8 மார்., 2024

குட்டிக்கதை

ஆன்மிக அமுதம்:
............................
 *அந்தக் கணத்தை மாற்ற முடியாது!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
............................
  *மனைவியோடும் கைக்குழந்தையோடும் அந்தக் கணவன், தான் வசிக்கும் திருப்புத்தூரிலிருந்து, மதுரையை நோக்கி நடந்து கொண்டிருந்தான். 

  மதுரையில் அவன் மாமன் வீட்டிற்குத்தான் குடும்பத்தோடு சென்று கொண்டிருந்தான். மதுரையை குலோத்துங்க பாண்டியன் ஆண்டுகொண்டிருந்த காலம் அது. 

  அப்பா! நடந்து நடந்து கால்கள் என்னமாய் வலிக்கின்றன! நண்பகல் வெய்யில் வேறு பாதங்களைச் சுடுகிறது. 

 மரங்களடர்ந்த கானகத்தின் வழியே அவர்கள் நடக்க வேண்டியிருந்தது. என்றாலும் மரக் கிளைகளையும் இலைகளையும் தாண்டி வெய்யில் இப்படித் தரையை வறுத்துக் கொண்டிருக்கிறதே!

 ஓர் ஆலமரத்தின் அடியில் சற்று அமர்ந்து இளைப்பாறிவிட்டுச் செல்லலாமே என்றாள் மனைவி. குழந்தையோடு அவர்கள் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்தார்கள். 

  மனைவி விரைவில் விளையப் போகும் விபரீதத்தை அறியாதவளாய் `நாதா! எனக்குத் தாகத்தால் உயிரே போகும்போல் இருக்கிறது. எங்கேனும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?` என வினவினாள். 

  கணவனுக்கும் கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் என்றுதான் தோன்றியது. வெகுதூரம் நடந்த களைப்பு. 

 `இங்கேயே குழந்தையோடு பத்திரமாக இரு. அருகே ஏதாவது சுனை இருக்கிறதா பார்த்து வருகிறேன்!` எனச் சொல்லிப் புறப்பட்டுச் சென்றான். 

  அருகில் எந்த நீர்நிலையையும் காணோம். சற்று தூரத்தில் எப்படியோ ஒரு பொய்கையைக் கண்டுபிடித்த அவன், தாகம் அடங்க முதலில், தான் தண்ணீர் குடித்தான். 

  பின் பொய்கையிலேயே படர்ந்திருந்த பெரிய தாமரை இலை ஒன்றைப் பறித்து தொன்னைபோல் செய்து, அதில் பொய்கை நீரை எடுத்துக் கொண்டான். 

  நீர் சிந்திவிடாமல் இரு கரங்களிலும் இலையைத் தாங்கி, மனைவி வீற்றிருக்கும் ஆலமரத்தடியை நோக்கி நடந்தான். 

  மரத்தடியில் அவன் கண்ட காட்சி! என்ன கொடுமை இது! அவன் மனைவி உயிரிழந்து கீழே சாய்ந்திருந்தாள். அவள் உடலில் அம்பு பாய்ந்திருந்தது. 

  குழந்தை, தாய் இறந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்தது. 

  தாமரை இலையில் தேங்கியிருந்த தண்ணீரும் அவன் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீரும் ஒருசேரத் தரையை நனைத்தன. 

  வாழ்க்கையே தாமரை இலைத் தண்ணீர்தானா? பிடிப்பற்று உருள்கிறதே? மனைவியை இழந்த நான் இனி என்ன செய்வேன்? எப்படி உயிர்வாழ்வேன்? எப்படி என் சின்னஞ்சிறு குழந்தையை வளர்ப்பேன்?

 பெண்கொலை பெரும் பாவமல்லவோ? இவள்மேல் அம்பெய்து இந்த மாபாதகச் செயலைச் செய்தது யார்? 

  சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் தென்படவில்லை. அந்தப் பெரும் ஆலமரத்தைச் சுற்றி வந்தான். 

 மரத்தின் அந்தப் புறத்தில் ஒரு வேடன் வில்லோடும் அம்போடும் நின்றுகொண்டிருந்தான். அவனையன்றி அந்தப் பிரதேசத்தில் வேறு மனித வாடையே இல்லை. 

   பிறகு அவன்தான் அம்பெய்து மனைவியைக் கொன்றான் என்பதற்கு வேறு சாட்சி வேண்டுமா?

  அவன் பிடரியைப் பிடித்து இழுத்துவந்து தன் மனைவியின் உடல்முன் நிறுத்தினான். 

 `ஒரு பாவமும் அறியாத என் மனைவியை ஏன் அம்பெய்து கொன்றாய்? என் பச்சிளங் குழந்தையைத் தாயில்லாக் குழந்தையாக்கி விட்டாயே? அவள் என்ன கெடுதல் செய்தாள் உனக்கு?` - சீற்றத்தோடும் கண்ணீரோடும் அதட்டினான். 

  அவள் இறந்துகிடந்த காட்சியைப் பார்த்து, வேடன் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. அடேயப்பா, என்ன நடிப்பு என அந்தத் துயரத்திலும் வியந்தது கணவன் மனம். 

  `ஐயா! உங்கள் மனைவியின் உடலில் பாய்ந்திருப்பது என் அம்புதான். அந்த அம்பின் அமைப்பைப் பார்த்தவுடனேயே அது என் அம்புதான் என்பதைப் புரிந்துகொண்டேன். 

  ஆனால் நான் அவள்மேல் அம்பெய்யவில்லை. நான் வேட்டைக்காக அவ்வப்போது இவ்விடம் வருவேன். இன்று நான் வந்தே சில கணங்கள்தான் ஆகின்றன. என்னை நம்புங்கள்!` 

  `ஆகா! பொய் சொல்வதற்கும் ஓர் அளவு வேண்டும். சொல்கிற பொய் நம்புகிற மாதிரியாவது இருக்கவேண்டும். நீ மட்டும்தான் இங்கிருக்கிறாய். அம்பும் உன்னுடையதுதான் என்கிறாய். ஆனால் நீ கொல்லவில்லை என்கிறாய். 

   என்னுடன் வா. மதுரையை நெருங்கிவிட்டோம். அரசவைக்குச் சென்று மன்னனிடம் நீதி கேட்போம். உனக்குத் தண்டனை வாங்கித் தராமல் நான் விடப் போவதில்லை.`

 மனைவியின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு குழந்தையைக் கூட்டிக்கொண்டு முன்நடந்தான் அவன். அச்சத்தோடு பின் நடந்தான் வேடன்.

 *அன்று அரசவைக்கு வந்த வழக்கைப் பார்த்து மன்னனுக்கு ஆச்சரியம். 

  வேடன்தான் கொன்றான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிகிறது. ஆனால் வேடனோ தான் கொல்லவில்லை என்று சாதிக்கிறான். என்ன செய்வது இப்போது? 

  மன்னன் மனத்தில் பலவிதச் சிந்தனைகள் எழுந்தன.

  அந்த அம்பு தன்னுடையதுதான் என வேடன் ஒப்புக்கொள்ளத் தேவையே இல்லையே? இது என் அம்பு இல்லை என்று அவன் சொன்னால் யார் மறுக்க முடியும்? 

  அப்படியிருந்தும் வேடன் அந்தப் பெண்ணின்மேல் பாய்ந்துள்ள அம்பு தன் அம்புதான் என்கிறான். அவன் பொய் பேசுபவனாக இருந்தால் அதை மறைத்திருப்பானே?

  கொல்லப்பட்ட பெண்ணுக்கும் வேடனுக்கும் முன்விரோதம் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படியிருக்க அவளை அவன் கொல்ல எந்த முகாந்திரமும் இல்லையே?  

  ஆனால் அந்த இடத்தில் வேறு யாரும் இல்லாதபோது வேடன் தானே கொன்றிருக்க வேண்டும்? 

  என்ன முடிவெடுப்பது என்றறியாமல் மன்னன் மனம் மயங்கியது. வேடனைத் தற்காலிகமாகச் சிறையிலடைக்க உத்தரவிட்ட மன்னன், நீதி விசாரணை நாளை மறுபடியும் தொடரும் என அறிவித்தான்.

   இறந்த பெண்ணின் ஈமச் சடங்கிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவள் கணவனுக்கு வழங்குமாறு காவலர்களிடம் அறிவுறுத்தினான். 

 சிம்மாசனத்திலிருந்து எழுந்து அரண்மனை உள்ளே செல்வதற்கு முன் மறுபடியும் வேடனின் முகத்தைப் பார்த்தான்.

 `பசிக்காகப் பறவைகளையும் விலங்குகளையும் கொல்பவன் நான். காரணமே இல்லாமல் மனிதர்களைக் கொல்வேனா?` என வேடனின் கண்கள் பரிதாபமாக மன்னனிடம் கெஞ்சின. 

 ஒரு பெருமூச்சுடன் மன்னன் அரண்மனையின் உள்ளே நடக்க, அன்றைய சபை அத்துடன் கலைந்தது. 

 *அன்று மாலை தான் வழிபடும் மதுரை சோமசுந்தரக் கடவுள் ஆலயத்திற்குச் சென்றான் மன்னன். சிவலிங்கத்திற்கு முன் கைகூப்பி நின்றான். 

 `தெய்வமே! வேடனைப் பார்த்தால் அப்பாவியாக இருக்கிறான். ஒருவேளை அந்தக் கணவனே மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடுகிறானா? அப்படியிருக்க வாய்ப்பே இல்லை. 

   கணவனின் துயரக் கண்ணீர் நடிப்பல்ல. அங்கு வேறு யாரும் வரவுமில்லை. அப்படியானால் யார் குற்றவாளி? நான் சரியான நீதி வழங்க நீதான் உதவ வேண்டும்!` 

 மன்னன் மனமுருகிப் பிரார்த்தித்த போது திடீரென சன்னிதியிலிருந்து அசரீரி எழுந்தது. 

 `நாளை காலை இறந்த மனைவியின் கணவனை அழைத்துக் கொண்டு மாறுவேடத்தில் செட்டித் தெருவுக்குச் செல். அங்கே திருமணம் நடக்கும் இல்லமொன்று தென்படும். 

   விருந்தினரோடு விருந்தினராய் அந்த இல்ல மணவிழாவில் கலந்துகொள். உனக்கு உண்மை புலப்படும்!`

 மன்னன், சிவலிங்கத்தை வணங்கி அரண்மனை திரும்பினான்....

 *மறுநாள் அதிகாலையில் மாறுவேடத்திலிருந்த மன்னனும் இறந்த பெண்ணின் கணவனும் செட்டித் தெருவிலிருந்த திருமண வீட்டிற்குச் சென்றார்கள். விருந்தினரோடு விருந்தினராய் அமர்ந்தார்கள். எங்கும் மணவிழாக் கோலாகலம். 

 அவர்கள் இருவரின் கண்ணுக்கு மட்டும் இரு எம தூதர்கள் காட்சி தந்தார்கள். எம தூதர்கள் பேசிக் கொண்ட பேச்சு அவர்கள் காதில் மட்டும் விழுந்தது. எம தூதர்களில் ஒருவன் மற்றவனிடம் சொன்னான்:

 `மனத்தைத் திடப் படுத்திக் கொள்! தர்மராஜா சொன்ன வேலையைச் செய்து முடிப்பதுதான் நம் கடமை. இன்னும் சில நொடிகளில் இந்த மணமகன் இறக்க வேண்டும் என்பது அவன் விதி. 

  ஒருவருக்கு இறப்பு நிகழ்வதற்கு அவரவரின் முன்வினைதான் காரணமே அன்றி வேறு யாரும் காரணமல்ல. எப்படி மணமகனின் உயிரை எடுப்பது என்பதை மட்டும் யோசி.`

 `அதுதான் புரியவில்லை. மணமேடையில் ஆரோக்கியமாக அமர்ந்திருக்கும் மணமகனை இறக்கச் செய்வது எப்படி?`

 `நேற்று நண்பகலில் கானகத்தில் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் உயிரை வாங்கினோமே? ஞாபகமிருக்கிறதா? 

   ஏற்கெனவே ஒரு வேடன் எப்போதோ எய்த ஓர் அம்பு அந்த ஆலமரக் கிளையில் சிக்கியிருந்தது. காற்றால் அந்த அம்பை அசைத்து சரியாக அவள் மார்பில் அம்பு விழுமாறு செய்து அவளைக் கொன்றோமே? விதிக்கப்பட்ட மரணக் கணத்தைத் தாண்டி ஓர் உயிரும் உடலில் இருக்க இயலாது. 

  இந்த இல்லத்தின் கொல்லையில் கட்டப்பட்டுள்ள பசுமாட்டின் வாலை முறுக்குவோம். அது அச்சமடைந்து கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடோடி வந்து இந்த மணமகனை முட்டிச் சாய்க்கட்டும். 

  அப்போது மணமகன் உயிரை வாங்கிவிடுவோம். நம் தொழிலில் இரக்கத்திற்கு இடமே இல்லை என்பதை நீ அறிவாய்தானே?`

 `சரி. அப்படியே செய்வோம்!`

 இந்தப் பேச்சு நிகழ்ந்த மறுகணம் அந்தப் பசுமாடு மிரண்டு மணமேடை நோக்கி ஓடி வந்தது. யாரும் தடுப்பதற்குள் மணமகனை முட்டிச் சாய்த்தது. 

  இறந்து விழுந்த மணமகனைக் கண்டு கூட்டம் கதறியது. மன்னனும் மனைவியை இழந்த கணவனும் தலைகுனிந்தவாறு அரண்மனைக்குத் திரும்பினார்கள்.... 

 *வேடன் விடுதலை செய்யப்பட்டான். அவன் மீது தவறுதலாக, தான் கொலைப்பழி சுமத்+தியது குறித்து மனைவியை இழந்த கணவன் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். 

  அந்தக் கணவனிடம் மறுமணம் செய்துகொண்டு புதுவாழ்க்கையைத் தொடங்குமாறும் குழந்தையை நல்லபடி வளர்க்குமாறும் அறிவுறுத்தி, அவனுக்கும் வேடனுக்கும் பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பி வைத்தான் மன்னன். 

  `ஒவ்வொருவரது மரணத்தின் கணமும் முன்னரே நிர்ணயிக்கப் பட்டது. அவரவர் வினையாலேயே அவரவரும் இறக்கிறார்கள். 

   மரண நேரத்தை ஒருகணமேனும் யாரும் தள்ளி வைக்க இயலாது` என்பதை உணர்ந்துகொண்ட மன்னனின் கரங்கள், சோமசுந்தரர் ஆலய கோபுரத்தை நோக்கி வணங்கின.  

நன்றி: 
மாலைமலர்)

............................


கருத்துகள் இல்லை: