உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், ஏன் நண்பர்களுக்கும்கூட கைமேல் பலன் கிடைக்கிற காரியம் ஒன்று செய்ய விரும்பினீர்களானால் - வீட்டைச்சுற்றி நாலு மரம் நடுங்கள்.
மரம் நடுவதினால் எண்ணற்ற பயன்கள் உண்டு. ஒரு மரம் மனிதர்களும், விலங்குகளும் சுவாசிக்க உயிர்க்காற்றை (ஆக்சிஜன்) உற்பத்தி செய்கிறது. மண் அரிப்பைத் தடுக்கிறது. பறவைகளுக்கும், அணில்களுக்கும் இருப்பிடமளிக்கிறது. நீரைத் தூய்மை செய்கிறது. மழை நீரை நிலத்திலிருந்து ஈர்த்து, ஆவியாக்கி அனுப்பி மீண்டும் மழை பெய்விக்க உதவுகிறது. காற்றினால் ஏஅற்படும் சேதத்தைத் தடுக்கிறது. நிழல் தருகிறது. கோட்டை வகைகள், பழவகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை அளிக்கிறது.
இப்படி, எல்லாப் பயன்களையும் கணக்கில் வைத்துப் பார்த்தால், ஒரு மரம், தான் வாழும் ஐம்பது ஆண்டுகளில் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயன்களைத் தருகிறது.
வீட்டுக்கு நாலு மரம் நடுங்கள். இது உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள சூழல் அழகுபெறுவதோடு மதிப்பு மிக்கதாகவும் ஆக்கும்.
மரங்கள் ஒன்றோடு ஒன்று சைகைகளின் மூலம் பேசிக் கொள்கின்றனவாம். ஒரு சில மரங்கள் புழுக்களால் தாக்கப்படும்போது, அவை அருகிலுள்ள மாற்ற மரங்களுக்கு இரசாயன முறையில் எச்சரிக்கை செய்கின்றனவாம். அருகிலுள்ள மரங்களின் இலைகளுக்கு 'தெனின்' என்னும் இரசாயனப் பொருளை இன்னும் அதிகமாக அனுப்பி, புழுக்கள் இலைகளை ஜீரணிக்க முடியாதபடி செய்துவிடுகின்றனவாம்.
மரங்களை நடுவதினால் ஓரிடத்தின் பருவநிளையே மிகக் குளிர்ச்சி அடைவதுண்டு. மரங்களை வெட்டுவதினால் வெப்பம் அதிகரிக்கின்றது.
மரங்களை நண்பர்களாகக் கருதவேண்டும். வெட்டக்கூடாது. வளர்க்க வேண்டும். வீட்டைச்சுற்றி மரம் வளர்த்தால் கோடையில் செயற்கை குளிர்சாதனங்களுக்கு வீணாகப் பணம் அழவேண்டிய அவசியம் ஏற்படாது.
-- நன்றி: "நல்வழி", மாத இதழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக