மலைக்கோயிலுக்கு
மாலை போட்டார்
மச்சுவீட்டு அண்ணாச்சி
கள்ளச்சாராயம்,
கட்டப்பஞ்சாயத்து,
தண்டல், கரைவேட்டி,
இவைகளுக்கு நடுவே
தலைவருக்குப் பாதுகாப்பாக
தானும் உடன்செல்ல.
இரண்டுமுறை குளியல்
நாற்பதுநாள் விரதம்
இலையில் சாப்பாடு
தண்ணி கவிச்சிக்கு விடுப்பு
புதிய காவி வேட்டி துண்டு
மாருலே சந்தனம், நீறு
தினம் பாட்டு, பஜனை.
முதல் பத்துநாள்
வாய் திறக்காத அண்ணாச்சி
மெதுவாய் சரணம் என்றார்
பஜனையில் தாளம் போட்டார்
பார்க்கும் எல்லோரையும்
சாமி என்று கூப்பிட்டார்.
நாற்பது நாட்களில்
முற்றிலுமாய் மாறிப்போனார்
கோபம் கெட்டவார்த்தைகள்
எங்கோ காணாது போச்சு.
நானும் மாற்றிக்கொண்டேன்
சடங்கு, சம்பிரதாயம்,
வடிவம், உள்ளீடு பற்றிய
என் மதிப்பீடுகளை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக