6 நவ., 2025

அஞ்சலி


பெ.சு. மணி பிறந்த தினம்: நவம்பர் 2
.......................
*குருதேவரின் அன்பர் எழுத்தாளர் பெ.சு.மணி*
.......................
  *எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் எழுத்தாளர் பெ.சு. மணி. 

 `வ.வே.சு. ஐயரின் கட்டுரைக் களஞ்சியம், வ.வே.சு. ஐயரின் கம்பராமாயணக் கட்டுரைகள்` உள்ளிட்ட பல தொகுப்பு நூல்களை வெளியிட்டவர். 

 `இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பழந்தமிழ் இதழ்கள், வீரமுரசு சுப்பிரமணிய சிவா, எழுத்திடைச் செழித்த செம்மல் கா.சி. வெங்கட்ரமணி` உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரும் கூட. 

  ம.பொ.சி.யின் அன்பரான இவர் அவரது கொள்கைகளாலும் அவர் நடத்திய செங்கோல் இதழாலும் பெரிதும் கவரப்பட்டார். 

   ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் சென்னை மேற்கு மாம்பலச் செயலாளராகவும் இயங்கினார். 

  தொடக்கத்தில் அஞ்சல் துறை ஊழியராகப் பணியாற்றியவர். சென்னை மயிலை ராமகிருஷ்ண மடம், அடையாறு பிரம்மஞான சபை போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். 

 வெ. சாமிநாத சர்மாவின் அன்பரான இவர் அவரது இறுதிக் காலங்களில் அவரைப் பராமரித்தவரும் கூட. சாமிநாத சர்மா தம் நூல்கள் அனைத்தின் உரிமையையும் பெ.சு. மணிக்கே வழங்கினார். 

   சாமிநாதசர்மா காலத்திற்குப் பிறகு சர்மாவின் நூல்கள் நாட்டுடைமை ஆகின. 

  சாகித்ய அகாதமிக்காக, வாழ்வும் பணியும் வரிசையில் தாம் நேசித்த ம.பொ.சி. பற்றியும் தாம் பராமரித்த சாமிநாத சர்மா பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார் பெ.சு. மணி. 

  ராமகிருஷ்ண மடத்தின் அன்பர். `சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள், தூய அன்னை ஸ்ரீசாரதா தேவி, வீரமுரசு சுப்பிரமணிய சிவா, ` போன்ற பல புத்தகங்களை எழுதியவர். அவை ராமகிருஷ்ண மடத்து வெளியீடுகளாக வந்துள்ளன. 

  இலங்கைக்குச் சென்று அங்கு தங்கி இலங்கையில் வாழ்ந்த ராமகிருஷ்ண மடத்துத் துறவியான விபுலானந்தர் குறித்துத் தகவல்கள் சேகரித்து `சுவாமி விபுலானந்தரின் தலையங்க இலக்கியம்` என்ற நூல் எழுதியவர். 

  `புகழ்பூத்த` என்ற சொற்றொடரில் பெ.சு.மணிக்கு விருப்பம் அதிகம். தம் நூல்களில் ஆங்காங்கே இந்தச் சொற்றொடரை அதிகம் பயன்படுத்தியிருப்பார். அவர் பாணியிலேயே சொல்வதானால் பெ.சு.மணி ஒரு புகழ்பூத்த அறிஞர்!

 பெ.சு. மணி தீவிர பாரதி அன்பரும் கூட. `பாரதியாரின் ஞானரதம் மூலமும் ஆய்வும்,  சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்` போன்ற நூல்கள் இவரது படைப்புகளே. 

  எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியர். தினமணி இவரது பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. தாம் வாழ்ந்த காலத்தில் தினமணி எழுத்தாளர் என்றே அறியப்பட்டார். தமிழ்நாடு அரசு பாரதி விருது அளித்து இவரை கெளரவித்துள்ளது. 

  கதர் வேட்டி, கதர் ஜிப்பா அணிந்து சைக்கிளில் சென்னையை வலம் வந்தவர். சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்தவர். எளிய வாழ்வு வாழ்ந்த பெரிய மனிதர். பழகுவதற்கு இனிய பண்பாளர். 

  கணீரென்ற குரலில் பாடக் கூடிய வல்லமை படைத்தவர். இவர் கலந்துகொள்ளும் கூட்டங்கள் பலவற்றில் இவர்தான் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடவேண்டும் என்பது கூட்டத்திற்கு வந்துள்ளோரின் நேயர் விருப்பமாக அமையும். 

    சீர்காழி கோவிந்தராஜன் குரலைப் போன்றதொரு வெண்கல மணிக்குரல் அவருடையது. 

  அவர் காலமாவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அவரது அன்பு மனைவி திருமதி சரஸ்வதி காலமாகி விட்டார்.  பெ.சு. மணி , தம் மனைவி பற்றி `நான் மறவேனே` என்றொரு நூல் எழுதியுள்ளார். 

   இறுதிக் காலங்களில் தில்லியில் தம் மகள் வீட்டில் வசித்துவந்த அவர், தம் 87ஆம் வயதில், காலமாவதற்கு முன்னால் `ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா!` என குருதேவரின் திருநாமத்தை உச்சரித்த படியே மறைந்தார்.  

  `ஆய்வு நோக்கில் தகவல்களைத் திரட்டி, உண்மைக்குப் புறம்பான ஒரு கற்பனைச் செய்தியும் இல்லாமல் நூல் எழுதும் சிறந்த எழுத்தாளர்` என பெ.சு. மணியை மதிப்பிடலாம். 

   ஆவணக் காப்பகத்தில் கடின உழைப்பின்பேரில் அவர் திரட்டிய பல ஆய்வுத் தகவல்கள் அவரது நூல்களில் கொட்டிக் கிடக்கின்றன. 

  அவரது நூல்கள் அனைத்துமே தகவல் சுரங்கங்கள். தமிழின் ஆன்மிக இலக்கியத் துறைக்கு அவரின் பங்களிப்பு கணிசமானது.  
.......................

நன்றி: திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், முகநூல் 

கருத்துகள் இல்லை: