18 அக்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-29: "முதலும், முடிவும்"

வியாபாரம் சரியில்லையென
ஒன்றுவிட்ட சித்தப்பா பையன்
மாற்றியமைத்தான் வாசலை;
தொட்டி வைத்தான் மூலையில்;
திசை மாற்றினான் நாற்காலியை.
ஒரு எழுத்தைச் சேர்த்தான் பெயரில்
கையெழுத்தைப்போட்டான் தமிழில்.
தொட்டியில் விட்டான் சீன மீன்களை.
வாசலில் வைத்தான் சிரிக்கும் புத்தரை.
ஆண்டுகள் இரண்டு முடிந்தபின்,
செல்வத்தில் மிதந்த தம்பியை
எப்படி இந்த மாற்றமெனக் கேட்க,
வியாபாரத்தை இழுத்து மூடி
வெகுநாளாச்சு என்றவன்
நீட்டிய விசிட்டிங் கார்டு
"வாஸ்து நிபுணர்" என்றது.

கருத்துகள் இல்லை: