20 ஜன., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-41: "அரசியல் பிழைத்தோர்"

சமூகத்தில் ஒரு பாதி,
முப்பத்து மூன்று சதவிகித
இடங்களுக்காக,
போராடப் போகிறார்களாம்,
மற்றொரு பாதியை எதிர்த்து!
அவர்கள்
கேட்க வேண்டியது,
ஐம்பது சதவிகிதமல்லவா?

அரசியல் பெண்களின்
முகவரிகளை எல்லாம்
தொகுத்தபோதுதான்
தெரிய வந்தது,
அவர்கள்
தங்களுக்கென்று
தனி முகவரி மட்டுமல்ல,
முகமே இல்லாதவர்கள் என்பது!

அவர்கள்
பின் கதவு வழியாக
பினாமியாக வந்து
அரசியல் அரிதாரம்
அவசரமாய் பூசியவர்கள்;
பழம் தின்று கொட்டைபோட்ட
அரசியல் அண்ணாச்சிகளின்
மகள், மனைவி, மருமகள்,
அல்லது நண்பிகள்;

பெண் பினாமிகளை,
ஆண் பினாமிகளைவிட
ஆபத்தானவர்களாக,
குறித்து வைத்துள்ளது வரலாறு.

பினாமிகளுக்கா
முப்பத்து மூன்று?
சுயமாய் பெண்கள்
வரட்டும் அரசியலுக்கு;
சுத்தப்படுத்தலாம்
இருவரும் சேர்ந்தே,
சாக்கடையை!

கருத்துகள் இல்லை: