2 மார்., 2009

பார்த்தது-3: "காரைக்குடி புத்தகத் திருவிழா 2009"

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் ஒன்பது நாளாக நடைபெற்ற ஏழாவது மாநில அளவிலான காரைக்குடி புத்தகத் திருவிழா நேற்றோடு நிறைவு பெற்றது.

காரைக்குடியில் முதன்முதலாக மாநில அளவிலான புத்தகக் கண்காட்சி பற்றிக் கனவு கண்டு, மிகுந்த சிரமங்களுக்கிடையில் செயல்படுத்தி , முதல் நான்கு புத்தகத் திருவிழாக்களின் பொறுப்பாளனாக செயல்படும் வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், புத்தகத் திருவிழா தொடர்ந்து விடாமல் நடைபெறுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். பல இடையூறுகள் காரணமாக போகமுடியாமல், இறுதி நாளான நேற்று இரவுதான் திருவிழாவிற்குச் செல்ல முடிந்தது.

அரங்கினுள் நுழையும்போது, வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கும் அழகிய, அற்புத நந்தவனத்திற்குள் நுழையும் உணர்வே ஏற்பட்டது. வண்ணமலர்களை ஈக்கள் மொய்ப்பதுபோல் மக்கள் பேராவலுடன் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்வதைக் கண்டு உவகை அடைந்தேன். பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் பார்க்கிறபோது வாசித்தல் என்பது ஒரு கரை காணமுடியாத கடல், வாழ்நாள் முழுவதும் வாசித்தாலும் நாம் வாசித்தது கைம்மண் அளவே என்ற பணிவும் பிறந்தது.

நல்ல நூல்களை மேலும் மேலும் படித்து, இன்புற்று, அவற்றில் கூறப்பட்டுள்ள மேன்மையான கருத்துக்களை உள்வாங்கி, மனதில் மேன்மையான, உன்னதமான சிந்தனைகளை வளர்த்து, வாழ்க்கையில் மகத்தான சாதனைகள் படைக்கவேண்டும் என்ற வேட்கையை இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் ஏற்படுத்துகின்றன. இத்தகைய தலை சிறந்த தொண்டினைச் செய்துவரும் இப்புத்தகத் திருவிழா அமைப்பாளர்களையும், இது சிறப்பாக நடைபெற பல வகைகளிலும் உதவி புரிந்துள்ள அன்பர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இது போன்ற நல்ல வாய்ப்புக்களை பயன்படுத்தி அனைவரும் மேன்மையுற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நிறைவாக ஒன்று. "படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது; சிந்திக்காமல் படிப்பது பயனற்றது". ஆவலுடன் புத்தகங்களை வாங்கிச் செல்லும் அனைவரும் இக்கருத்தினை மனதில் நிறுத்தி பயனடைய வேண்டுகிறேன்.

1 கருத்து:

nellaiappan சொன்னது…

Dear Suri,
நல்ல விசயங்களை தொடங்குவதற்கு
நம்மவர்க்கு starting trouble. எனவே உங்களைப் போன்றவர்களின் தேவை எப்பொழுதும் இருக்கும்.
தொடங்கி வைத்த பெருமை உங்களுக்கே. இனி அது நன்றாக நடக்கட்டும்.

கண்காட்சி பற்றிய என் கருத்துக்கள்:

புத்தகம் அதிகஅளவில் விற்பனை யாவது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும் விற்கப்படுகின்ற புத்தகங்களின் தரம் கவலை யளிக்கிறது.

ஜோதிடம், வாஸ்த்து, நாட்டு வைத்தியம், தன்னம்பிக்கை
கட்டுரைகள் என்ற பிரிவுகளில் புற்றீசல் போல் வரும்
புத்தகங்களின் நம்பகத்தன்மை பெரிதும் கேள்விக்குரியதாக
இருக்கிறது. யார் வேண்டுமானாலும் இந்த தலைப்புகளில் புத்தகம் எழுதலாம் என்பதுதான் இன்றைய நிலை.

நடுத்தர மக்களின் பலவீனத்தை குறிவைத்து நடக்கும்
ஒருவகை நாலாந்தர வியாபர தந்திரமது. விற்பனைக்கு
வரும் புத்தகங்களுக்கும் தணிக்கை அவசியம்.

புத்தகங்களின் வடிவமைப்பு, வண்ண ஜாலம், படங்கள், மலைக்க வைக்கின்றன.என்றாலும் பல புத்தகங்களின் விலை குதிரைவிலை யானை விலைதான். சில நல்ல
எழுத்தாளைர்களின் தொகுப்புகள் சர்வ சாதாரணமாக
ஐநூறு, ஆயிரம் ரூபாய் என்று திகைக்க வைக்கின்றன.
விலைக்கும் கட்டுப்பாடு அவசியம்.

ஒவ்வொரு வருடமும் என் இரண்டு பெண்களின் பிறந்த நாட்களின் போதும் தமிழில் ஒன்று ஆங்கிலத்தில்
ஒன்று என இரண்டிரண்டு புத்தகங்களை நன்கொடையாக பள்ளி நூலகத்திற்கு ஆறு ஆண்டுகளாக நான் வழங்கி வருகிறேன்.