1 ஜூலை, 2009

நினைத்துப் பார்க்கிறேன்-5: "ஜாம் அப்துல்காதர்"

இன்று அதிகாலை திடீரென்று 'ஜாம் அப்துல் காதர்' நினைவு வந்தது. எனக்கே ஏன் என்று புரியவில்லை. நம் மனம் ஆடும் சித்து விளையாட்டு இது. நம் வாழ்க்கையில் எண்ணற்ற மனிதர்களைச் சந்திக்கிறோம்; பலரை விரைவில் மறந்து விடுகிறோம். தொடர்பே இல்லாமல் திடீரென்று யாரைப் பற்றியாவது அல்லது ஏதாவது ஒன்றைப்பற்றி நினைவு வருகிறது; இது ஏன் என்று நமக்குத் தெரிவதில்லை.

அவர் எங்கள் நிறுவனத்தின் ஒய்வு பெற்ற விஞ்ஞானி. சென்ற மாதம் காலமானார். அவருடைய 'இனிஷியல்ஸ்' ஜே..எம் (அதனால் அவர் 'ஜாம்' ஆனார்). ஒரு காலத்தில் நான் அவருடன் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் எங்களுக்குள் அவ்வளவு பழக்கமில்லை. இஸ்லாத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் உடையவர். அதன் கொள்கைகளை உண்மையாகப் பின்பற்றும் ஆர்வமுள்ளவர். உதாரணமாக வட்டி வாங்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். எங்கள் பிரிவில் அனைத்து ஊழியர்களும் மாதா மாதம் சிறு தொகை முதலீடு செய்து மொத்தத் தொகையிலிருந்து குறைந்த வட்டிக்கு பணம் பெற்றுக் கொள்வோம். சுருக்கமாகச் சொன்னால் அது எங்களுடைய பரஸ்பர நிதி உதவி நிறுவனம். எல்லோரும் உறுப்பினராகும்போது, தான் மட்டும் ஒதுங்கியிருந்தால் சரியில்லை என்பதற்காக அவரும் உறுப்பினராகச் சேர்ந்தார். அவரைப் போன்ற பலருக்கும் அது ஒரு முதலீடு மட்டுமே. ஆனால் என்னைப்போன்றவர்களுக்கு அவசரத்திற்கு குறைந்த வட்டிக்கு கடன் வழங்கும் வங்கி. ஆண்டிறுதியில் வட்டியில் வந்த லாபத்தை அனைவருக்கும் சம பங்காகப் பிரித்துக் கொடுப்பார்கள். ஆனால் அப்துல் காதர் மட்டும் அதை வாங்க மாட்டார். பின்னர் அதுபோன்ற ஒரு அமைப்பில் உறுப்பினராக இருப்பதே சரியில்லை என்று விலகிவிட்டார்.

மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பின் சார்பாக ஆங்கிலத்தில் ஒரு இதழும், தமிழில் ஒரு இதழும் நடத்தி வந்தேன். அவற்றை படித்த பிறகு என்மேல் அவருக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. மேலும் ஹோமியோபதி மருத்துவத்தை ஆழமாகப் பயின்று, ஒரு காலத்தில் அதைச் சேவையாக, என்னை நாடிவருவோர்க்கு என்னால் முடிந்த உதவியாகச் செய்திருக்கிறேன்.

அந்தக் கால கட்டத்தில் அவருடைய உறவினர் ஒருவர் சளி மற்றும் அதனால் வரும் தலைவலியினால் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். எத்தனையோ சிகிச்சை அளித்தும் திருப்தியில்லை. எங்கேயோ என்னைப்பற்றி கேள்விப்பட்டு என்னிடம் வந்தார். குறிகளின் அடிப்படையில் அவருக்கு 'காலி பைக்ரோமிகம்' என்ற மருந்தைத் தர நல்ல குணம் கிடைத்தது. இது அப்துல் காதருக்குத் தெரியும். பின்னர் அவரது இன்னொரு உறவினருக்கு இருதயத்தில் பிரச்னை, அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறப்பட்டபோது, அவரை என்னிடம் அழைத்து வந்தார். ஹோமியோபதியைப் பற்றி என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார். நானும் அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கூறினேன். பின்னர் மருந்தை ஏற்க முடிவு செய்தார். குறிகளின் அடிப்படையில் 'பிரையோனியா' என்ற மருந்தைக் கொடுத்தேன். இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்து மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது, அதே மருத்துவர் அவருக்கு எதுவுமில்லை, அறுவை சிகிச்சைக்கு அவசியமுமில்லை என்றபின், என்மேல் அவரது மதிப்பு, மரியாதை இன்னும் கூடியது.

என் வீட்டில் நான் வைத்திருந்த புத்தகங்களையெல்லாம் நோக்குவார். சிலவற்றை எடுத்துப் படிப்பார். எனக்கும் ஆழமான ஆன்மிக ஈடுபாடு இருப்பது கண்டு, மகிழ்ச்சியுடன் ஆன்மிக விஷயங்களைப் பேசுவார். இராமகிருஷ்ணரை இஷ்ட தெய்வமாகக் கொண்ட எனக்கு, அனைத்து மதங்களுக்கும் பொதுவான, அடிப்படையான மேன்மையான விஷயங்களைப் பற்றிப் பேசுவது விருப்பமான ஒன்று. ஆன்மிக வழியில் செல்லவிரும்புவோர்க்கான கையேடு ஒன்றை கேட்டு வாங்கிப் போனார். அந்தப் புத்தகம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னிடம் இரண்டு பிரதி இருந்ததால் அதை அவரையே வைத்துக் கொள்ளச் சொன்னேன். அப்போதுகூட அவருக்குத் தயக்கம்தான்; யாரிடமும் எதையும் இலவசமாகப் பெற விரும்பாதவர்.

இணை இயக்குனராக ஓய்வு பெற்று, அவர் சொந்த ஊரில் முற்றிலும் சேவை நோக்கில் ஒரு பெரிய லட்சியப் பள்ளிக்கூடமொன்றை கட்டி, நிர்வகித்து வந்தார். அதன் துவக்க விழாவிற்கு என்னையும் அழைத்திருந்தார். என்னால் செல்ல முடியவில்லை.

சென்ற மாதம் நான் சென்னையிலிருந்த போது அவர் இறந்துவிட்டார். காரைக்குடி திரும்பியதும் நண்பர் ஒருவர் அப்துல் காதரின் மறைவு பற்றிக் கூறியபோது வருத்தமாக இருந்தது. ஆனால் அத்தோடு அதை மறந்துவிட்டேன். ஆனால் இன்று மாலை என்னமோ அவர் நினைவு வந்தது. ஏனென்று தெரியவில்லை. எளிமையான, கொள்கைப்பிடிப்பான, அந்த லட்சிய மனிதரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

1 கருத்து:

nellaiappan சொன்னது…

ஜாம் அப்துல் காதர்
அவர்களின் ஆன்மா
சாந்தி அடைய நாங்களும்
உங்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கிறோம் .