4 மார்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-60: "திருநங்கை(அரவாணி)"

உடல் ஒன்றாய்
மனம் வேறாய்
பிழையாய் இயற்கை
எழுதிய கவிதை;
உண்மையில்,
உயிருள்ள கவிதை;

இந்தக் கவிதையால்
இன்னொரு கவிதையை
எழுத முடியாது-
அப்பாவாக முடியாது;
அம்மாவாக முடியாது;
ஆனால் நல்ல மனிதராய்
வாழ முடியும்;

திரிசங்கு நரகத்தில்
உழலும் இவர்கள்,
கேலிப் பொருளல்ல
போகப் பொருளல்ல;
சமமாய் நடத்தினால்
சாதிக்க வல்லவர்கள்;

பிச்சைக்கும்,
பலான தொழிலுக்கும்,
ஒதுக்கி வைத்து,
பரம்பரை இல்லாதவர்களை,
குற்றப் பரம்பரையாக்காமல்,
மனிதராய் வாழ விடுவோம்!

நம்மைப் போலவே
பசிக்கிறது;
நல்ல கவிதையை
ரசிக்கிறார்கள்;
வாய் விட்டு சிரிக்கவும்,
கண் கலங்கி நிற்கவும்,
சினந்து சிவக்கவும்,
இவர்களாலும் முடிகிறது;

அர்த்த நாரீஸ்வரர்கள்
எதிர்பார்ப்பது
இரக்கத்தை அல்ல-
அங்கீகாரத்தை மட்டுமே;

இட ஒதுக்கீடு வேண்டாமாம்;
ஒதுக்கி ஓரம் கட்டாமல்,
இதயத்தில் நிரந்தர
இடந்தர வேண்டுமாம்.

பெற்றோர்கள் கூட
கைவிட்ட இவர்களை,
நண்பர்கள் பட்டியலில்
நாம் சேர்த்துக் கொண்டு,
மன உளைச்சல் அகல
மருந்தாய் இருப்போம்;

சந்தோசத்தில் பெரியது,
மற்றவர்களை
சந்தோஷப் படுத்துவது தானே!

கருத்துகள் இல்லை: