14 ஆக., 2009

நினைத்துப் பார்க்கிறேன்-8: "உவமைகளும் உருவகங்களும்"

பெண்ணைப் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. பெண்களின் அழகை வர்ணிப்பதென்பது கவிஞர்களுக்கு கைவந்த கலை. கவிஞர்களின் கற்பனை பெண்களைப் பற்றி எழுதும்பொது சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விடுகிறது. அதிலும் திரைப் பாடல்களில் பெண்களை வர்ணிக்க எத்தனை உவமைகள், உருவகங்கள்! மலரும் கொடியும் பெண்ணென்பார்! நதியும் மதியும் பெண்ணென்பார்! மலர்களில் ரோஜாவில் ஆரம்பித்து தாமரை, மல்லிகை, முல்லை, அல்லி, செண்பகம் என்று கொத்தமல்லிப்பூ வரை சென்றுவிட்டு, இன்னும் ஏதாவது பூ மிச்சமிருக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறது. கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி என்று எழுதி கனிகளையும் விட்டுவைக்க வில்லை.

புதுமையாக ஒரு கவிஞன் புத்தம் புதிய புத்தகமே என்று சற்று மாறுபட்டு எழுதியபோது ஆஹா என்று ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். தற்போது அதையெல்லாம் தாண்டி கவிஞர்கள் எங்கோ சென்று விட்டார்கள். தேக்குமர ஜன்னல், தேவலோக மின்னல், ஈச்சமர கட்டில், எலந்தைப்பழ தொட்டில் என்று அவர்கள் கற்பனை எங்கெங்கோ செல்லும்போது சிரிப்பை அடக்க முடிவதில்லை. நீங்களே மனக்கண்ணால் இவற்றை கற்பனை செய்து பாருங்களேன்! அப்புறம் கம்ப்யூட்டரில் ஆரம்பித்து, கப்யூட்டர் மென்பொருள், மொபைல் ஃபோன், சிம் கார்டு என்று எதையும் விட்டு வைப்பதில்லை.

இன்னும் அவர்களது கற்பனை எப்படியெல்லாம் விரியப்போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை: