"கதை கதையாம் காரணமாம் "
நாகூர் ரூமி. சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் முதல் பதிப்பு 2017 விலை ரூபாய் 111 மொத்த பக்கங்கள் 128.
மார்கழி முழுதும் 4000 திவ்ய பிரபந்தம் வாசிக்கும் நான்
மகா பாரதம் சோ கை பிடித்து படித்தேன் . ,
பேரபிள்ளைகளுக்கு கதை சொல்ல
ஆங்கில பட பாரத , ராமாயண புத்தகம்
கொண்டு சென்று வாசித்து காட்டுவேன் !
மகா பாரத இதிகாச காவியத்தை எத்தனையோ பேர் ,
எத்தனையோவிதமாக , எத்தனை எத்தனையோ விதமாக ,
காலத்தின் மாறுதலுக்கேற்றவாறு ,அதன் போக்கின் படி
எழுதி சென்றுள்ளார்கள் சுகமாக
சுவையாக !
தமிழ் நாட்டில் இருபதுக்கும் அதிகமான புத்தகங்கள் .
வில்லிபுத்தூரார் பாரதம் போன்ற சிலாகிக்க தக்க சில .! எஸ் . இராமக்ரிஷ்ணனின் " உப பாண்டவம் "
அவரின் தமிழுக்காக வாங்கி வைத்து
படிக்கும் புத்தங்களில் ஒன்று .
தலை கோதி
கதை சொல்லும்
விரல் நுனி வித்தை அபாரம் .!
எத்தனை பாத்திரங்கள் ,
முத்திரை பாதிக்கத்தக்க வகையில்
சித்திரமாக வரைந்த விதம் அற்புதம் ..!
புது வாடா
மல்லிகை காட்டில் ,
கீதைக் குரல் தழுவிட ,
இரு இரவு பகல்
இன்ப நூற்பயணம் தான்..!..
பால குமாரன் அவர்கள் மகா பாரதம் எழுதி தற்போது பதிப்பிட்டுள்ளார் என அறிகிறேன்.
ஜேம்ஸ் ஆலன் பற்றியும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஜேம்ஸ் ஆலன் என்ற அந்த அபாரமான தத்துவ ஞானியால் கவரப்பட்டவர்கள் தமிழில் இருவர். ஒருவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை.
ஜேம்ஸ் ஆலன் நூல்களை அகமே புறம், மெய்யறிவு, மனம்போல வாழ்வு என்பன போன்ற தலைப்புகளில் சிறுசிறு நூல்களாகத் தமிழில் மொழிபெயர்த்தவர்.
இன்னொருவர் மறைந்த டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. ஆனந்த விகடன் வார இதழில் ஜேம்ஸ் ஆலன் சிந்தனைககளை எழுதி வாசகர்களைக் கவர்ந்தவர்.
"'எவன் அறிவின்மையால் மதுவைக் குடிக்கிறானோ தருமமும் ஒழுக்கமும் அவனை விட்டு உடனே விலகும். அவன் எல்லோராலும் இகழப்படுவான். இது என்னுடைய முடிவு. இன்று முதல் மக்கள் இதை சாஸ்திரமாக வைத்துக் கொண்டு நடக்க வேண்டும்.' என்று சுக்ராச்சாரியார் சொல்லும் கருத்தை இன்றைய இளைஞர்கள் கட்டாயம் அறிந்து பின்பற்ற வேண்டும்.
கதை நடுவே மதுவிலக்கு குறித்தும், குடி குடியைக் கெடுக்கும் என்று குடிகெடுக்கும் கூச்சமில்லாத அரசுகளின் கூச்சல் குறித்தும் சாட்டையைச் சொடுக்குகிறார் ரூமி.
இன்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சுயமுன்னேற்ற நூல்கள் நிறைய வெளிவந்து கொண்டிருக்கின்றன. மகாபாரதத்தை ஆழமாகப் படித்தால் இந்த மாதிரிப் புத்தகங்கள் தேவையில்லை என்றே சொல்லிவிடலாம்.' என்று கதைகதையாம் காரணமாம் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் நாகூர் ரூமி.
அவர் சொல்லும் கூற்று எவ்வளவு உண்மை என்பதை அவர் எழுதியுள்ள இந்த மகாபாரத நூலே விளக்குகிறது.
போதனைக் கதைகள். நீதிக் கதைகள். விசித்திரக் கதைகள். மாயாஜாலக் கதைகள். தேவதைக் கதைகள். தெய்வக் கதைகள். பேய்க் கதைகள் என எல்லாம் அடங்கியது தான் மகாபாரதக் கதை.
பாரதம் ,அது ஆதிக் கதை. மக்களின் கதை இல்லைதான். மன்னர் குடும்பத்துக் கதையே என்றாலும் மனிதர்களை மனிதர்களுக்குப் புரியவைக்க மேற்கொள்ளப்பட்ட மகத்தான பெருங்கதையாடல் உத்தி.
###***
ஆசிரியர் குறிப்பு
1980களில் எழுதத் தொடங்கிய நாகூர் ரூமி 45 நூல்கள் எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை, நாவல், சுய முன்னேற்றம், வாழ்க்கை வரலாறு, மதம், ஆன்மீகம், தியாகம் என பல தளங்களில் இவர் இயங்குபவர். இவரது இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது. இவரது இலியட் காவிய தமிழாக்கம் நல்லி - திசையெட்டும் விருதினைப் பெற்றது.
#####
சுகி சிவம் அவர்கள் தனது அணிந்துரையில் இவ்வாறு கூறுகிறார்:
“சாபம் என்பது 'ஹையர் ஃப்ரீக்வன்ஸி'யிலிருந்து லோயர் ஃபிரீக்வன்"க்குப் போ என்று அவர்கள் சபிப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். க்வாண்டம் இயற்பியல் அப்படித்தான் கூறுகிறது” என்று வித்தியாசமாகச் சொல்கிறார்.
யட்சனும் தருமனும் உரையாடும் அந்த ஒரு பகுதிபோதும் தர்மத்தைப் புரிந்துகொள்ள. மிகமிகப் பழைய ஐராசந்தன் கதையைக்கூட அண்மைக்காலத்து லேட்டரல் திங்கிங் (Lateral Thinking) என்று கொண்டு மாத்தியோசி என்று நவீனப்படுத்தும் ஆசிரியரின் அணுகுமுறை மெச்சத்தக்கது.
சூஃபிகள் பற்றி தமிழில் அவர் படைத்திருக்கும் பேரிலக்கியத்தில் சொக்கிப்போனவன் நான். இந்து மதத்தின் இணையற்ற இதிகாசமான மஹாபாரதத்தை அவர் படித்ததும், அதிலிருந்து சில பொக்கிசங்களைப் பிடித்ததும், அதை ஒரு நூலாக வடித்ததும் வாசித்தவருக்கு வாய்த்த வரம்."என்று ஆணித்தரமாக எழுதுகிறார் சுகி சிவம் அவர்கள்.
#####
திருப்பூர் கிருஷ்ணன் தனது முகவரியில் இவ்வாறு கூறுகிறார்:
"மகாபாரதக் கதைகள் சிலவற்றை இன்றைய கண்ணோட்டத்தில் தேவைப்படும் நீதிகளுக்கான களங்களாகக் கண்டு ஆசிரியர் எழுதிச் செல்வது அவரது நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்று. இஸ்லாமியச் சான்றோரோடும் புத்த பெருமானோடும் ஆங்காங்கே சொல்லப்படும் ஒப்பீடுகள் நூலின் தரத்தை மிகுதிப்படுத்துகின்றன.
ஜேம்ஸ் ஆலன் பற்றியும் நூலாசிரியர் போகிற போக்கில் ஒரு பெயராகக் குறிப்பிடுகிறார். இந்நூலைப் படிக்கும் போது ஒருவேளை ஜேம்ஸ் ஆலன் மகாபாரதத்தைப் படித்திருப்பாரோ என்று கூட நம் மனத்தில் ஐயம் எழுகிறது! ராமாயணத்தைப் பற்றியும் இதுபோன்ற ஒரு நூல் எழுதுவாராக !"என்று வேண்டுகோள் வைக்கிறார் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்.
#####
பா. ராகவன் அவர்கள் தனது அணிந்துரையில் இவ்வாறு கூறுகிறார்:
ரூமியின் இந்நூல் ஒரு கட்டத்துக்கு மேல் மகாபாரதக் கதாபாத்திரங்களைப் பேசுவதை ரகசியமாக நிறுத்திவிடுகிறது. இது ரூமியைப் பற்றியும் என்னைப் பற்றியும் உங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்துவிடுகிறது.
இது காலத்தின் பின்னால் செல்வதல்ல. நமக்கும் பின்னால் வரப்போகிற காலத்துக்குக் கதவு திறந்து வைக்கிற பேரனுபவம்.
நீங்கள் ரூமியின் கண்ணைக் கொண்டு பாரதத்தை மீண்டுமொரு முறை அணுகுங்கள். இன்னும் பல தரிசனங்கள் நிச்சயம் அகப்படும்"என்கிறார் பா ராகவன் அவர்கள்.
#####*#
இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம் :
கதை கதையாம் காரணமாம் மகாபாரத வாழ்வியல் தோற்றத்தை நாகூர் ரூமி அவர்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் பதம் பிரித்து பாடம் எடுத்து இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
1விக்னேஸ்வர எழுதுகோல்.
2கங்கையின் மைந்தன்
3பிதாமகன் பீஷ்மர்
4சஞ்சீவினி மந்திரம்.
5.யயாதி வியாதி.
6.இந்திரன் தோட்டத்து முந்திரி
7.கன்னி கழிந்த கன்னி
8.சின்ன தவறு பெரிய தண்டனை
9.அகத்திய ஜீரணம்
10.பீம் பாய் .
11.உள்ளத்தில் நல்ல உள்ளம்.
12. கடவுள் பசி.
13. தர்மபுத்திரன்
14.மாத்தி யோசி.
15. கற்பனா சக்தி
16சேனையா? சாரதியா?
17. யுத்த தர்மங்கள்.
ஒவ்வொரு தலைப்பின் கீழும் மகாபாரத கதைகளை சொல்லும் போதே ஆசிரியர் தனது கை சரக்கையும் விட்டு நம்மை அதிசிய அறிவுலக ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
1) யயாதி வியாதி:
‘ "என் அன்பு மகனே! காமத் தீயானது விரும்பியதை அனுபவித்து விடுவதால் மட்டும் அடங்கி விடுவதில்லை. தீயில் நெய்யை மேலும் மேலும் ஊற்றுவதால் தீ அணையாது. இன்னும் தீவிரமாகத் தான் கொழுந்து விட்டு எரியும். பொன் பொருள் மண் பெண் எதனாலும் ஆசைகள் அடங்கிவிடுவதில்லை. அத்தனைக்கும் ஆசைப்படாதே மகனே. அது முட்டாள்தனமானது.' என்ற வரிகள் இன்று கட்டாயம் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய வரிகள்.
யுயாதி கதையில், ஆசையை விடமுடியாத அந்த அசட்டுக்கிழவன் பேசும்பேச்சு வெகு அருமை. "என் அன்பு மகனே! காமத்தீயானது
விரும்பியதை அனுபவித்து விடுவதால் மட்டும் அடங்கிவிடுவதில்லை. தீயில் நெய்யை மேலும் மேலும் ஊற்றுவதால் தீ அணையாது. இன்னும் தீவிரமாகத்தான் கொழுந்து விட்டு எரியும். பொன், பொருள், மண், பெண் எதனாலும் ஆசைகள் அடங்கிவிடுவதில்லை. அத்தனைக்கும் ஆசைப்படாதே மகனே, அது முட்டாள்தனமானது. விருப்பும் வெறுப்பும் இல்லாத அமைதி நிலையை அடைவதே ஆசையை வெற்றிகொள்ளும் வழி. போதும், உன் இளமையை நீ திரும்பப் பெற்றுக்கொள்" என்று கூறி மகனை அணைத்துத் தன் முதுமையை மீண்டும் பெற்றுக்கொள்கிறான். ஆசையை அனுபவித்துத் தீர்க்க முடியாது. விழிப்பின் மூலமே வெல்ல முடியும்.
மஹாபாரதத்தை ரூமி படித்ததும், அதிலிருந்து சில பொக்கிசங்களைப் பிடித்ததும், அதை ஒரு நூலாக வடித்ததும் வாசித்தவருக்கு கிடைத்த தவப் பயனால் கிடைத்த ஒன்று.
மகாபாரதத்தில் காணக்கிடைக்கின்ற குட்டிக்கதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து கதைகதையாம் காரணமாம் என்றொரு அழகிய நூலை வழங்கியிருக்கிறார். கதைகள், குழந்தைகளுக்கானவை, என்று நினைத்துவிட முடியாது ,எல்லோருமே குழந்தைகள் தான், எல்லோருக்கும் பொருந்தக் கூடிய கதைகள் இவை.உண்மையில் எல்லாமனிதர்களும் என்றைக்கும் குழந்தைகள்தான்.
மஹாபாரதமே ஒரு நெடுங்கதை என்றாலும், அதனுள் படரும் குறுங்கதைகள் ஞானத்தகவல்களை தரவல்லவை.
2) கங்கையின் மைந்தன்:
சந்தனு மகாராஜா தனக்குப் பிறந்த ஏழு குழந்தைகளையும் தன் மனைவியான கங்கை கொல்லும்போது காமம் காரணமாகக் கேள்விகேட்கத் தயங்கி வாய்மூடி மௌனியாக இருந்துவிட்டு, எட்டாவது குழந்தையைக் கொல்லும்போது மட்டும் பெண்ணே நீ என்ன பேயா? என்று கேட்கிறார். ஏழு பிறக்கிறவரை எது பெண்? எது பேய்? என்று அவருக்கு ஏன் புரியவில்லை. உடலில் பலம் இருக்கிறபோது காமம் தர்ம நியாயங்களைச் சிந்திக்க விடுவதில்லை. கண்ணை மறைத்துவிடுகிறது.
இந்தக் கதை நடுவே வேறொரு உண்மையை வெளியிடுகிறார் ரூமி. எட்டாவது குழந்தை காப்பாற்றப்பட்டதுமல்ல கருணை. முன்னர் ஏழு குழந்தைகள் கொல்லப்பட்டதும் கருணைதான் என்கிறார். இதுதான் வாழ்வின் பெருநுட்பம்.
3) பிதாமகன் பீஷ்மர்:
பீஷ்மர் தகப்பனுக்காக தன் எல்லாச் சுகங்களையும் விட்டுக்கொடுக்கின்றபோது "மஹாபாரதம் மஹா புருஷர்களுடைய வாழ்க்கை. பிறருக்காக, தன்னுடைய நியாயமான உணர்ச்சிகளையும் தியாகம் செய்கிறார்கள் அந்த மஹா புருஷர்கள்” என்று எழுதுகிறார்.
4)சஞ்சீவினி மந்திரம்:
சுக்ராச்சாரியாரிடம் இறந்தவரை எழுப்பும் சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக்கொள்ள வருகிறாள் கசன். அவன் எதிரணித்தலைவனின் மகன் என்றாலும் சுக்ராச்சாரியார் ஏற்றுக்கொள்கிறார் என்பது ஒரு ஆச்சாரியாரின் ஆச்சரியமான பண்பு.
5)இந்திரன் தோட்டத்து முந்திரி:
இந்திரன் தோட்டத்து முந்திரி என்கிற கதையில் இரண்டு வரிகளை முன்வைக்கிறார். “செய்ததை எண்ணி வருந்தும் மனிதனே, வருந்துவதை எண்ணி எப்போது வருந்தப்போகிறாய்"
அதே போல் வித்தாசுரனை சுயலாபத்திற்காக இந்திரன் கொன்ற பிறகு தன் அமைதியை இழக்கிறான். அவனது குற்ற உணர்வை விளக்கும் ஆசிரியர் ""இந்திரன் பிரச்சனை இங்கும் முடிந்துவிடவில்லை. ஏனெனில் பிரச்சனை என்பது வெளியில் உள்ள ஒரு பொருள் சம்பந்தப்பட்டதே அல்ல... அது மனம் சம்பந்தப்பட்டது. ஷேக்ஸ்பியரின் 'மேக்பெத்' நாடகத்தில் கொலைக்குத் தூண்டுதலாக இருந்து மேக்பெத்தின் மனைவி மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். "அரேபிய நாட்டின் அனைத்து வாசனைப் பொருள்களையும் கழுவினாலும் என் கையில் உள்ள ரத்தத்தின் துர்நாற்றத்தைக் கொஞ்சம்கூட வாசமாக மாற்ற முடியாது" என்று கூறுவாள். உறுத்தல் மனதில் இருக்கும்வரை அது குத்திக்கொண்டேதான் இருக்கும் என்பதற்குப் பொருத்தமான மேற்கோள் அல்லவா.
நாகூர் ரூமியின் இந்தப் புத்தகம், மகாபாரதத்தின் மிக முக்கியமான சில கதாபாத்திரங்களின் வாழ்வைத் தொட்டுக்காட்டி, அதன் சமகாலப் பொருத்தங்களை சுவாரசியமாக சிந்தித்துப் பார்க்க வைக்கிறது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நம்மால் இந்திரனைப் புரிந்துகொள்ள முடியாது. எல்லாக் கதைகளிலும் ஒரு பொறுக்கியாகவே சித்திரிக்கப்படுகிறவன் எப்படி தேவர்களின் தலைவனாகவே எப்போதும் இருந்தான் என்ற கேள்விக்கு விடையே கிடையாது. இந்திரன் என்பவன் ஒரு நபரல்ல. அது ஒரு பதவி. பலபேர் வந்து போன / போகும் பதவி.
6)அகஸ்தியர் சாபம்:
அகஸ்தியர் சாபத்தால் நகுசன் பாம்பாக மாறி வீழுவதை நவீன உளவியல் மேதை சிக்மன் ஃப்ராய்டு சிந்தனையுடன் பொருத்தி 'பாம்பு காமத்தின் குறியீடு' என்ற ஆசிரியரின் சிந்தனைக்கு ஒரு சபாஷ்.
வில்வலன் வாதாபி கதைக்கு 'அகத்திய ஜீரணம்' என்கிற தலைப்பே அசத்துகிறது பீம்பாய் கதையில் பாம்புகளின் விஷத்தைவிட மனிதர்களின் விஷம் கொடுமையானது என்கிற செய்தி யோசிக்க வைக்கிறது.
7) உள்ளத்தில் நல்ல உள்ளம்:
பாரதத்தில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் பாத்திரம் கர்ணன். அவன் பரசுராமரிடம் சாபம் பெறும்போது, சாபத்தைப் பற்றிய ஒரு சயின்ஸை ரூமி வெளிப்படுத்துகிறார். "சாபம் என்பது 'ஹையர் ஃப்ரீக்வன்ஸி'யிலிருந்து லோயர் ஃபிரீக்வன்"க்குப் போ என்று அவர்கள் சபிப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். க்வாண்டம் இயற்பியல் அப்படித்தான் கூறுகிறது" என்று வித்தியாசமாகச்
சொல்கிறார். கர்ணன் துரியோதனனோடு இணைந்ததை மனித மனங்களின் குறைபாடுடைய ஓர் அணுகுமுறை .எதிரியின் எதிரிக்கு நண்பனாகும் கீழான மனோபாவம் என்கிற ஆசிரியரின் கருத்து கவனத்திற்குரியது.
சுவைகுறையாத கதைகள், அழகான எழுத்து நடை, நீதியையும் தர்மத்தையும் நிலைத்த உண்மைகளையும் ஒரு மின்னலைப்போல் வெளிப்படுத்தும் ஒளிச்சிதறல்கள்,வாழ்க்கைத் தத்துவங்களைக் கருவில் சுமந்திருக்கும் இந்தக் கதை இலக்கியங்களை மனித குலம் என்றென்றும் புறம்தள்ள முடியாது.
8)தர்மபுத்திரன்:
யட்சனும் தருமனும் உரையாடும் அந்த ஒரு பகுதிபோதும் தர்மத்தைப் புரிந்துகொள்ள.
9) மாத்தி யோசி:
மிகமிகப் பழைய ஐராசந்தன் கதையைக்கூட அண்மைக்காலத்து லேட்டரல் திங்கிங் (Lateral Thinking) என்று கொண்டு மாத்தியோசி என்று நவீனப்படுத்தும் ஆசிரியரின் அணுகுமுறை மெச்சத்தக்கது. மதபேதம் கடந்தும் மஹாபாரதம் மனித குலத்துக்கானது என்பதை இந்த நூல் நிரூபிக்கும். குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயன்படுவதுபோல் தோன்றி சகலருக்கும் பயன்படக்கூடிய இரகசியங்கள் இந்நூலில் இருக்கின்றன.
இந்த நூலும் சிறுவர்களுக்கானதுபோல் தோன்றி சகலருக்கும் பயன்படும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக