25 பிப்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-56: "பிழை திருத்தம்-2"

அடக்கியது கொஞ்சம்
வேலைக்காரியிடம் கொஞ்சம்
மீதி மாமியாரிடம் என
முடியும் என் கோபம்.

சின்னத்திரையோ
கிளறும் என் காயம்
தொலைபேசி மணியோ
அடிப்பதேயில்லை
அவர் போனதிலிருந்து.

யாருடைய "ஐயோ பாவமும்"
தேவையில்லை எனக்கு.
துக்கம் விசாரிக்கிறேன்
பேர்வழி என்று
கலங்கடிக்கிறார்கள்
மீண்டும் மீண்டும்!

ஒருவருக்குத் தெரியாமல்
ஒருவர் அழுகிறோம்
இருவர் மட்டுமே
இருக்கும் வீட்டில்
ஒருவரையொருவர்
தவிர்ப்பதெப்படி?

ஏதாவதொன்றில்
மனதைச் செலுத்து
என்கிறாள் தோழி

வயதும் வாழ்வும்
மிச்சமிருக்க
மறுமணம்தான்
தீர்வு என்கிறாள்.

அவள் வாதத்தின்
எதார்த்தம் உண்மை;
ஒப்புக்கொள்ளத்
தயக்கமே தடை;
ஊர் உலகம்
பற்றிய பயமுந்தான்.

முடிவு செய்துவிட்டேன்;
காத்திருப்பேன்;
தனியே விடமாட்டேன்
என் அத்தையை;
ஒரு ஆண் தயாரென்றால்
மறுக்க மாட்டேன்!

யார் என்னை
ஏற்றுக்கொள்வார்
என காத்திருக்கத்தானே
முடியும்.
அட இந்த முறையாவது
தெரிந்தெடுக்கும்
உரிமையும், வாய்ப்பும்
கிட்டுமா எனக்கு?

கருத்துகள் இல்லை: