மதம் என்றால் என்னப்பா?
எட்டு வயது மகளுக்கு
ஏற்றதொரு பதில் சொல்ல
சிந்தித்த வேளையில்
மகளே மறுபடியும் கேட்டாள்:
சகித்துக்கொள்ள முடியாதபடி
நாத்தம் பிடித்ததா அது?
மதசகிப்புத் தன்மை வேண்டுமென
புத்தகத்தில் போட்டிருக்குதே!
கூவத்து குடிசைகளைக் காட்டி
குடியிருக்க எத்தனை
சகிப்புத்தன்மை வேண்டுமென
கேட்டீர்களே அன்று!
தொட்டால் ஒட்டிக்கொள்ளும்
தொற்றுநோய் போன்றதா, மதம்?
அவர்களுடன் சேராதே,
இவர்களைத் தொடாதே என
அடிக்கடி சொல்கிறாளே பாட்டி!
புளித்துப்போன விஷயமா மதம்
அம்மா ஏன் 'உவ்வே' என்கிறாள்?
ஒருத்தர் விட்டுக்கொடுத்தா
ஒருநாளும் சண்டை வராதுன்னு
நீங்கதானே சொன்னீங்க;
பெரியவர்கள் பின் ஏன்
கூட்டமாய் சண்டை போடுறாங்க?
மதம் என்ன நிறம் மாறும்
பச்சோந்தியைப் போன்றதா?
ஏன் அவங்க மட்டும்
சேப்பா இருக்குறாங்க?
கேள்விகளைக் கேட்டுவிட்டு
மகள் போய்விட்டாள்.
கேள்விகளின் கனம் தாங்காமல்
அமர்ந்துவிட்டேன் அப்படியே.
சொல்லிக் கொடுப்பானேன்
தப்புப் தப்பாக?
கெட்டிக்காரி என் மகள்.
அவளே கண்டுபிடிக்கட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக