12 பிப்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-50: "சின்னத்திரை"

அறிவுக்குத் திரையிட்டு
ஒலி, ஒளி விலங்கிட்டு
மனிதரைச் சிறைவைக்கும்
மற்றுமொரு மாயத்திரை.

சிந்திக்கும் ஒருசிலரின்
சிந்தனையும் மழுங்கிவிடும்;
இசையெனும் பெயரால்
காதடைக்கும் பேரிரைச்சல்.

நான்கு சேனல்கள்
நான்கு விதமாய்
அவசரமாய் திரிக்கும்
ஒரே செய்தியை.

பெண்களை மேலும்
இழிவும் படுத்தும்;
தொடர்கள் கெடுக்கும்
குழந்தைகள் படிப்பை.

உறவுகள் வீட்டினுள்
ஒருவரோடொருவர்,
மனம்விட்டுப் பேசும்
நேரத்தைத் திருடும்.

நல்ல புத்தகங்கள்
செய்தித்தாள்கள்
படிக்கும் பழக்கங்கங்கள்
குறைந்து போகும்.

வீட்டிற்கு வந்தவரை
சும்மா அமரவைத்து
வாய் பிளந்து
தொடர் பார்க்க
விருந்தோம்பல்
குறைந்து போகும்.

வக்கிர வன்முறைகள்
வண்ணத்திரையினில்
பார்த்துப் பார்த்துப்
பழகிப்போகும்.

நிஜ வாழ்விலும்
அதுவே எதிர்பட,
எதிர்ப்பே இல்லாது
மனமும் ஏற்கும்.

சின்னத்திரைக்கு
இரண்டு முகங்கள்,
இரண்டாம் முகமோ
அறிவுப் பெட்டகம்.

கண்ணுக்கும், காதுக்கும்
விருந்து படைக்கும்;
அள்ளக் குறையாத
அட்சய பாத்திரம்.

உடனுக்குடன்
உலகையே வீட்டிற்குள்
இறக்குமதி செய்யும்.

வயதானவர்களின்
வரப்பிரசாதம்;
வீட்டுப்பெண்களின்
ஒருங்கிணைப்பாளர்.

ஆயகலைகள்
அறுபத்தி நான்கிற்கும்
பதிவுகளும் உண்டு
பரிசுகளும் உண்டு.

அமிழ்தும்
ஆலகாலமும்
ஒரே பாற்கடலில்.

சின்னத்திரை தீ;
அது மின்சாரம்;
ஆக்கத்திற்கா?
அழிவிற்கா?
ரிமோட் நம் கையில்.

கருத்துகள் இல்லை: