6 நவ., 2008

என்ன நடக்கிறது?-2: "கறுப்புப்பணம் கொட்டிக் கிடக்குது ஸ்விஸ் வங்கியில்!"

வேற்று நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப்பணம் சுமார் 64 லட்சம் கோடி ரூபாய் என்ற அதிர்ச்சித் தகவலை, நவம்பர் 5, 2008 குமுதம் இதழில் வெளியாகியுள்ள புஷ்கின்ராஜ்குமாரின் கட்டுரை தெரிவிக்கிறது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா நடிகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களுக்குச் சொந்தமானது இந்தப் பணம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், விற்பனை, சர்வதேச அளவில் விபச்சாரம், புளு பிலிம் மற்றும் சூதாட்டத்திற்கு இந்தப் பணம் பயன்படுத்தப் படுவதாகவும் கூறப்படுகிறது.

லீச்டென்ஸ்டீன் என்கிற சிறிய நாட்டின் எல்.டி.ஜி. வங்கியில் கறுப்புப்பணம் வைத்திருந்த வெளிநாட்டவர்கள் பற்றிய தகவலை ஜெர்மானிய நாட்டின் புலனாய்வுத்துறை சேகரித்துள்ளது. அதனிடமிருந்து பல நாடுகள் தங்கள் நாட்டவர்களின் கறுப்புப்பண விபரங்களைக் கேட்டறிந்து, அந்தக் கறுப்புப்பணத்தை தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த வங்கியிலும் இந்தியர்கள் பலர் கறுப்புப்பணத்தை வைத்துள்ளனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டால் பெயர் உட்பட அனைத்துத் தகவல்களையும் தருவதாக ஜெர்மானிய புலனாய்வுத்துறை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஆனாலும் இந்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலருமான திரு மோகனகிருஷ்ணன், டெல்லி உச்சநீதி மன்றத்தில் இதுகுறித்து பொது நல வழக்குத் தொடர ஆயத்தமாகி வருகிறார். நிச்சயம் அந்தக் கறுப்புப்பணப் பட்டியலை வெளியிட வைப்பேன் என்கிறார் அவர்.

நன்றி: திரு புஷ்கின்ராஜ்குமார், திரு மோகனகிருஷ்ணன் & குமுதம்.

கருத்துகள் இல்லை: