இந்த அனுபவம் பலருக்கும் இருக்கும். வாகனத்தில் நாம் செல்கையில், எவ்வளவு ஒலி எழுப்பியும் கண்டுகொள்ளாமல் சாலையில் இஷ்டம்போல் வழிவிடாமல் சென்று, நம் பொறுமையை சோதிக்கும் மனிதர்கள். ஆத்திரத்தில் மனதிற்குள் "எருமைமாடு" என்று திட்டிவிட்டு சென்றிருப்போம். ஒழுங்கீனம் என்பது நாட்டில் ஒரு மாபெரும் கலையாக வளர்ந்துவிட்டது. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? காபியாகவும், டீயாகவும், மோராகவும், தயிராகவும் உண்ணப்பட்ட எருமைப்பாலின் பாதிப்பா?
இன்னும் மேலே சென்று சிந்திக்கிறேன். நாம் உண்ணும் உணவு நம்மை எந்த அளவிற்கு பாதிக்கின்றது?
காரம் அதிகம் சாப்பிடுபவர்கள் முன்கோபிகளாக இருப்பார்கள் என்றும், உப்பு அதிகம் சேர்ப்பவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்றும் சொல்வதுண்டு.
கீதையைப் புரட்டிப் பார்க்கின்றேன். உணவை மூன்று வகையாக பிரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. சாத்வீக உணவு, ராஜச உணவு, தாமச உணவு என்று.
காய்கனிகள், அவ்வப்போது சமைத்து உண்ணப்படும் உணவு, அனைத்திலும் மிதம் மற்றும் உடலுக்கு வலிவையும், சக்தியையும் தரும் நன்மை பயக்கும் தன்மை கொண்ட உணவுகள் அனைத்தும் சாத்வீக உணவுகளாகும். சாத்வீக உணவைக்கொள்பவர்கள் சாத்வீக குணங்கள் (பொறுமை, நிதானம் போன்ற உயர் குணங்கள்) கொண்டவர்களாக இருப்பார்கள்.
சுவைகள் தூக்கலாக உள்ள உணவு வகைகள், வறுத்தவை, பொரித்தவை, மசாலாக்கள் சேர்ந்தவை ராஜச உணவுகளாகும். ராஜச உணவை அதிகம் கொள்பவர்கள் தேவையில்லாத பரபரப்பு, எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை, தேவையில்லாமல் எப்போதும் ஏதாவது செய்துகொண்டிருப்பவர்கள் போன்ற குணங்களை உடையவர்களாக இருப்பார்கள்.
கெட்டுப்போன, மக்கிப்போன, பழைய உணவு, சுத்தமில்லாத உணவு, உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவு போன்றவை தாமச உணவுகளாகும். தாமச உணவைக் கொள்பவர்கள் மந்த புத்தி உள்ளவர்களாகவும், சிந்தனையில் தெளிவில்லாதவர்களாகவும் இருப்பார்கள்.
இன்னும் உணவைத் தயாரிப்பவர்களின் மன நிலை, பரிமாறுபவர்களின் மன நிலை, உண்ணும் சுற்றுச் சூழல் இவை அனைத்தும்கூட உண்ணுபவர்களிடம் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இயற்கை மருத்துவம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு காய்கனிகள், சமைக்காத உணவுகள், அமிலத்தன்மையில்லாத உணவுகள் போன்றவற்றை பரிந்துரைக்கின்றது.
வரும் நாட்களில் உணவைப்பற்றி இன்னும் பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக