9. குமுதம், தீபாவளி மலர் நான்கு, அக்டோபர் 21, 2009. (இண்டர்நேஷனல் ஸ்பெஷல்)
சஞ்சிகைகளைப் படிக்கும் என்னிடம் குறைந்துகொண்டே வருகிறது. முக்கிய காரணம் எங்கு பார்த்தாலும் சினிமா, சினிமா - அதைத் தவிர வேறில்லை. நான் மிகவும் மதித்த ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் கூட விதிவிலக்கில்லாமல் போனதை எண்ணி வருந்தியிருக்கிறேன். அல்லது உருப்படாத அரசியல்.
இன்று ஏதோ புரட்டிப் பார்க்கலாம் என்று தோன்ற, குமுதம் 'இண்டர்நேஷனல் சிறப்பிதழை' எடுத்தேன். புரட்டிக்கொண்டே வந்தவன் படிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் விரும்பிப் படித்தவை:
திரு என்.சொக்கன் அவர்கள் எழுதிய 'வெற்றிக்கு ஏழு படிகள்'. இது 'ரால்ஃப் ஸ்மித்' (Rolf Smith) எழுதிய "The 7-Levels of Change" என்ற ஆங்கில நூலைப் பற்றி. இந்தப் புத்தகத்தின் பிழிவை அவர் தந்திருக்கிறார். உலகமயமாக்கலுக்குப்பின் போட்டி என்பது சர்வதேச அளவிலாகி விட்டது; இந்தப் போட்டியில் வென்று சாதனை படைக்க வழிமுறைகளை கூறுகிறது இந்நூல். சுய முன்னேற்ற நூல்களை விரும்புவோர் இதனை அவசியம் படிக்க வேண்டும்.
அடுத்து...
தேடிப் பிடித்த தமிழர்: வரலாற்று ஆய்வாளர் திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் எழுதிய "ஆஷ் துரையின் குடும்பம்". நான் இதை மிகவும் ரசித்துப் படித்தேன். கப்பலோட்டிய தமிழன் படம் பார்த்த யாரும் அவ்வளவு எளிதில் ஆஷ் துரையையும், வாஞ்சிநாதனையும், மணியாச்சி சந்திப்பையும் மறந்திருக்க முடியாது. அந்த ஆஷ் துரையின் குடும்பத்தைத் தேடி சிரமப்பட்டு ஆராய்ந்து எஞ்சி உயிரோடுள்ள அவரது குடும்பத்தினரை அயர்லாந்திலுள்ள டப்ளினில் கண்டு எழுதியுள்ளார். போற்றப்பட வேண்டிய முயற்சி. ஆஷ் துரையின் பேரன் வாஞ்சியின் மீது காழ்ப்புணர்ச்சியில்லாமல் இருந்ததை நினைத்து நெகிழ்கிறார். 'கசப்புகளை எல்லாம் காலம் எப்படிக் கரைத்து விடுகிறது" என்ற அவரது வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது.
அடுத்து...
ஞாநியின் ஓ பக்கங்கள்: 'யாருக்கும் வெட்கமில்லை'.
ஞாநி ஒரு மகாத் துணிச்சல்காரர். தெளிவான சிந்தனையாளர். காரைக்குடி புத்தகத் திருவிழாவிற்கு அவரை அழைத்துப் பேச வைத்தது, வாசகர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யவைத்தது நினைவிற்கு வருகிறது.
சமீபத்தில் பரபரப்பாக அடிபட்ட நடிகை புவனேஸ்வரி வழக்கும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளையும் 'கிழி, கிழி' என்று கிழித்திருக்கிறார். சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், பத்திரிக்கைக்காரர்கள் என்று யாரையுமே விட்டுவைக்கவில்லை. ஆனால் அவர் கூறும் உண்மைகளை யாராலும் மறுக்க முடியாது. இது போன்ற நெத்தியடி கட்டுரையை எந்த வித தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், கொள்கை அடிப்படையில், அவர் மட்டுமே எழுத முடியும். கட்டுரைப்பொருள் உறுத்தலாக இருந்தாலும் என்னால் ஞானி அவர்களின் தெளிவான சிந்தனையை, தெளிவான எழுத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அடுத்து...
1 கருத்து:
நன்றி நண்பரே!
- என். சொக்கன்,
பெங்களூர்.
கருத்துரையிடுக