4 மார்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-59: "கேள்வி முயல்"

கேள்விகள் எப்போதும்
எளிதானவை
பதில் சொல்ல வேண்டியவர்
நாம் இல்லைஎன்றால்.

கேள்விகள் சுமைகள்-
சுமக்க வேண்டும்
சுமைதாங்கி பதில்கள்
கிடைக்கும் வரை.

கேள்விகளால் தான்
சாத்தியமானது,
மனித இனத்தின்
இன்றைய உயரம்!

ஒரு கேள்விக்கு
பல விடைகளும்,
விடையே இல்லா
பல கேள்விகளும்
புதியனவல்லவே !

சில கேள்விகள்
முகத்தில் அறையும்;
சில முகத்தை மலர்த்தும்;
வேறு சிலவோ,
முகத்திரை கிழிக்கும்.

முகம் சுளிக்க
புருவம் உயர்த்த
கேள்விகள் உண்டு!

கேட்கக்கூடாத
கேள்விகளும் உண்டு;
சில கேள்விகளுக்கோ
அவசியமில்லை பதில்!

ஏன், எதற்கு என்று
கேட்ட சாக்ரடீசும்
பெயக்கண்டும்
நன்சுண்டமைந்தான்!

சில கேள்விக்கு
நல்ல பதில்
எதிர்க்கேள்விகளே!

அம்மாவின் கைப்பிடித்து
உடன்வரும் குழந்தை போல,
ஒருசில கேள்விகள்
துணைக் கேள்விகளை
உடன் அழைத்துவரும்

கேட்டவரால்
சில கேள்விகளும்
கேட்கப்பட்டவரால்
சில கேள்விகளும்
வரலாறு ஆனதுண்டு!

சில கேள்விகளை
கேட்காமல் விட்டதால்
பலருக்கும்
குளிர் விட்டுப்போச்சு!

"எடுக்கவோ, கோர்க்கவோ?"
"சுட்டபழம் வேண்டுமா?'
"நீயுமா புரூட்டஸ்?"
யட்சன் கேள்விகள் ,
தருமி கேள்விகள்,
"5 மனைவி -ஒரு
கணவன் கேள்விகள்" * என
புகழ் பெற்ற கேள்விகள்
அவரவர்க்கு வேறுபடும்!

அனைவருக்கும் பொதுவாய்
சிறந்த ஒரு கேள்வி -
"நான் யார்?"

---------
* 5w,1h (ஏன், என்ன, எங்கே, யார்,எப்பொழுது & எப்படி)

1 கருத்து:

Unknown சொன்னது…

Arumaiyaana kavithaigal... enna paathi thaan puriyuthu.. Kavippuyal Nellaiyappan endru sonnaaal migai aagaathu poangal.. Chithappa.. U r great.. read many poems.. its really good..