்பு 2008 விலை ரூபாய் எழுவது மொத்த பக்கங்கள் 100.

      இது ஒரு சிறுகதைகள் அடங்கிய புத்தகம்.

      இந்த புத்தகத்தில் கீழ்க்கண்ட சிறுகதைகள் இடம் பெற்றிருக்கிறது.

1 .அடையாளங்கள், 

2 .மிஸ்டர் மார்ட்டின், 

3 .ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும், 

4 .இரைகள், 

5 .நாராயண முதலித்தெரு 52ஆம் நம்பர் வீடு. 

6 .அப்துல்லா இப்னு அபூபக்கர், 

7 .தங்க வயல். 

8. ஒரு சவ ஊர்தியின் நகர் வலம், 

9.100ஆம் ஆண்டு மகர மாசம் 18ஆம் தேதி வில் பத்திரம், 

10 .தலையில் துண்டு கட்டிய பெண். 

        *அடையாளம் *இந்த சிறுகதையை படித்து அரை மணி நேரம் கண்கலங்கி அப்படியே அமர்ந்து விட்டேன் .

      ஒரு ஏழை சிறுவன் கிராமத்தில் உள்ள வயதான மரத்தை இல்லை மூதாட்டி மரத்தை பார்த்துக்கொண்டு குளத்திலே முக்கி எழுந்து குளித்துக் கொண்டு இருக்கிறான் .
     குளத்தில் மீன் பிடிக்க வருகின்ற ஒற்றைக் கண்ணனிடம் சண்டை போடுவான் .மூதாட்டி மரத்தில் உள்ள பறவைகளை அடிப்பதற்காக வருகின்ற நரிக்குறவர்களிடம் சண்டை போடுவான். மூதாட்டி மரத்தருகே இருக்கின்ற ஒரு கடையில் தொங்க விடப்பட்டு இருக்கின்ற பெப்சி கோலா சுவைக்க ஆசைப்பட்டு வறுமை காரணமாக தவித்து இருக்கிறான் .

        இந்த நிலையில் கேரளாவுக்கு வேலைக்கு சென்று விடுகிறான் .
      பெருநாள் வருகிறது .பிறை கண்ட பிறகு திருநாள் வருகிறது .அதை கொண்டாடுவதற்காக வருவேன் என்று ஏற்கனவே வீட்டிற்கு கடிதம் போட்டிருந்தான்.
          ஒரு கடிதத்தில் குளத்தை பார்த்துக் கொள்ளுங்கள் மீன்பிடிக்காமல் காத்து விடுங்கள் என்று சொன்னவன் மூதாட்டி மரத்தில் உள்ள பறவைகளை யாரும் அடிக்காமல் கொள்ளாமல் பார்த்து விடுங்கள் என்று கடிதம் எழுதினான்.

         அடுத்த கடிதம் எழுதும் போது என்னோடு கூட வேலை செய்கின்ற கிளீனர் டேபிள் கிளீனர் அந்த மரத்தையும் குளத்தையும் பார்க்க  வருகிறான் என்று கடிதம் போட்டான் .

      பெருநாள் விழா கொண்டாடுவதற்காக ஊருக்கு வருகிறான் .வந்து பார்த்தால் மண்
மேடிட்டு இருந்தது .குளமும் காணவில்லை மூதாட்டி மரமும் காணவில்லை .
நாற்கர சாலை அமைப்பதன் காரணமாக எல்லாமே அடிபட்டு செத்துப் போய் கிடந்ததாக ஆசிரியர் எழுதுகிறார் .ஒரு பெரிய யானை இறந்து கிடந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்ததாக எழுதுகிறார் .

      வளர்ச்சி வேண்டுமானால் சிலவற்றை இங்கு இழந்து தான் ஆக வேண்டி இருக்கிறது .
         இயற்கையை நாம் எப்படி எல்லாமோ அழித்து கொண்டிருக்கிறோம் .அடையாளம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம்.

தோப்பூர் மீரான் வார்த்தைகளில் இந்த கதையை சற்று பார்த்து விடுவோம்.

    *பெருநாளுக்கு ஊருக்கு வருவதாக எழுதிய வரிக்குக் கீழே எழுதினான். மூதாட்டி மரக்கிளைகளில் கூடு கட்ட வரும் பறவைகளைக் கேட்டாபிள் வச்சு அடிச்சிட வெள்ளச்சாமி வந்தால் விரட்டுங்கள். ஒண்ணரைக் கண்ணன் வந்தால் தள்ளை வரால்களைச் சூண்டைப் போட்டுப் பிடிக்க உடாதீங்க. 
இப்படிக்கு மகன்,' * 

         *மூதாட்டி மரத்தின் உசரத்தைப் பற்றியும் ஆம்பல் பூக்கள் மலர்ந்து நிற்கும் மொட்டையன் குளத்தில் வரால்கள் ஓடுவதையும் குளக் கோழிகள் நீந்தும் அழகைப் பற்றியும் நாராயணனிடம் சொன்னபோது பெருநாளுக்கு ஊருக்குப் போகும்போது நானும் உன்கூட வாறண்டேய் என்றான் நாராயணன்.

       ஒரு தபால் அட்டை எடுத்து, எழுதிவிட்டு, பெருநாளைக்கு என்னுடன் டேபிள் க்ளீன் செய்யும் நாராயணன் நம்ம ஊரைப் பார்க்க வருவான். .. எழுதினான்.

      பெருநாள் பிறை கண்ட செய்தி கிடைக்கும் போது இரவு 9 மணியாகி விட்டதால் ஊர் வழியாகச் செல்லும் பஸ் இல்லை. 

     பெருநாள் தொழுகை காலை 9 மணிக்கு நடக்குமென்பதால் அதிகாலை முதல் பஸ் ஏறி நாராயணனோடு வந்திறங்கிய போது சூரிய வெளிச்சமிருந்தும் ஊர் மாறிப் போச்சோ என்று அவனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஒரு மேட்டில் நிற்பதாக அவனுக்குத் தோன்றியது.*

***

     ஒவ்வொரு கதை படித்து முடித்த பிறகும் மனதை என்னவோ செய்கிறது .இளம் எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகின்றவர்கள் தோப்பில் முகமது மீரானை அவசியம் படிக்க வேண்டும்.

       தோப்பில் முஹம்மது மீரானின் புதிய சிறுகதைத் தொகுப்பான இது, விளிம்பு நிலை சமூகத்தின் வாழ்க்கையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகளால் ஆனது. மண்சார்ந்த மக்கள் இன்றைய உலகமயமாக்கலின் விளைவாக எவ்விதம் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விளிம்புநிலை மக்களின் துயரார்ந்த தருணங்களையும் தனது காலத்தின் மனசாட்சியாகப் பதிவுசெய்திருக்கிறார் மீரான். தனது புனைவு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்திருக்கும் மீரான் இத்தொகுப்பின் மூலம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

நன்றி :

கருத்துகள் இல்லை: