26 பிப்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-57: "அடையாளம்"

ஆடை, அணிகலன்கள்,
நிறம், ஜாதி, மதம் தாண்டி
எது நம் அடையாளம்?

தமிழன் என்று சொல்லி
மொழியின் பின்னால்
குளிர் காயமுடியாது;
அதனால் தமிழுக்கு
கிடையாது பெருமை.

மதராசி என்று சொல்லி
வசிக்கும் இடத்தை
முன்னிறுத்த முடியாது -
அன்றே பாடிவிட்டாள் அவ்வை.

கல்தோன்றி மண்தோன்றாக்
கதையெல்லாம் சொன்னால்
இன்று நாம் செய்வதென்ன
என்றே கேள்வி எழும்.

நற்பண்பை, நற்செயலாய்,
நம் அடையாளமாய்
பெருமையாய்ச் சொல்ல
விஞ்சி நிற்பதென்ன நம்மிடம்?

நல்லதாய் விஷயங்கள்
ஞாபகத்தில் வரவில்லை;
ஞாபகத்தில் இருப்பவையோ
நல்லவைகளாய் இல்லை.

தயக்கத்தோடு ஒன்றிரண்டு
சொல்ல நினைத்தாலும்
கண் முன்னே வந்து
கைகொட்டிச் சிரிக்கிறது
நம் மனசாட்சி!

திருவிழாவில்
பெற்றோரைத் தொலைத்த
குழந்தை மாதிரி,
நம் அடையாளத்தை
தொலைத்துவிட்டு,
உணர்வற்று ஓடுகிறோம்
திசை தெரியாமல்
இலக்குகள் இன்றி.

கருத்துகள் இல்லை: