கண்ணீர் வற்றிய கண்கள்
கொல்லும் தனிமை,
நீளும் இரவுகள்,
விடியலில் கண்ணயர்ந்து
அரவம் கேட்டு
வாரிச் சுருட்டி எழுவதும்,
இழுத்துப்போட்டுச் செய்தாலும்
எவ்வளவு வேலை இருக்கும்
இருவர் மட்டுமே
இருக்கின்ற வீட்டில்?
கழுவிய வீட்டையே
எத்தனை தடவை
திரும்பக் கழுவுவது.
எத்தனை நேரம்
வேடிக்கை பார்ப்பது
நடு முற்றத்தில்
வந்தமரும் குருவிகளை.
எதைப் பேசமுடியும்
வேலைக்காரியிடமும்
மாமியாரான என்னிடமும்
புத்தகம், ஆன்மிகம்,
தொலைக்காட்சி எல்லாமே
ஏதாவது ஒரு இடத்தில்
காயத்தை மறுபடி கிளறும்
சிரிக்கக்கூடதென்று
தடையிருப்பதுபோல்
எப்பொழுதாவது
அதிசயமாய்ப் பூக்கும்
புன்னகை மலர்களையும்
அவசரமாக உதிர்த்துவிடுவதேன்?
செடியோடு உறவு
விடுபட்டுப் போனதென்று
மணம் வீசுவதை
நிறுத்தி விடமுடியுமா
உதிர்ந்த மல்லிகை?
பிறந்த கன்று
இறந்ததென்று
பால் சொரிவதை
நிறுத்துமா பசு?
இரவெல்லாம் உறங்காமல்
படுக்கையில் புரள்வதை
உறங்குவதுபோல் நானும்
பார்த்திருப்ப தெத்தனை நாள்?
முடிவெடுத்து விட்டேன்
அவளையும் கேளாமல்;
நல்ல வரனொன்று சொல்லுங்கள்
எனதருமை மருமகளுக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக