இன்று அக்டோபர் 21. அறுபது ஆண்டுகளைத் தாண்டி, அறுபத்து ஒன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். பெருமைப்படவோ, கொண்டாடவோ எதுவுமில்லைதான்.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது குழந்தைகளுக்கும், பெரும்பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மட்டும்தானா?
பரவாயில்லை, சந்தோஷப்படும்படி ஏதாவது கிடைக்கிறதா என்று விக்கிப்பீடியாவைத் (Wikipedia.com) திறந்தேன். அக்டோபர் 21-ஐத் தேடினேன். அடேயப்பா, எவ்வளவு தகவல்கள்! வரலாற்றில் அக்டோபர் 21-ம் தேதி நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்!! அன்று பிறந்த, இறந்த பெரிய மனிதர்களின் பட்டியல்.
நான் பிறந்த அதே வருடம், அதே மாதம், அதே தேதி - அக்டோபர் 21, 1949 - அன்று பிறந்தவர் இஸ்ரேல் நாட்டின் ஒன்பதாவது பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகூ(Benjamin Netanyahu).
அக்டோபர் 21 அன்று பிறந்த மற்ற சில வி.ஐ.பி.க்கள் மட்டும்:
ஜப்பானியப் பேரரசர் ஹிகஷியாமா (Emperor Higashiyama) - 1675
ஆங்கிலக் கவியரசர் சாமுவல் டைலர் காலரிட்ஜ் (Samuel Taylor Coleridge) - 1772
நோபல் பரிசை நிறுவிய ஆலஃப்ரட் நோபல் (Alfred Nobel) - 1833
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஃப் பாய்காட் (Geoff Boycott) - 1940
வெப்துனியா (Webduniya.com) செய்தியிலிருந்து அறிந்துகொண்ட ஒரு செய்தி - தமிழகத்தின் ஆளுநர் மேதகு சுர்ஜீத் சிங் பர்னாலா தன்னுடைய எண்பத்தைந்தாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
1969 அக்டோபர் 21 அன்று அமெரிக்க எழுத்தாளர் ஜேக் கெரொவ்வாக் (Jack Kerouac) மறைந்தார்.
அக்டோபர் 21, இங்கிலாந்தில் 'ஆப்பிள் தினமாகக்' (Apple Day) கொண்டாடப் படுகிறது.
இதெல்லாம் மனதிற்கு உற்சாகம் தருகிறது. நாமும் வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்ற உத்வேகத்தையும், சாதிப்போம் என்ற நம்பிக்கையும் தருகிறது.
படித்து, கேட்டு, சிந்தித்து நான் உணர்ந்த மகத்தான உண்மைகளுள் சில: நாம் யாரும் யாருக்கும் தாழ்ந்தவரில்லை; நம் எல்லோருள்ளும் அளப்பரிய ஆற்றல், மகத்தான சக்தி உறைந்துள்ளது. மனதை ஒருமுகப் படுத்தி, நம்முடைய தனித்திறமை என்ன, நம்முடைய வாழ்வின் லட்சியம் எது என்பதில் தெளிவு பெற்று, பின் அந்த ஆற்றலைக் கொண்டு, நம்முடைய லட்சியத்தை அடையப் பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி நிச்சயம்; முழுமை பெறுதல் திண்ணம். தியானம், சுவாசப் பயிற்சிகள், யோகா போன்றவை இதற்கு உறுதுணையாக உதவும். மனதைத் தளரவிடாது, விடாமுயற்சியுடன் முயன்றுதான் பார்ப்போமே. It is never too late!
அடுத்து ஒரு சில வினாடியில், எல்லாத் தகவல்களையும் இலவசமாக அள்ளித்தரும் விக்கிப்பீடியாவை நினைத்து பிரமிக்கிறேன். அதில் இல்லாததே இல்லை என்று சொல்லலாம். எவ்வளவு விஷயங்கள் விக்கிபீடியாவிலிருந்து தெரிந்துகொண்டிருக்கிறேன்! விக்கிப்பீடியா, உனக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! வாழ்க நீ!! வளர்க நின் தொண்டு!!!
நன்றி: Wikipedia & Webduniya.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக