அரசு சொகுசு பஸ்சை எரித்த குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது பாராட்டப்படவேண்டிய, தொடரவேண்டிய விஷயம்.
கூட்டணிக் கட்சித் தலைவர்களை 'தாஜா' செய்ய, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை, கவர்னரின் விஷேஷ உரிமையை பயன்படுத்தி வெளிக்கொணர்வது ஆளுங்கட்சியின் பழக்கம். சொகுசு பஸ், சாதாரண பஸ் எரித்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக, கவர்னரின் அனுமதியை ஒரு ஆண்டு முடிவதற்குள் தமிழக அரசு கோரக்கூடாது.
உ.பி. மாநிலத்தில் சிறுமியை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதற்காக காவல்துறை துணை ஆய்வாளரும், காவலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தாக்கியதை வேடிக்கை பார்த்ததற்காக, காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மனிதாபிமானமற்ற காவல்துறையை உருவாக்கி நிர்வாகம் செய்த குற்றத்திற்காக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதே போக்கை பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்துபவர்கள் விஷயத்திலும் கடைப்பிடிக்க மாநில அரசுகள் தைரியமாக முன்வர வேண்டும். சூத்ரதாரியை விட்டுவிட்டு, பொம்மைகளை அடிப்பதால் பயன் என்ன?
'சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் பாசாங்குக்காரன் விடான்.' அரசியல் தலைவர்கள், விஷமிகள் சிறைக்குச் சென்றாலும் விடமாட்டார்கள். தியாகி முத்திரை குத்தி, எம்.எல்.ஏ. சீட் தந்து சட்டசபைக்கு அனுப்பிவிடுவர்.
மரத்தை நட்டு, குளத்தை வெட்டி, அன்றைய அரசர்கள் ஆட்சி செய்தனர்; மரத்தை வெட்டி, பஸ்சை கொளுத்தி இன்றைய ஜனநாயக தலைவர்கள் அரசியல் செய்கின்றனர். - வீ.அன்புராஜா, எட்டயபுரம்.
தகவல்: "இது உங்கள் இடம்", தினமலர், மதுரை, 16.2.2009.
நன்றி: திரு.வீ.அன்புராஜா & தினமலர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக