1 ஏப்., 2024

புத்தக வெளியீட்டு விழா


*ஹானிமன் காவியம் – கவிதை மொழியில்!*
*புத்தக அறிமுக விழா!*

“எந்த கல்லறையில் புதிதாய் மலர்கள் இருக்கிறதோ, அதுவே மருத்துவர் ஹானிமனின் கல்லறை”

- பாரிசில், ஹானிமன் கல்லறை எங்கே என விசாரிப்பவர்களிடம் கல்லறை பாதுகாவலர்கள் சொல்லும் பதில்!

18ம் நூற்றாண்டு. ஜெர்மனியில் மருத்துவர் ஹானிமன் அலோபதி மருத்துவராய் படித்து,  மருத்துவம் பார்த்து, அதன் தன்மைகளால் வெறுத்து, ஹோமியோபதி மருத்துவம் ஒன்றை புதிதாய் உருவாக்கி, அதனால் பல சோதனைகளை எதிர்கொண்டு, வெற்றிகரமாக அமுல்படுத்தி, மனிதர்களின் நோயை தீர்த்திருக்கிறார். அவர் தொடங்கி வைத்த அந்த மருத்துவம் இன்று உலகம் முழுவதும் முக்கிய மருத்துவ முறையாய் பரவி நிற்கிறது.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக  நானும் ஹோமியோபதி மருத்துவத்தைத் தான் குடும்பத்தோடு பார்த்துவருகிறேன்.  மருத்துவர் சத்யா அவர்களை  ஒவ்வொருமுறை பார்க்கும் பொழுது, ஹானிமன் குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்வார்.  அப்பொழுது மட்டும் அவர் கண்களில் ஒருவித ஒளியோடு உற்சாகமாய் பேசுவார். 

அப்படிப்பட்ட மருத்துவர் ஹானிமனைப் பற்றி அவருடைய துணைவியார் தோழர் மோகனா அவர்கள் மருத்துவர் ஹானிமன் வாழ்க்கையை கவிதை மொழியில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடராக எழுதி,  இப்பொழுது புத்தகமாய் வெளியிட்டிருக்கிறார்கள் என்பது முக்கியமான செய்தி.

நேற்று (31/03/2024) வெளியீட்டு விழா நடைபெற்றது.  அப்ரோச் மையத்தின் தோழர்கள், நண்பர்கள், என்னைப் போல ஹோமியோபதி மருத்துவம் பார்ப்பவர்கள்,  குறிப்பாக, தோழர்கள் சத்யா – மோகனா அவர்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் என ஒரு குடும்ப நிகழ்வாக  சிறப்பாக நிறைவேறியது.

நேற்று வெளியீட்டு விழாவில், ஹோமியோபதி மருத்துவம் தங்கள் உயிரை எப்படி காத்தது, நோயை தீர்த்தது என்பதை உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துகொண்டனர்.   

மருத்துவர் ஹானிமன் தனது ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் இன்றைக்கும் மனிதர்களுடைய நோய்களை குணப்படுத்திக்கொண்டே இருக்கிறார். அந்த  நன்றியுணர்ச்சியில் தான் மனிதர்கள் ஹானிமனின் கல்லறையில் தினந்தோறும் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்திக்கொண்டே இருக்கிறார்கள் என மருத்துவர் இராமசாமி உணர்ச்சிப்பூர்வமாய் பகிர்ந்துகொண்டார்.

மருத்துவர் சத்யா – மோகனா இருவரும் ஒரு நல்ல படைப்பை நமக்கு தந்துள்ளனர். அதுவும் எல்லோரும் படித்து புரிந்துகொள்ளும் விதத்தில் கவிதை நடையில் தந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி.   

அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்.  புத்தகத்தை விரைவில் படித்து என் உணர்வுகளை ஒரு பதிவாக எழுத முயல்கிறேன்.

- சாக்ரடீஸ், பேஸ்புக்கில்….!

கருத்துகள் இல்லை: