25 ஏப்., 2009

எனக்குப் பிடித்த கவிதை-49: "வருகுது, வருகுது, தேர்தல் வருகுது"

வருகுது, வருகுது, வருகுது, வருகுது!
தேர்தல் வருகுது, தேர்தல் வருகுது!
வீட்டுச் சுவர்களும் வீதி மரங்களும்
ஊர்வன பறப்பன ஒன்று விடாமல்
வண்ணம் பூசிச் சின்னம் தாங்க
வருகுது, வருகுது, தேர்தல் வருகுது!

தெருக்கள் தோறும் கட்சித் தோரணம்
திரும்பும் இடமெல்லாம் கட்சித் தலைவரின்
'கட்-அவுட்' சிரிக்க; வண்ண மின்னொளி
தாங்கும் மேடைகள்; சாதனை; பேச்சுக்கள்!
தினந்தினம் நடக்க தெரு-விழா காண
வருகுது, வருகுது, தேர்தல் வருகுது!

கள்ளப் பணமும் கறுப்புப் பணமும்
வெளியில் வந்து வீடுகள் தோறும்
"உங்கள் வீட்டுப் பிள்ளை நான்தான்
உங்கட் காகவே உழைப்பேன் நான்" என
சென்ற தேர்தலில் ஒட்டு வாங்கிச்
சென்றவர்! - மீண்டும் இன்று திரும்பி
குழைந்து பேச கும்பிடு போட
வருகுது, வருகுது, தேர்தல் வருகுது!

இருக்கும் கட்சி உடைந்து சிதற
இன்னொரு கட்சி கூட்டணி அமைக்க
தோளோடு தோளாய் இருந்தவர் பிரிந்து
இவர்மேல் அவரும் அவர்மேல் இவரும்
ஊழல் குற்றம் ஊர்தோறும் கூறி
நாக்கு நாடகம் நடத்திக் காட்ட
வருகுது, வருகுது, தேர்தல் வருகுது!

ஊர்ப்பண மெல்லாம் ஒருசிலர் மட்டும்
பங்கு போடவும் பதவிச் சண்டையில்
சட்ட மன்றில் கட்டிப் புரண்டு
இருக்கையை - செருப்பை எடுத்து வீசி
சிலம்பப் போரும் செய்து காட்டி
"மக்கள் ஆட்சியின் மாண்பைக்" காக்க
வருகுது, வருகுது, தேர்தல் வருகுது!

கவிஞர் கொட்டப்பட்டு ப.சக்திவேலன் அவர்கள் 1989-ல் எழுதிய கவிதை.

"எண்ணத் திவலைகள்"
கவிஞர் கொட்டப்பட்டு ப.சக்திவேலன்
இளங்கதிர் வெளியீட்டகம்
19, காளியம்மன் கோவில் தெரு
கொட்டப்பட்டு, பொன்மலை
திருச்சி-620004
தொலைபேசி: 0431-2491097

நன்றி: கவிஞர் கொட்டப்பட்டு ப.சக்திவேலன் அவர்கள் & இளங்கதிர் வெளியீட்டகம்.


கருத்துகள் இல்லை: