31 மார்., 2024

நூல் நயம்

#reading_marathon2024
24RM070
12/75
#எஸ்ராமகிருஷ்ணன் 

புத்தகத்தின் பெயர்: யாமம் ஆசிரியர் பெயர்: எஸ் ராமகிருஷ்ணன் 
பதிப்பகம்: தேசாந்திரி மொத்த பக்கங்கள் 408 விலை ரூ400

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நாவல்கள், மொழிபெயர்ப்பு, சினிமா, கட்டுரைத் தொகுப்புகள், உலக எழுத்தாளர்கள் மற்றும் அவருடைய படைப்புகள் குறித்த கட்டுரை தொகுப்புகள் என இவர் எழுதிக் குவித்த எழுத்துக்கள் அளவற்றது..  நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இயற்றியுள்ளார்.. இவருடைய "யாமம்" என்ற இந்த நாவல் பக்கம் பக்கமாக எழுத்துகளின் குவியல்கள்! கதைகளின் ஊடாக இவர் எவ்வளவு தகவல்களை கொடுத்திருக்கிறார்.. படிக்க படிக்க தீரா பக்கங்கள்!!  பக்கங்கள் என்று சொல்வதை விட அவ்வளவு தகவல்கள், மனித மனதின் விசித்திரங்கள்,அவற்றின் அலைகழிப்பு, போராட்டங்கள், ஏமாற்றங்கள்,துயரங்கள், சந்தோஷங்கள்...  

இந்த நாவலில் மொத்தம் நான்கு கதைகள் ஒவ்வொரு கதையின் ஓட்டமும் ஒரு தெளிந்த நீரோடையின் ஓட்டம் போல நகர்கிறது.. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நகரும் கதைகள்.. எந்த ஒரு இடத்திலும் கதையோ கதை மாந்தர்களோ தொடர்பு கொள்வதே இல்லை.. ஒரே நாவலுக்குள் நான்கு குரு நாவல்கள் தனித்து இயங்குவதை போல தான் கதை சொல்லப்பட்டு இருக்கிறது இந்த நான்கு கதைகளும் "யாமம்" என்ற ஒற்றை புள்ளியில் தொடர்பு கொள்கிறது.. யாமம் என்பது காமம் என்பது குறியீடாகவே அனைத்து கதைகளிலும் தொடர்கிறது... இந்த நான்கு கதைகளின் பின்புலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மதராசபட்டணம் உருவான வரலாறு அமைந்திருக்கிறது நான்கு கதைகளுக்கும் ஆதாரமாக விளங்குவதும் இந்த வரலாறு தான்.. 

மதராசபட்டினம் உருவான காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு இஸ்லாமிய குடும்பம் மிகுந்த வாசனை கொண்ட ஒரு அத்தரை பிரத்தியேகமாக தயாரித்து விற்பனை செய்கிறது.. அந்த அத்தர் பெயர் தான் யாமம்.. 

" சொல்லின் வழியாக இரவை அறிந்து கொள்ள முடியாது. பகலும் இரவும் ஒன்றுக்கொன்று எதிரானதும் அல்ல, உறவானதும் அல்ல. பகல் தீட்டும் சித்திரங்கள் யாவையும் இரவின் கரங்கள் அழித்து மறுஉருவாக்கம் செய்கின்றன.”  

அதனால் இரவு என்னும் ரகசிய நதி எப்போதுமே நம்மை சுற்றி ஓடிக்கொண்டே இருக்கிறது.. இரவை ஒரு சுகந்தம் என உருவாக்குவதும் உங்கள் கையில் என்று சொல்லி ஒரு சூஃபி ஞானி அத்தர் தயாரிக்கும் தொழிலை கரிமின் குடும்பத்திற்கு சொல்லிக் கொடுக்கிறது.. இந்த குடும்பத்தின் ஆண் வாரிசுகளின் மூலம் வழிவழியாக அத்தர் தயாரிக்கும் தொழில் தொடர்ந்து வருகிறது.. கரீம் தன்னுடைய ஆண் வாரிசுக்காக மூன்று பெண்களை மணக்கிறான்.. ராஜ்மானி, வஹிதா மற்றும் சுரையா.. ஆனால் இவர்கள் யாராலும் ஒரு ஆண் வாரிசை பெற்றெடுக்க முடியவில்லை... இதையே நினைத்து தன்னுடைய குடும்பத்தொழில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல ஆண் வாரிசு இல்லை என்று வெறுத்து கரீம் சூதாட்டத்திலும் குதிரை பந்தயத்திலும் தன்னுடைய செல்வங்களை எல்லாம் இழக்கிறான்.. அதன் பிறகு அவனுடைய மனைவிகள் எவ்வாறு தன்னுடைய வாழ்க்கையை கடக்கிறார்கள் என்பது மீதிக் கதை...

இவர்கள் தயாரிக்கும் யாமம் மனிதனின் அடிப்படை காமம் என்ற இச்சையின் குறியீடாகவே அனைத்து கதைகளிலும் வெளிப்படுகிறது... இரவினை சுகந்தமாக்கும் யாமம் (காமம்) அந்த சுகந்தத்தினால் ஆட்கொள்ளப்படும் மனிதர்கள் இப்படி மற்ற அனைத்து கதைகளும் நகர்கிறது... 

இன்னொரு கதையில் வரும் பத்ரகிரி தன்னுடைய தகப்பனாரால் புறக்கணிக்கப்பட்டு தன்னுடைய சித்தியால் பேணி வளர்க்கப்பட்டவன் இவருடைய மனைவி விசாலா.. இவனுடைய தம்பி திருச்சிற்றம்பலம் அவனுடைய மனைவி தையல்நாயகி.. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் லாம்ப்டன் தலைமையில் நில அளவை குழுவில் இணைந்து பணியாற்றும் பத்ரகிரி.. கணிதத்தில் மேதையாக திகழும் திருச்சிற்றம்பலம்.. தன்னுடைய மேற்படிப்பிற்காக பல லண்டன் சென்றும் தன்னுடைய பிரம்மச்சரிய வாழ்க்கையை மிகவும் கட்டுக்கோப்பாக கடைபிடித்து வருகிறான்.. உறவுகளின் பிறழ்வுகளில் ஏற்படும் சிக்கல்களை இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் மீதிக்கதை மிக அருமையாக சித்தரிக்கின்றன... 

நீலகண்டம் என்ற நாயை பின்தொடர்ந்து செல்லும் சதாசிவ பண்டாரம் இன்னொரு கதை.. இந்த கதையின் மூலம் மனிதர்களின் வாழ்வு பெரும்பாலும் அவர்களின் மனங்களில் தோன்றிக்கொண்டே இருக்கும் சிலஅக காரணங்களுக்காக அலைபாய்ந்து கொண்டே செல்வதை மிக நுண்ணியமாக சித்தரித்துக் காட்டுகிறார்,. ஆன்மீக வாழ்வினை ஏற்றுக்கொண்ட பண்டாரத்தின் வாழ்விலும் காமம் இல்லாமல் இல்லை.. இரவு என்பது நாம் நினைத்தவாரில்லை.. அது மனிதனின் அகத்தை நெகிழச் செய்து நம்மை அறியாமலேயே அதன் ஆழத்திற்கு இழுத்துச் சென்று தன் மாயவலையில் சிக்கிக் கொள்ள வைக்கிறது... அந்த நெகிழ்வான இரவில் பண்டாரமும் ஆட்கொள்ளப்படுகிறார்.. 

அடுத்து கிருஷ்ணப்ப கரையாளரின் கதை.. சொத்து பிரச்சனை வழக்கில் உழன்று கொண்டிருக்கும் இவர் தன்னுடைய ஊதாரித்தனத்தால் நிறைய சொத்துக்களை இழக்கிறார்.. வாழ்வின் நிறைய அலைகழிப்புக்குப் பிறகு எலிசபத் என்ற வேசியுடன் தனக்கு சொந்தமான மலைக்குச் சென்று தங்குகிறார்.. மலையின் மீது இருக்கும் காடும் இயற்கையும் எப்பேர்ப்பட்ட மனதினையும் கரைத்து விடும்.. அப்படித்தான் கிருஷ்ணப்பனும்.. மலையின் மீது குடியேறியதில் இருந்து தன்னுள் ஏற்பட்ட மனமாற்றம் கடைசியில் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விட்டுக் கொடுத்து அவர் தங்கியிருக்கும் அந்த மலையை மட்டும் எடுத்துக் கொண்டு அதையையும் எலிசபத்திற்கு எழுதிக் கொடுக்கிறார்.. அதன் பின்பு அந்த மலை சரிவில் தேயிலை தோட்டம் உருவான கதையையும் கூறியுள்ளார்.. இந்த கதையின் எலிசபெத் என்னவானாள் என்பதை வாசகர்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. 

இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத இந்த நான்கு கதைகளிலும் இதுதான் முடிவு என்று இல்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கை பயணங்களாக தொடர்கிறது... கரிமின் கதை பேராசையையும் , சதாசிவ பண்டாரத்தின் கதை ஆன்மீகப் பாதையையும், பத்ரகிரியின் கதை சபலத்தினால் ஏற்படும் சிக்கல்களையும்,  கிருஷ்ணப்ப கரையாளரின் கதை பல்வேறு சலனங்களுக்குப் பிறகு ஏற்படும் அமைதியையும் உணர்த்துகிறது.. மனித மனங்களின் எண்ண ஓட்டங்களுக்கு நாம் எப்படி எதிர்வினை புரிந்தால் எந்த இடத்தை அடையலாம் என்பதை தெளிவாக விளக்கும் கதைகள் அற்புதமான வாசிப்பு அனுபவம்...

நன்றி:

கருத்துகள் இல்லை: