*அஃகம் சுருக்கேல்*
என் கடைசித் தம்பிக்கும் எனக்கும் 18 வயது இடைவெளி. அவன் ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது சில நாட்கள் அவனை பள்ளியில் கொண்டுவிட்டுவர நான் செல்வது வழக்கம்.
அங்குள்ள ஒரு நடைமுறை என்னை மிகவும் கவர்ந்தது. ஆசிரியர் வரும்வரை லீடர் கட்டுப்பாட்டில் வகுப்பு இருக்கும். ஒரு மாணவன் ஆசிரியர் மேஜை அருகே நின்றுகொண்டு ஆத்திச்சூடியை ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல மற்ற மாணவர்கள் அனைவரும் சேர்ந்து அதைத் திருப்பிச் சொல்வார்கள். ஒளவையின் நீதியுரைகள் அந்த இளம் வயதில் மனதில் வேரூன்ற அருமையான வாய்ப்பு. போற்றப்பட வேண்டிய நடைமுறை. தற்போது வழக்கில் இருக்கிறதா என்று தெரியவில்லை. நிறைய பள்ளிகளில் செயல்பட்டுவந்த இந்தச் செயல்முறை நின்று போயிருக்கலாம் என அறிகிறன். பகுத்தறிவுப் பகலவன்கள் கை மேலோங்கியபின் இது சாத்தியமே.
அந்தப் பள்ளி மாணவர்களிடம் அது எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தியதோ தெரியாது. ஆனால் பல வருடங்கள் சென்ற பின்னும் என்னிடம் இருந்தது.
அதிகாலை நடைபயிலச் செல்லும் பழக்கம் நான் அலுவலகக் குடியிருப்பிற்கு மாறிய பின், நாற்பது வயதைத் தொடும்போது ஏற்பட்டிருக்கலாம்.
பொழுது புலர்வதற்குமுன் தினமும் நான்கு கிலோ மீட்டர் நடை. ஜபம், பிரார்த்தனை துணை வரும். பற்றாக்குறைக்கு ஆத்திச்சூடியை ஓதி, அதன் பொருளை மனதில் கொள்வது நடக்கும். ஒவ்வொரு வரியாகச் சொல்லிச் சொல்லி அதன் பொருளை நினைவுகூர்வேன்.
இறுதியாக அஃகம் சுருக்கேல் என்று முடியும்போது உதைக்கும். அப்போது அதன் பொருள் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. தேடிப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொள்வேன். மேலோட்டமாக அது வாணிபம் செய்வோர் பொருளின் குறைத்து, ஏமாற்றக்கூடாது என்று பொருள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அனைவருக்கும் பொருந்துவதாக அந்த மணிமொழி இருக்கவேண்டும் என்று
மனதிற்குள் நானாக பொருள் செய்து கொண்டேன்.
யாரையும் முற்றிலுமாக உதவாக்கரை (good for nothing) என்று என்னால் கருதமுடியவில்லை. அது படைத்தவனையே குற்றம் கூறுவதாக அமையும். ஒவ்வொரு படைப்பிற்கும் குறைந்த பட்சம் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.
ஒவ்வொருவரிடமும் ஒரூ தனிச்சிறப்பு, தனித்தன்மை இல்லாமல் போகாது. பலர் வாழ்க்கையில் அந்த விழிப்புணர்வு ஏற்படாமல் போனால் அது ஒரு பெரிய சோகம்.
ஆழ்ந்து சிந்திக்க, மனச்சித்திரம் விரிந்தது.
முதல்படி தனது தனித்தன்மை பற்றிய விழிப்புணர்வு - awareness.
அது என்ன என்று கண்டுகொள்வது (identifying it) இரண்டாவது படி.
அது பட்டை தீட்டப்படாத வைரமாக இருக்கக்கூடும். அதை மெருகூட்டி வளர்த்தெடுப்பது (nurturing) மூன்றாம் படி.
அந்தத் திறமை, அந்தத் தனித்தன்மை வெளிப்பட வேண்டும், அதை வெளிக்கொணர வேண்டும்.(manifesting it).
குறைந்த பட்சம் அது அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பயன்பட வேண்டும்.
அது மேலும் மேலும் வளர்ந்து இந்த சமுதாயத்திற்கும், ஏன் இந்த உலகிற்கே பயன்தரும் என்றால் அது அற்புதம் ! அதுவும் தன்னலம் கருதாத உன்னதமான செயல் என்றால் பெரிதும் போற்றத்தக்கது. (application part)
ஒரு மொட்டு மலராமல் அப்படியே கருகுவதைப் போல் பலபேர் தங்கள் திறமையை வீணடித்து, அழிந்து போகவிடுவது வேதனை!
வியாபாரிகள் விற்கும் பொருள்களின் அளவைக் சுருக்கி ஏமாற்றுவதைவிட, நம்மை நாமே சுருக்கிக் கொண்டு, நம்மை நாமே ஏமாற்றுவது பல்லாயிரம் மடங்கு தவறானது. நாம் முழுமைபெறாமல் (fulfillment) போவது மிகப்பெரிய துயரம்!
இதுபோல் ஒரு திருக்குறள் அனுபவம் அடுத்து வரும்.
📕📕📕📕📕📕📕📕📕📕📕