என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
30 நவ., 2023
29 நவ., 2023
27 நவ., 2023
இன்றைய புத்தகம்
1975 க்கு பின் உள்ள டைரியையும் இவர் வெளியிட வேண்டும்.
இன்று சிவகுமார் ஒரு சிறந்த சொற்பொழிவாளர். கம்ப ராமாயணம், மகாபாரதம், திருக்குறள் மற்றும் பெண்ணியம் பற்றி எந்த ஒரு குறிப்புகளும் கையில் வைத்துக் கொள்ளாமல் மணிக்கணக்கில் உரையாற்றுவது ஏதோ அவருடைய வெறும் ஞாபகத்திறன் என்று மட்டும் கொள்ள வேண்டாம். அதில் ஒரு அறச்சீற்றம் தெரிக்கிறது.
25 நவ., 2023
24 நவ., 2023
நூல் நயம்
"மாலன் முத்துக்கள் பத்து ".
அம்ருதா பதிப்பகம். முதல் பதிப்பு 2011 விலை ரூபாய் 95 .மொத்த பக்கங்கள் 160 .
இது ஒரு சிறுகதை தொகுப்பு . மாலன் எழுதிய சிறுகதைகளில் 10 முத்தான கதைகளை தொகுத்து இந்த புத்தகத்தில் வழங்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு எழுத்தாளர்களின் முத்தான பத்து கதைகளை தெரிவு செய்து வெளியிடும் வழக்கத்தை கொண்டிருக்கின்ற அம்ருதா பதிப்பகம். இந்த முறை மாலன் அவர்களின் கதைகளை தெரிவு செய்து வெளியிட்டு இருக்கிறது இந்த புத்தகத்தில்.
***
ஆசிரியர் குறிப்பு:
ஆசிரியர் மாலன், இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா பரிஷத் விருதை முழுமையான படைப்பாளுமைக்காகப் பெற்றவர். சிங்கப்பூர் வழங்கும் லீ காங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்ற முதல் இந்தியரும் ஒரே தமிழரும் இவரே. 2019ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்று தமிழக அரசால் விருதளித்து கௌரவிக்கப்பட்டவர். கம்பன் விருது, கண்ணதாசன்விருது, மேலும் பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர்.
படைப்பிலக்கியத்தில் முழுமை கொண்டவர் என்ற பாரதிய பாஷா பரிஷத்தின் விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற எழுத்தாளர், பத்திரிகையாளர் மாலன் இந்த நாவலை மொழிபெயர்த்துள்ளார்.
எழுத்து இலக்கிய இதழ் மூலம் தமிழ்க் கவிதை உலகிற்கும், தமது கவிதைகள் மூலம் எழுத்துலகிற்கும் அறிமுகமானவர் மாலன்.
காமராஜர் தலைமையின் கீழ் நால்வர் பணியாற்றினர் .இளம் தளபதிகளாக குமரி ஆனந்தன் ஆனந்தநாயகி பழ.நெடுமாறன் ஆகியோர்.காமராஜர் ஆட்சிக்கு வந்திருந்தால் அவர்கள் அரியனை ஏறி இருப்பார்கள் மந்திரிகளாக .
அரசியலில் அவர்கள் .
இலக்கியத்தில் அது போலவே சுப்ரமணிய ராஜு, பாலகுமாரன் ,மாலன் என்று பிரகாசம். அரசியலில் அவர்களை எனக்கு பிடிக்கும், அதுபோல இலக்கியத்தில் இவர்களை எனக்கு பிடிக்கும் .இப்பொழுது இருக்கின்றவர்களில் மாலன் கவித்துவமானவர் ;
தனித்துவமானவர் எனது பார்வையில்.
****
இந்த புத்தகத்தில் மாலனின் சிறுகதைகளில் 10 முத்துக்களாக தேர்வு செய்யப்பட்டு இடம்பெற்றிருக்கிறது கீழ்க்கண்ட சிறுகதைகள்.
1.அறம்
2.ராசி
3கடமை
4.ஆயுதம்
5.தப்புக் கணக்கு
6.முகங்கள்
7.வித்வான்
8.இதெல்லாம் யாருடைய தப்பு?
9.இறகுகளும் பாறைகளும்
10.எங்கள் வாழ்வும்.
**
மாலன் சிறுகதைகளை வரலாற்றோடு வைத்துப் புரிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். இக்கதைகள் எழுதப்பட்ட காலகட்டம், சூழ்நிலை போன்றவற்றை இக்கதைகளில் கிடைக்கும் குறிப்புகள் வழியே சீர்தூக்கிப் பார்க்க முடியும். பொதுவாகவே, அப்போது எழுதியவர்களில் பெரும்பாலோருக்கு அரசியலும், சமூகப் பொறுப்புணர்வும்
கடமையும் இருப்பதை உணரலாம்.
இதேபோல், தமிழக அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் சில இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பெருமளவு வெளியே தெரிய வந்த ஆண்டுகளும் அவைதான்.
இந்தப் பின்னணியில், மாலன்
அவர்களின் "இதெல்லாம் யாருடைய தப்பு?", "ஆயுதம்" போன்றவை மிகவும் கூர்மையானவை. அதில் எழுப்பப்படும் கேள்விகள், விசாரணைகள் முக்கியமானவை. இன்னமும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை! அந்த வகையில், மாலன் அவர்களை முக்காலம் உணர்ந்த தீர்க்கதரிசி எனலாம்.
மாறாதிருக்கும் சமூக சூழ்நிலைகளை என்னவென்று சொல்ல? 'கடமை', 'அறம்' இரண்டும் தமிழக அரசியலின் வேறு முகங்களைக் காட்டுவன.
தம் கருத்துகளைச் சொல்ல, விமர்சனங்களை முன்வைக்க கதைகளைக் கையாளும் காலத்தைச் சேர்ந்தவர் மாலன் என்பதை இக்கதைகள் புலப்படுத்துகின்றன. இன்றைக்கு அறவே ஒழிந்துவிட்ட போக்கு இது! கேள்வி கேட்பது, உரத்துப் பேசுவது என்பதெல்லாம் கதைகளுக்கு ஒவ்வாதவை; அவை ரொமாண்டிசம் என்று விலக்கப்படும் அவலமே இன்றைய இலக்கியப் பார்வை! ஆனால், மாலன் தலைமுறைக்காரர்கள் எல்லோருமே அசெளகரியமான கேள்விகளைக் கேட்பதை கடமையாகச் செய்திருக்கிறார்கள். அதனால் தான், இன்றும் அவர் கதைகள் படிக்கத் தூண்டுவனவாக இருக்கின்றன.
பள்ளிக் கல்வியில் ஏற்பட்ட ஏமாற்றங்களைப் பதிவு செய்யும் ஆரம்ப வித்து, தப்புக் கணக்கு கதை. தமிழகம் எங்கும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற, மாட்டுக் கொட்டகைகள் நடத்தப்படுகின்றன. உருப்போட்டு, உருப்போட்டு, மாணவர்கள் உருப்படாமலே போய்விடும் ஆபத்து! இதில் தர்க்கம் நியாயம், புத்திசாலித்தனம் எதற்கும் இடமில்லை. புத்தகத்தில் உள்ளதை அப்படியே கக்கும் மாணவனே முதல் மாணவன்!! ஜனனி போன்ற புத்திசாலித்தனமான குழந்தைகள் அபூர்வம். கேள்வியே கேட்கக்கூடாது என்று கருதும் பெற்றோரே பெரும்பாலோர்.
காதலும், கல்யாணமும், சுதந்திரமும் மாலன் கதைகளில் சித்திரிக்கப்படும் விதம், எண்பதுகளைச் சார்ந்தது. இன்றைய நகரத்துப் பெண்களைக் காதல் உடைத்துவிடுவதில்லை. 'மயிலிறகின் கனம்' ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் உடலையும் மனத்தையும் லகுவாகக் கடக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். 'எங்கள் வாழ்வில்' பாலி, 'இறகுகளும் பாறைகளும்' அருணா போன்றவர்கள் ஒரு காலகட்டத்தின் அடையாளங்கள்.
சமூக வளர்ச்சியின் மாற்றங்கள். 'வித்வான்' எதிர்கால அறிவியல் சாத்தியம் என்ற அழகிய கற்பனை.
'ராசி' நுட்பமான கதை. நிராகரிப்பின் வலியை உணர்ந்தவன், ஒரு கட்டத்தில் அங்கீகாரத்தைச் சந்திக்கும்போது ஏற்படும் தயக்கம், தடுமாற்றம், கச்சிதமாக வெளிப்பட்ட கதை.
கதைகள் மூலம், சமூகப் பொறுப் புணர்வைத் தட்டி எழுப்புவது. ஆரோக்கியமான படைப்பின் முகவரி இது.
அறம்...
இந்தக் கதையைப் படிக்கும் போது பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்த தமிழ்நாட்டின் நிலவரம் நினைவுக்கு வந்தது.
இன்றும் இப்பொழுதும் எப்பொழுதும் பிரச்சினையாக இருக்கக்கூடிய ஒரு பதவி குறித்து பதவியை உபயோகப்படுத்தும் திறம் குறித்து ஆசிரியர் தீர்க்கமாக ஆலோசித்து இந்த கதையை எழுதி இருக்கிறார் .
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று சொல்லும் போதே பணி செய்ய வேண்டுமே ஒன்றி ஒழிய பணியை செய்யும் பணிபுரித்து சிந்திக்கக் கூடாது என்று தத்துவத்தையும் ஆசிரியர் சொல்லி ,சொல்லாமல் சொல்லி செல்கிறார் .
ஒரு மாநிலத்தின் கவர்னர் முகமாக வாழ்கின்ற நிலையில் அவருக்கு ஒரு வேலைக்காரன் .அவனது பெயர் அறம்.
அறம் என்று பெயர் வைத்து இருக்கும் போது புரியாமல் படித்த நான், இறுதியில் புரிந்து கொண்டேன் பெயர் வைத்த காரணம் .
அந்த மாநிலத்தின் ஆளுநர் எப்போதும் ஒரு ஒரு கொட்டை ருத்ராட்சை மாலை உத்திராட்சம் அணிந்து கொண்டிருப்பார். அது காணாமல் போய்விடுகிறது .அவன் மீது சந்தேகப்பட்டு அவனை அடிக்கிறார் உதைக்கிறார் திட்டுகிறார் ஏசுகிறார். எல்லாம் செய்கிறார். அவன் வாய் மூடி மௌனமாகவே இருந்து விடுகிறான் .
அதிகாரி ஆனந்த் என்பவர் அறம் செய்திருக்க மாட்டான் என்று சொல்லுகிறார் .ஆனால் ஆளுநர் ஒப்புக்கொள்ளவில்லை .நான் அதை அவனிடம் தான் கொடுத்தேன் .அவன் தான் அதை எடுத்துக் கொண்டு விட்டான் என்று அடம் பிடிக்கிறார் அடாவடி ஆளுநர் .
இந்த நிலையில் தேர்தல் நடந்து ஒரு கட்சி ஆட்சிக்கு வருகிறது .கட்சியின் ஆட்சி தலைவராக இருக்கக்கூடியவர் அதிகமாக ஊழல் செய்திருக்கிறார் .அவருக்கு பதவி பிரமாணம் செய்யலாமா வேண்டாமா என்கிற நிலையில்அரசு அதிகாரி ஆனந்த் அந்த அரசியல்வாதிக்கு முடிசூட்ட வேண்டாம், பதவி ஏற்பதற்கு ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று சொல்கின்ற நிலையில் ஆளுநர் சிறப்பான காரணங்கள் கூறி ஒப்புக்கொள்கிறார்.
பதவியேற்பு விழாவின்போது எப்பொழுதும் உடன் இருக்கின்ற அறம் காணாமல் போய்விடுகிறான் என்பதாக கதை முடிகிறது .
ஒரு நாடு செழிக்க வேண்டுமென்றால் அறம் செய்ய வேண்டும் ;தழைக்க வேண்டும் ;அங்கு இருக்க வேண்டும் . அரம் இல்லாத நாட்டில் உருப்படாது என்கிற தத்துவத்தை தான் ஆசிரியர் இந்த கதையில் சொல்லுகிறார் .
இந்த கதையைப் படிக்கும் போது எனக்கு சுஜாதா அவர்கள் எழுதிய ஒரு கதை நினைவுக்கு வந்தது .பத்து பக்கங்களுக்கும் மேல் எழுதப்பட்ட கதை அது .திருக்குறளில் வருகின்ற அறத்தின் பால் பட்ட ஒரு திருக்குறளுக்கு விளக்கம் சொல்லும் முகத்தான் எழுதப்பட்ட கதை அது .
* மனத்துக்கண் மாசிலன் ஆதல் * என்று வருகின்ற திருக்குறளுக்கு விளக்கம் சொல்லுகின்ற வகையிலே அந்த கதை எழுதப்பட்டிருக்கிறது .
அதுவும் அறந்தான் ,இதுவும் அறந்தான் .செயல் மட்டும் அறமாக இருந்தால் போதாது ,நினைவும் மனமும் செயலும்அறத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்று இன்னும் வியாக்கியானம் சொல்லிக் கொண்டே போகலாம் இந்த கதைக்கு .
அவ்வளவு அற்புதமான கதை இது.
***
எல்லா கதைகளையும் ஏற்கனவே படித்து விட்ட பிறகும் இந்த மழைக்காலத்தில் நான்கு முத்து புத்தகங்களை படிப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது .காலத்தால் அழிக்க முடியாத கதைகள் எல்லாமே.
22 நவ., 2023
20 நவ., 2023
நூல் நயம்
"நிலவழி ".
எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியது. உயிர்மை பதிப்பகம் .விலை ரூபாய் 100. மொத்த பக்கங்கள் 88 .முதல் பதிப்பு 2016.
இந்த நிலவழி புத்தகத்தைப் படிக்க படிக்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் இந்த நிலவழி நூலில் நிறைய புத்தகங்களை அறிமுகம் செய்கிறார். நிறைய திரைப்படங்களை ,நிறைய ஊர்களை எல்லாம் அறிமுகம் செய்து என்னை மகிழ்ச்சியில் திணற செய்துவிட்டார்.
எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தார். முழுநேர எழுத்தாளரான இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார் .ஏராளமான சிறுகதைத் தொகுப்புகள் ,உபபாண்டவம் நெடுங்குருதி உறுபசி யாமம் துயில் நிமித்தம் சஞ்சாரம் இடக்கை , முதலான நாவல்களும் ,கட்டுரை தொகுப்புகள், திரைப்பட நூல்கள் ,குழந்தை நூல்கள் உலக இலக்கியப் பேருரைகள், வரலாறு, நாடகத் தொகுப்பு ,நேர்காணல் தொகுப்பு மொழிபெயர்ப்புகள் ,தொகைநூல் என்று ஏராளமான எழுத்தாக்கம் செய்திருக்கிறார் சாகித்ய அகாடமி விருது சஞ்சாரம் நூலுக்காக பெற்றிருக்கிறார்.
ரஷ்யா இலக்கியங்களையும் இலத்தீன் அமெரிக்க இலக்கியங்களையும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வரும் எஸ் ராமகிருஷ்ணன் இந்த நூலில் நவீன இந்திய இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களை அடையாளம் காட்டுகிறார்.
ஆனால் மொழிகள் நம்மை
பிரித்துள்ளன.இலக்கியத்தின் வழியே நம்மை ஒன்றிணைக்க முனைகிறது நிலவழி .அவ்வகையில் இந்த கட்டுரைகள் நவீன இந்திய இலக்கியத்தின் முகங்களை ஒளிரச் செய்கிறது என்பதே நிஜம்.
****
தனது முன்னுரையில் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார்:
"ரஷ்ய இலக்கியங்கள் ,ஐரோப்பிய இலக்கியங்கள் ,லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் அறிமுகமான அளவிற்கு இந்திய இலக்கியங்கள் குறித்து தமிழ் இலக்கிய சூழல் அறிந்திருக்கவில்லை."
"சமகாலத்தில் மற்ற இந்திய மொழிகளில் யார் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவில்லை .மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளியாவதால் ஓரளவு அங்குள்ள இலக்கியச் சூழலை தெரிந்து கொள்ள முடிகிறது ."
" ஆனால் பஞ்சாபி காஷ்மீர் அசாம் குஜராத்தி ஒரியாவில் யார் முக்கிய எழுத்தாளர்கள் ,இப்போது என்ன வகையான எழுத்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிமுகமாகவில்லை ."
"சாகித்ய அகாதமியும், நேஷனல் புக் டிரஸ்ட்டும் நிறைய மொழிபெயர்ப்பு நூல்களை விடுகிறார்கள் .ஆனால் அந்த நூல்கள் ஒன்றைப் பற்றிக் கூட விமர்சனக் கூட்டம் நடத்துவது இல்லை.
வெற்றி மொழி எழுத்தாளர்கள் பற்றிய அறிமுக கூட்டங்கள் ஏற்பாடு செய்வதில்லை."
" நிலம் நம்மை இணைத்து வைத்திருக்கிறது .மொழி நம்மை பிரித்து வைத்திருக்கிறது ."
" நில வழியின் மூலம் இந்திய இலக்கியத்தில் முதன்மையான சில இலக்கியவாதிகளை அறிமுகம் செய்திருக்கிறேன் ,"என்கிறார் எஸ் ராமகிருஷ்ணன் மேற்கண்டவாறு தனது முன்னுரையில்.
***
இனி நில வழியில் நடந்து செல்ல காலடி எடுத்து வைப்பதற்கு 10 படிகளை கடந்து செல்ல வேண்டும்.
1)காம ரூபத்தில் உ லவும் நிழல்கள் 2)சொற்களால் செய்யப்பட்ட மாயக் கம்பளம் .
3)மகாராணியின் பேனா .
4)காந்தியை பின்தொடர்பவர்கள் .
5)பெயர்கள் கூட சொந்தமில்லை .
6) காட்டின் மீது பயமில்லை .
7)பாதி உடல் கொண்ட பெண் .
8)நவீன கன்னட கதைகளும் திவாகர் காட்டும் சென்னை யும்.
9)கோல்கீப்பரின் எல்லை.
10) பாணிக் ராஹி யின் மண் உருவங்கள்.
******
1) காம ரூபத்தில் உலவும் நிழல்கள்:
ஞானபீட பரிசு பெற்ற அசாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி .இவரது கிராமத்தின் கதை என்ற நாவல் சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. அதன் தமிழ் மொழியாக்கமே தென்காமரூபத்தின்
கதை .இதனை தமிழில் மொழிபெயர்த்தவர் மாரியப்பன் .
அஸ்ஸாம் மக்களால் தங்களின் அன்புக்குரிய பாய் தேவ் (மூத்த சகோதரி) என்று அழைக்கப்பட்டவர் இந்திரா கோஸ்வாமி என்ற மா மோ னி ராய் சோம் கோஸ்வாமி.
காமரூபம் அசாமின் இயற்கை வளமிக்க மாவட்டமாகும்.
இவரது சுயசரிதை An unfinished autobiography என்ற பெயரில் வெளியாகி உள்ளது .இதில் ஒளிவு மறைவின்றி தனது இளமைப்பருவத்தை ,காதலை ,காமத்தை , தனது கணவரின் மறைவுக்குப் பிறகு வாழ்ந்த நாட்களின் வேதனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார் .கமலா தாஸின் என் கதையைப் போலவே இந்த சுயசரிதையும் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது.
திருமணத்துக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட பாலியல் உந்துதல்களையும் அதற்காக தனது வீட்டில் தான் தண்டிக்கப்பட்டது, தற்கொலைக்கு முயன்ற எதையும் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.
ஆணாதிக்கம் மற்றும் மதக் கட்டுப்பாடுகள் கலாச்சார கண்காணிப்புகள் தடைகள் பெண்களை எப்படி ஒதுக்கி வைத்திருந்தனர் என்பதை அதிகம் எழுதி இருக்கிறார் .13 நாவல்களையும் 7 சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு சுயசரிதை இருவரையும் ஒரு கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
2) சொற்களால் நெய்யப்பட்ட மாயக் கம்பளம்:
உருது கதைகள் என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பினை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு உள்ளது .இதில் கிருஷ்ணசந்தர், ராஜேந்திர சிங், இஸ்மத் சுக்தாய் ஆகிய மூவரது சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன.
இஸ்மத் சுக்தாய் 1941இல் லிஹாப் என்கிற சிறுகதையை எழுதினார் .இந்த கதை நவாப் சாகிப்பின் மனைவியான பேகம் ஜான் என்ற பெண்மணி தன் வீட்டில் வேலை செய்யும் பெண் உடன் கள்ளத்தனமாக பாலுறவு கொள்வதை பற்றியது. நுணுக்கமாக எழுதப்பட்ட இந்தக் கதையை ஆழ்ந்து வாசிக்கும் போதுதான் பாலுறவு பற்றியது என்பதை உணர முடியும்.
இஸ்மத் சுக்தாயின் மூன்று முக்கிய சிறுகதைகளை ராகவன் தம்பி மொழியாக்கம் செய்திருக்கிறார் .அதில் வேர்கள் என்ற கதை மிக முக்கியமானது. இந்திய பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு போக மறுத்து தன் ஊரிலேயே தங்கி விட்ட ரூப்சந்த்ஜியின் நினைவுகளே இந்த கதை.
"எனது கதைகள் மாயக் கம்பளம் போன்றவை. பேனா முனையில் இருந்து பிறக்கும் சொற்களைக் கொண்டு அந்த மாயக் கம்பளத்தை நெய்கிறேன். சொற்களின் வழியே மனிதர்களை நேசிக்கிறேன். சந்தோஷம் கொள்ள வைக்கிறேன் .மனிதத்துயரங்களை எழுத்தின் வழியே பகிர்ந்துகொள்கிறேன். ஆறுதல் தருகிறேன் .மோசமான
செயல்களை அழித்து ஒழிக்கிறேன் .என் தனிமையின் தோழன் எழுத்துக்கள் மட்டுமே," என்கிறார் இஸ்மத் சுக்தாய்.
3) மகாராணியின் பேனா:
மணிப்பூரி ராஜமாதா என்று அழைக்கப்பட்ட எழுத்தாளர் எம். கே. பினோதினி தேவி மணிப்பூரின்
மகாராணி .அரச குடும்பத்தை சேர்ந்த இவர் எழுத்திலும் ஓவியத்திலும் இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் . The Princess and the political agent நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.
வங்க மொழியில் இலக்கியங்களைக் கற்று தேர்ந்து அந்த படைப்புகளை மணிப்பூரில் மொழியாக்கம் செய்துள்ளார் பாதல் சர்க்காரின் நாடகங்களை மொழிபெயர்த்தது முக்கிய பங்களிப்பாகும்.
பினோதினி தேவிக்கு சாகித்ய அகாடமி பரிசு வாங்கித் தந்த நாவல் Boro Saheb Onghi Sanatombi நாவல் சனதொபி என்ற இளவரசிக்கும் கிழக்கிந்திய கம்பெனி ஏஜென்ட்டான மக்ஸ்வெல் என்ற வெள்ளைக்காரனுக்குமான காதலை பேசுகிறது.
பினோதினி தேவியின் படைப்புகள் இன்றும் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. அவரது படைப்புகள் அவசியம் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் .அதன் வழியாகத்தான் நாம் மணிப்பூரின் வரலாற்றையும், வாழ்க்கை பாடுகளையும் ,சமகால அரசியல் நெருக்கடி களையும் உண்மையாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார் ஆசிரியர்.
4) காந்தியை பின்தொடர்பவர்கள்:
பீகாரில் பிறந்த பபானி பட்டாச்சாரியா பாட்னா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பெற்றவர் .தாகூரின் நெருங்கிய நண்பராக இருந்தார் .
இவரது நூல்கள் 26 மொழிகளில் வெளியாகியுள்ளன. சாகித்ய அகாடமி பரிசு பெற்ற இவரது புகழ்பெற்ற நாவலான *லடாக்கிலிருந்து கவிழும் நிழல் *தமிழில் வெளியாகி உள்ளது.
இந்தியாவிற்கும் சீனாவிற்குமான யுத்தத்திற்கு லடாக் எப்படி மையமாக உருவானது என்பதை முதன்மைப் படுத்துகிறார் பபானி.
காந்தி கிராமமும் எக்கு நகரும் இந்தியாவின் இரண்டு முகங்கள் .இதில் எது தேவையானது ,எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை பபானி நாவல் முழுவதும் விவாதிக்கிறார் .ஒருவகையில் நேருவுக்கும் காந்திக்கும் முடிவற்ற உரையாடல்களின் மாற்று வடிவம் போலவும் இந்த நாவலை கருதலாம்.
இந்தியா சீனா யுத்தம் குறித்து பபானி தவிர வேறு யாரும் நாவல் எழுதி இருப்பதாக தெரியவில்லை. இன்றைய தலைமுறை மீண்டும் காந்தியின் மீது கவனம் குவிய ஆரம்பித்து உள்ள சூழ்நிலையில் இது போன்ற நாவல்கள் வாசிக்கப்படுவதற்கான முக்கிய பிரதிகளில் ஒன்றாக ஆகிறது. அந்த வகையில் பபானி எழுத்து காந்திய காலத்தின் அரிய ஆவணமாகவே காட்சியளிக்கிறது.
5) பெயர்கள் கூட சொந்தமில்லை:
ஒரிய இலக்கியத்தில் எனக்கு மிகவும் விருப்பமான நாவல் நீலமலை .சுரேந்திரன் எழுதியது .பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் தேரோட்டத்தை முதன்மையாகக் கொண்டு இஸ்லாமியப் படையெடுப்பில் இருந்து அக்கோவில் எப்படி காப்பாற்றப் பட்டது என்பதையும் சுரேந்திர மோகந்திக் இரண்டு நாவல்களாக எழுதி இருக்கிறார் .அதில் முதல் நாவல் நீலமலை .ஒரு கோவிலின் வரலாற்றை இத்தனை விரிவாக யாரும் எழுதியதில்லை .சுரேந்திரன் சுதந்திரப் போராட்ட காலம் குறித்தும் நாவல் எழுதியிருக்கிறார். இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.ஒரியா நாவலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர்.
ஒரிசா பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் மாநிலம்.பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக பூர்வீக குடிகளின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரத்தையும் அழித்தொழிக்கும் கொடுமை இந்தியாவில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
பழங்குடி மக்கள் ஆயுதம் ஏந்தி போராட துவங்கினார்கள் .அப்படியும் அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை. இன்றைக்கும் மலை வளம் கொள்ளை போகிறது என்றே பழங்குடிகள் போராடுகிறார்கள்.
கோண்டு பழங்குடிகளிடம் கோட்டுதல் என்ற அமைப்பு உள்ளது .இது பருவ வயதை அடைந்த ஆண் பெண் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைத்து அவர்களுக்குள் பழகி பாலினத்தை அனுபவிக்க செய்வதாகும் .ஒருவகையில் பாலியல் பற்றிய பாடம் புகட்டல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
அடையாளம் என்ற மொகாந்தியின் சிறுகதை தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக பெண்கள் எப்படி முடிவு எடுக்கிறார்கள் என்பதை பேசுகின்றன.
இதில் அடையாளம் கதையில் அந்த காலத்தில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதற்கு சாட்சியாக ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது .
*இடது கன்னத்தில் ஒரு குத்து
எனினும் நீ அவரை வணங்குவாய் .
வலது கன்னத்தில் ஒரு குத்து .
எனினும் நீ அவரை வணங்குவாய். அடுத்தடுத்து எவ்வளவு வந்தாலும்
நீ எதிர்ப்பை காட்ட மாட்டாய்*
இன்று வரை ஒரிய இலக்கியப் படைப்புகளில் பழங்குடி மக்களின் பிரச்சினைகளை உரிமைகளும் தொடர்ந்து ஒலித்து வருகின்றன .அதனோடு ஒப்பிட்டால் தமிழகத்தில் உள்ள பழங்குடி மக்கள் பற்றி நாம் அதிகம் கவனம் கொள்ளவில்லை .அவர்கள் சார்ந்த இலக்கிய பதிவுகள் குறைவு என்பதை உணர முடிகிறது. அந்த வகையில் மொகந்தியின் படைப்புகள் நாம் செல்ல வேண்டிய திசை காட்டியாகவே இருக்கிறது
என்கிறார் ஆசிரியர்.
6) காட்டின் மீது பயமில்லை:
மலையாளம் கன்னடம் வங்காள இலக்கியம் போல தெலுங்கு இலக்கியம் குறித்து நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை.
தெலுங்கில் நான் வாசித்த மிகச்சிறந்த நாவல் கேசவ ரெட்டியின,"் அவன் காட்டை வென்றான் ".இது மிகச் சிறிய நாவல் .78 பக்கங்களைக் கொண்டது .நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்த நாவலை மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளது. ஏசி எத்திராஜுலு மிகச்சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார் .இந்த நாவல் ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் நாவலருக்கு இணையானது .கிழவரை முக்கிய கதாபாத்திரமாக கொண்டவை.
இரண்டிலும் ஒலிக்கும் மனித நம்பிக்கை ஒன்று போலவே இருக்கிறது.
தெலுங்கு இலக்கிய உலகின் முக்கிய எழுத்தாளரான கேசவ ரெட்டி ஒரு மருத்துவர்.
தொலைந்துபோன தனது பன்றியை தேடி ஒரு கிழவர் பல நாட்களாக காட்டில் அலைவது குறித்த கதை .இவர் எழுதி இருப்பது சிறப்பானது.
அவன் காட்டை வென்றான் நாவலில் காடு தரும் அனுபவம் மறக்க முடியாதது. அதைவிடவும் கிழவரின் மன உறுதியும் போராட்டமும் பன்றிகளை அவர் நேசிக்கும் விதமும் நெகிழ்ச்சி ஊட்டுகிறது .
மருத்துவம் படித்த நாட்களில் ஜாதி கொடுமைகளை அனுபவித்துவரும் இவர் என்பதால் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் எழுவதை தனது எழுத்தின் முதன்மை செயல்பாடாக கொண்டிருந்தார் கேசவ ரெட்டி .
இந்த நாவலும் அதன் அடையாளம் போலவே எழுதப்பட்டிருக்கிறது.
7) பாதி உடல் கொண்ட பெண்:
நவீன மராத்திய இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர் விலாஸ் சாரங்..
இவரின் புகழ்பெற்ற சிறுகதை an interview with M.chakko இது ஒரு மேஜிகல் ரியலிசம் கதை .சாக்கோ என்ற நபரின் நேர்காணல் போல எழுதப்பட்டுள்ளது..
The odour of immortality. சிறுகதையில் வரும் சம்பா விபச்சாரத் தொழிலில் இருந்து விடுபட விடுதலை பெற 50 ஆயிரம் ரூபாய் நிர்வாகிக்கு தர வேண்டும் .
ஆகவே நிறைய வாடிக்கையாளர்கள் வந்து போக வேண்டும் .இதனால் உடல் முழுவதும் யோனி இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறாள் .ஒரு துறவி மந்திர சக்தியால் அவளுக்கு பத்து யோனிகளை உண்டாக்கி விடுகிறார்.
இதனால் ஒரே நேரம் பத்து வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்த முடியும் .
ஆனால் அவளுடன் உறவு கொள்ளும் வாடிக்கையாளர்கள் மறுநாள் ஆண்மையை இழந்து விடுவதால் அவளை யாரும் நாடி வரவில்லை .
ஒரு நாள் ஒரு பிச்சைக்காரன் வருகிறான். உறவுகொள்ள அழைக்கிறான். சம்பா ஏற்றுக்கொள்கிறாள் .அப்போதுதான் தெரிகிறது வந்திருப்பது கடவுள் இந்திரன் என்று.
தன்னோடு உறவு கொள்பவரின் ஆண்மை போய்விடும் என்றாள் சாம்பா.
காமத்தால் அலைக்கழிந்து தவிக்கும் தான் அதிலிருந்து விடுபடவே அவளைத் தேடி வந்துள்ளதாக சொல்கிறான்
இந்திரன் .முடிவில் அவரது வரத்தால் உடலிலிருந்த யோனிகள் மறைந்துபோய் உடல் முழுவதும் கண்கள் உருவாகிவிடுகின்றன .கதையின் முடிவில் எய்ட்ஸ் நோயால் சம்பா இறந்து போகிறாள். அவளை அந்த பகுதி மக்கள் கடவுளாக வழிபடுகிறார்கள் .
இப்படி புராணத்தையும் சமகால வாழ்க்கை நிலையும் ஒன்று கலந்து புதிய சிறுகதைகளை எழுதி இருக்கிறார் விலாஸ் சாரங்.
8) நவீன கன்னட கதைகளும் திவாகர் காட்டும் சென்னையும்:
கன்னட எழுத்துலகில் தனித்துவமானவர் எஸ் .திவாகர் .
இவரது சிறுகதைகளில் சிலவற்றை தி.சு. சதாசிவம் மொழியாக்கம் செய்து *அந்தரத்தில் நின்ற நீர்*என்ற தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்.
திவாகர் சென்னையை துல்லியமாக பதிவு செய்திருக்கிறார் என்பதே வியப்பாக இருக்கிறது .இவரின் மற்ற படைப்புகளும் தமிழுக்கு வர வேண்டும் அதுவே அந்தக் கலைஞனுக்கு நாம் அளிக்கும் மரியாதை.
9) கோல் கீப்பரின் எல்லை:
மலையாள சிறுகதை உலகில் *பெருமரங்கள் விழும் *போது என்ற என் எஸ் மாதவன் சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் நிர்மால்யா மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளது .
இதில் 12 சிறுகதைகள் உள்ளன. பெருமரங்கள் விழும்போது ,திருத்தம் ஓலம் ஆகிய மூன்று சிறுகதைகள் இந்தியா எதிர்கொண்ட மூன்று கலவரங்களின் பின்புறத்தை கொண்டவை .
சீக்கியர் கலவரம் ,பாபர் மசூதி இடிப்பு, சோவியத்தின் வீழ்ச்சி, குஜராத் கலவரம் என சமகால பிரச்சினைகளுக்கு எழுதுவதில் என்எஸ் மாதவன் முக்கியமானவர்.
இந்தத் தொகுப்பிலுள்ள நாவிதன் என்ற கதை ஈராக்கில் அமெரிக்க ராணுவம் சதாமை சிறை பிடித்த பிறகு நடந்த சம்பவங்களில் ஒன்றை விவரிக்கிறது. இப்படி மலையாள சிறுகதையின் பரப்பை உலக அளவில் விஸ்தாரம் செய்தவர் மாதவன்.
10)பாணிராஹியின் மண் உருவங்கள்:.
சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள இந்திய நாவல் வரிசையில் மிக முக்கியமானது காளிந்தி சரண் பாணிராஹி எழுதிய *மண் பொம்மை *.இதனை தமிழாக்கம் செய்திருப்பவர் ரா.வீழிநாதன்.
இவரின் மகள் நந்தினி சத்பதி ஒரிசா மாநில முதலமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப பிரிவினையை முன்வைத்து எழுதப்பட்ட நாவல். யார் எப்பொழுது எதன் பொருட்டு பிரிந்து விடுவார்கள்; சண்டையிட்டு பிரிந்து போவார்கள் என்பது கணிக்கவே முடியாது.
மண் மனிதர்கள் என்ற தலைப்பை மண் பொம்மை என மாற்றியிருக்கிறார்
வீழி நாதன்.
இந்திய இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்த மகத்தான படைப்பாளிகள் குறித்து தொடர்ந்து பேசவும் கொண்டாட வேண்டியது நமது கடமை என்று ஆசிரியர் கருதுகிறார் என்பதாக நிலவழி நடைபயணம் முடிகிறது.
நன்றி :
19 நவ., 2023
18 நவ., 2023
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)