In memory of all the Martyrs of Kargil War
This is a photo of ASI monument number N-JK-23.
Author Ashoosaini2002
licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license.
Via WIKIMEDIA COMMONS
கார்கில் யுத்தம் முடிந்து, ஏறக்குறைய ஒரு வருடம் கடந்த நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தின், ஒரு குக்கிராமத்திலிருந்து, பாதுகாப்பு அமைச்சகத்திற்கு, ஒரு கடிதம் வருகிறது. அதை எழுதியவர், "தான் ஒரு கிராமத்து பள்ளிக்கூட வாத்தியார்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார். அதாவது, தனது ஒரே மகன் கார்கில் யுத்தத்தில் வீரமரணம் அடைந்துவிட்டதாகவும், அவனது முதலாமாண்டு நினைவுநாள் இன்னும் சில நாட்களில் வரப்போவதாகவும், அவருடைய மகன் இறந்த நினைவுநாளில் தன் மகன் இறந்து வீழ்ந்த இடத்தை, தானும், தன் மனைவியும் பார்க்க விரும்புவதாகவும், முடிந்தால்; அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். முடியாவிட்டால் பரவாயில்லை. நாங்கள் அந்த இடத்தை பார்க்க விரும்புவது தேச பாதுகாப்புக்கு தொந்தரவாக இருந்தால் வேண்டாம். எனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தது.
கடிதத்தை படிக்க நேர்ந்த ஒரு உயரதிகாரி, என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை, பள்ளிக்கூட வாத்தியார் வந்து போகும் செலவை (டிபார்ட்மென்ட் தராவிட்டால்) நான் எனது சம்பளத்திலிருந்து தருகிறேன். அந்த வாத்தியாரையும் அவரது மனைவியையும் அந்த வீரன் இறந்த இடத்திற்கு அழைத்து வாருங்கள், என்ற கட்டளை பிறப்பித்தார்.
இறந்த மாவீரனின் நினைவு நாளன்று அந்த மலைமுகட்டிற்கு அந்த வயதான தம்பதிகளை இந்திய ராணுவத்தினர் தக்க மரியாதையுடன் கொண்டுவந்தனர். மகன் இறந்து வீழ்ந்த இடத்திற்கு அருகே அழைத்துச்சென்ற போது, அங்கே டூட்டியில் இருந்த அனைவரும் அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தனர் .
ஒரே ஒரு வீரர் மட்டும், அந்த வயதான கிராமத்து பள்ளிக்கூட வாத்தியாரின் கால்களில் மலர்களை தூவி, குனிந்து வணங்கி, அவர் பாதத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார். பின்னர் நிமிர்ந்து ஏனையோரைப் போல அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தார்.
.......
வாத்தியாரோ பதறிப்போய் "என்னப்பா இது?.. நீ எவ்ளோ பெரிய ஆஃபீசர்?.. நீ போய் என் காலைத் தொட்டு வணங்கலாமா? மத்தவங்களைப் போல, நீயும், சல்யூட் மட்டும் பண்ணக்கூடாதா ? நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லியிருப்பேனே?" என்று கேட்டார்...
அதற்கு அவர் *"இல்லை சார்! இங்கே, அவர்களை விட நான் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறேன். அதாவது, இங்கே இருப்பவர்கள் கடந்த மாதம்தான் இந்த இடத்திற்கு டூட்டியில் வந்திருப்பவர்கள். நான் உங்க பையனோடு, அதே படைப்பிரிவில் இதே மலை முகட்டில் பாகிஸ்தானியரோடு சண்டையிட்டவன். உங்கள் பையனின் வீரத்தை களத்தில் நேரடியாக பார்த்தவன். அதுமட்டுமல்ல "* என்று சொல்லி நிறுத்தினார்.
வாத்தியார், அந்த ஜே.ஸி.ஓ வின் கைகளைப் பிடித்துக்கொண்டு *"சொல்லுப்பா... எதுவா இருந்தாலும் பயப்படாமல் சொல்லு... நான் அழமாட்டேன்"* என்று கூற
*"நீங்க அழ மாட்டீங்கன்னு தெரியும் சார்.. ஆனால், நான் அழாமல் இருக்கணும்ல"* என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார் ...
*"அதோ அங்கே தான் பாகிஸ்தானியர், எச்.எம்.ஜியால் வினாடிக்கு நூற்றுக்கணக்கான குண்டுகளை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தனர். முப்பதடி தூரம் வரைக்கும் நாங்க ஐந்து பேரும் முன்னேறிட்டோம் , அதோ பாருங்க அந்த பாறைக்கு பின்னாடி தான் பதுங்கி இருந்தோம். பாகிஸ்தானிகளும் பாறைக்கு பின்னாடி நாங்க இருக்குறத பாத்துட்டாங்க . கொஞ்சம் கையோ காலோ அல்லது எங்களது ஆயுத பையோ வெளியே தெரிஞ்சா போதும். குண்டுகளை படபடவென்று தெறிக்கவிட்டானுங்க. பிரிகேட் ஸ்ட்ரன்த் அளவிலான இந்திய முன்னேற்றம் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிக்க போவுது . என்ன பண்ணுறதுனே தெரியல..... அப்போதான் ...."* என்று சொல்லி அந்த ஜே.ஸி.ஓ கொஞ்சம் பெருமூச்சு விட்டார்.
*"என்னப்பா ஆச்சு சொல்லு?"* என்று அந்த வாத்தயார் கேட்க ... ஜே.ஸி.ஓ தொடர்ந்தார். *"இவனுங்க சுட்டுகிட்டே தான் இருப்பானுங்க... இது வேலைக்காவாது.... நான் இந்த முப்பதடிக்கு டெத் சார்ஜ் (death charge) பண்ணப்போறேன். அதாவது அவனுங்க சுடுற குண்டுகளை உடம்பில் வாங்கிக்கொண்டு அவனுங்க பங்கர் வரை ஓடி பங்கருக்குள் இந்த வெடிகுண்டை வீசப்போறேன், அவனுங்களை ஒழிச்சப்புறம், நீங்க பங்கரை புடிச்சிருங்கன்னு சொல்லிட்டு கிரெனேடோட ஓட தயாரானேன்."*
*அப்போதுதான் உங்க பையன் என்னைப்பார்த்து . "பைத்தியமாடா நீ ? உன்னை நம்பி வீட்ல பொண்டாட்டியும் ரெண்டு சின்ன குழந்தைகளும் இருக்கு. நான் இன்னும் கல்யாணமாகாதவன் . நான் அந்த டெத் சார்ஜ் பண்ணுறேன். நீ கவரிங் ஃபயர் கொடுடா போதும்"ன்னு சொல்லிட்டு என் கையிலிருந்த கிரெனெடை பிடுங்கிக்கொண்டு டெத் சார்ஜ் பண்ணார் சார்."*....
*பாகிஸ்தானியர் எச்.எம்.ஜியிலிருந்து மழை போல குண்டுகள் பாஞ்சது. உங்க பையன் வளைந்து வளைந்து டாட்ஜ் பண்ணி பாகிஸ்தானியரின் பங்கரை அடைந்து வெடிகுண்டின் பின்னை எடுத்துவிட்டு வெடிகுண்டை பங்கருக்குள் சரியாக வீசி பதிமூணு பாகிஸ்தானியரை மேலுலகிற்கு அனுப்பி வைத்தார் சார். எச்.எம்.ஜி செயலிழந்து, எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.*
*உங்க பையனின் உடலை நான்தான் முதலில் தூக்கி எவாக்குவேஷன் செய்தேன்.* *நாப்பத்திரெண்டு குண்டுகளை உடம்பில் வாங்கியிருந்தார் சார். அவரோட தலையை என் கையில் தான் சார் தூக்கினேன். என் கையில் இருக்கும் போதுதான் சார் உயிர் போச்சு. அவரோட சவப்பெட்டியை உங்க கிராமத்துக்கு கொண்டு போகும் பொறுப்பு டூட்டியை மேலதிகாரியிடம் அப்போ கேட்டுப்பார்த்தேன் சார். இல்லை என்று சொல்லி வேறு முக்கிய டூட்டி போட்டுட்டாங்க சார்."*
*ஒருவேளை அந்த சவப்பெட்டியை தூக்கும் பாக்கியம் கிடைச்சிருந்தா, இந்த மலர்களை, அவனோட காலடியில் தான் போட்டிருப்பேன். அது கிடைக்கல. ஆனால் உங்கள் பாதங்களில் மலரை போடும் பாக்கியம் கிடைத்தது சார்."* என்று பெருமூச்சுடன் முடித்தார்.
கிராமத்து வாத்தியாரின் மனைவியோ, புடவை தலைப்பால் வாயை பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுதுகொண்டிருந்தார். வாத்தியார் அழவில்லை.
அந்த ஜெ.ஸி.ஓ வீரரை தீர்க்கமாக பார்த்தார். வீரரும் அழவில்லை. வாத்தியாரை பார்த்தார்.
வாத்தியார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தன்னுடைய தோளில் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னா பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து ஜெ.ஸி.ஓ வீரரின் கையில் கொடுத்துவிட்டு *:என் மகன் லீவில் ஊருக்கு வந்தால் போட்டுக்கட்டும்னு ஒரு சட்டை வாங்கி வச்சிருந்தேன். ஆனால் அவன் வரல.. அவனது வீர மரணம் பற்றிய செய்திதான் அப்போ வந்துச்சு.. இனிமேல் அந்த சட்டையை யார் போடப்போறாங்க.. அதான் அவன் உயிர் விட்டஇடத்துலேயே வெச்சிடலாம். ஒரு வேளை அவன் அந்த இடத்துக்கு ஆவியாவாகவாவது வந்து போட்டுக்கட்டும்னு கொண்டு வந்தேன். ஆனால் இந்த சட்டையை யார் போட்டுக்கணும்னு இப்போ தெரிஞ்சிடுச்சு. மாட்டேன்னு சொல்லாம இதை வாங்கிக்க"* என்று கொடுத்தார். கை நீட்டி வாங்கிக்கொண்ட வீரரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
நமக்கு இவர்களைப் போன்றோர்தான் உண்மையான ஹீரோக்கள். வீணாப்போன அரசியல்வியாதிகளையும், சினிமா கூத்தாடிகளையும் கொண்டாடாமல்
வீணான பொழுதுபோக்காக வீட்டில் வெட்டி வேலை செய்யாது உண்மையான செயல்வீரர்களை கொண்டாடுவோம்..
*(SPக்களின் குழுவில் பகிரங்கப்பட்ட தகவல். நமக்காக பகிரப்படுகிறது. Kalaimani.)*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக