3 நவ., 2009

பயணங்கள்-3: "இராமேஸ்வரம் & தனுஷ்கோடி"

மானாமதுரை இரயில் நிலையத்தில் சூரியும், விசுவும்

மானாமதுரை இரயில் நிலையத்தில் நெல்லையும் , விசுவும்

நல்ல
'கம்பெனி' இருந்தால் எந்தப் பயணமும் சுவையாய் இருக்கும். எனது இந்தப் பயணத்தில் என்னுடன் துணை வந்தவர்கள் என் தம்பிகள், நெல்லையும், விசுவும். நாங்கள் மூவரும் சேர்ந்தாலே ஒரே சிரிப்பும், கொண்டாட்டமும்தான். இந்தப் பயணத்திலும் அப்படித்தான்.

எங்களுடன் வந்த நான்காவது நபர் என்னுடைய கேனன் பவர்ஷாட் A590 காமெரா. கோட்டையூர் இரயில் நிலையத்தில் நெல்லையைப் படம் பிடித்தேன். தொடர்ந்து கிட்டத்தட்ட ஐந்நூறு படங்கள்! அவற்றில் சிலவற்றை மட்டும் கீழே அடுத்த பதிவாக தனியே போட்டிருக்கிறேன்.

விசு திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் பாசெஞ்சரில் வர, நாங்கள் இருவரும் கோட்டையூரில் சேர்ந்துகொண்டோம். கோட்டையூர்-இராமேஸ்வரம் இரயில் கட்டணம், சொன்னால் நம்ப மாட்டீர்கள், வெறும் ரூபாய் இருபத்து ஆறு மட்டுமே! பேருந்தில் கட்டணம் இரண்டு மடங்குக்கும் மேல்.

இந்த 'நெடிய' பயணத்திற்கு எங்களை வழியனுப்ப அருமை நண்பர் செந்தில் காரைக்குடி இரயில் நிலையம் வந்திருந்தார்.

அடுத்து வந்த முக்கிய இரயில் நிலையம் சிவகங்கை. எனது ஓராண்டு கல்லூரிப் படிப்பு அந்த ஊரில்தான். ஓராண்டு மானாமதுரை-சிவகங்கை-மானாமதுரை என்று அலைந்திருக்கிறேன். வேறு குறிப்பிடத்தக்கது இரயில் நிலையத்திற்கு வெளியே, நேரெதிரே உள்ள சந்திரன் ஹோட்டல்தான். எவ்வளவு நாள் அங்கே சுவையான இட்லி, சட்னி, சாம்பார் என்று வெளுத்துக் கட்டியிருக்கிறேன்.

அடுத்து வைகையாற்று பாலம் தாண்டியதும், மானாமதுரை. அந்த வைகை ஆற்றுப்படுகையில் எத்தனை மாலைகள் நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி நடத்தியிருக்கிறேன். சுருங்கச்சொன்னால் அந்த ஆற்றுப் படுகைதான் எங்களது பீச். என் வாழ்வின் ஐந்து ஆண்டுகள் மானாமதுரையில் கழிந்தது. தற்போது எந்த விதத் தொடர்பும் இல்லாமல் போனது. நண்பர்களெல்லாம் எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை.

டீ, வடை என்று நொறுக்குத்தீனிகள் உள்ளே செல்ல, பரமக்குடி, இராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம் கேம்ப் தாண்ட, மண்டபம் வந்தது. ஆவலுடன் எதிர்பார்த்த மண்டபம்-பாம்பனுக்கிடையே கடலின் மேல் செல்லும் பாம்பன் இரயில் பாலமும், பிரம்மாண்டமான அன்னை இந்திரா காந்தி சாலைப் பாலமும் வந்தன. ஆசை தீர படம் பிடித்துக் கொண்டேன். மிகவும் 'த்ரில்லிங்காக' இருந்தது. ஒரு உண்மையை இங்கே சொல்லியாக வேண்டும். கடல் என்றாலே இப்போதெல்லாம் மனதில் ஒரு பயமும் சேர்ந்துதான் வருகிறது. ஒன்றும் தெரியாத அப்பாவி போல, அமைதியாக, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பல லட்சம் உயிர்களை கொள்ளை கொண்ட சுனாமிக்குப் பிறகுதான் இந்நிலை. சிறுவயதில் திருச்செந்தூர் கடலில் போட்டிபோட்டு நெடிய தூரம் கடலில் சென்றது நான்தானா என்று நினைக்க வேண்டியுள்ளது.

இராமேஸ்வரம் இரயில் நிலையம். இங்கே உள்ளே நுழைந்ததும் கண்ணில் படுவது, ஒரு நெடிய ஆலமரத்தின் கீழே வீற்றிருக்கும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் திரு உருவந்தான். 1985-ல் இரண்டாவது பிளாட்பார விரிவாக்கம் செய்ய தோண்டும்போது கிடைத்த விக்கிரகம் என்று குறிப்பு எழுதப் பட்டிருந்தது.

லாட்ஜில் பொருட்களைப் போட்டுவிட்டு, அருள்மிகு இராமநாத சுவாமியை வெளியிலிருந்தே கும்பிட்டுவிட்டு, கடல் நோக்கி நடந்தோம். வழியில், குஜராத்தி போஜனாலயாவில் சுவையான, சத்தான, மத்திய உணவு. வெளியில் வரும்போதுதான் கவனித்தேன்: நுழைவாயிலில் ஒரு சிறிய வெண்பளிங்கினாலான ஸ்ரீ சிவசக்தி ஆலயம்.

இராமேஸ்வரம் கடல் (அக்னி தீர்த்தம்), அதன் அருகிலேயே ஸ்ரீ சங்கர மேடம், ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளி அம்மன் ஆலயம்.

அருள்மிகு இராமநாத சுவாமி கோவிலின் கிழக்கு வாயிலின் எதிரே 'விவேகானந்தா பாஸ்கரம்'. இராமநாதபுரம் மகாராஜா சேதுபதியின் இந்த விருந்தினர் மாளிகையில்தான் சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார். இன்று அது ஒரு நினைவுச் சின்னம்.

மாலை பாம்பன் சென்று, அன்னை இந்திரா காந்தி பாலத்தில் பாதிவரை நடந்தோம். அதற்குள் சீக்கிரம் இருட்ட ஆரம்பித்துவிட்டது. உயரமான அங்கிருந்து, இரயில் பாலம், அதன் நடுவில் கப்பல்களுக்காகப் பிரிந்து வழிவிடும் தூக்கு பாலம். கண்கவரும் வண்ண வண்ண அஸ்தமனக் காட்சிகளை காமெராவுக்குள் பிடித்தேன்.

மறுநாள் அதிகாலை எழுந்து, குளித்து, கடற்கரைக்குச் சென்றோம். காலையில் சூரிய உதயம் காண மிகவும் ரம்மியமாக, இனிமையாக இருந்தது. வசதியாக மேடை அமைத்து, அதில் உட்கார கரும்பளிங்கு பெஞ்சுகளும் இருந்தன. இயற்கையை ரசித்தவாறே அரட்டை. அப்புறம் கடற்கரையில் பித்ருக் கடன்களை முடித்துக் கொண்டோம்.

பிறகு 22 தீர்த்தமாடல், (தீர்த்தமாட கோவிலுக்குக் கட்டணம் ரூபாய் 25 + நீர் இறைத்து ஊற்றுபவருக்கு தலைக்கு ரூபாய் 50) அருள்மிகு இராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தரிசனம், வழிபாடு. அடுத்து அதிரசம், தட்டை பிரசாதம் கொறிப்பு.

கிழக்கு வாயில் வழியே ஸ்ரீ இராமநாத சுவாமி சன்னதியில் நுழையுமுன், சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து இலங்கை வழியே தாயகம் திரும்பிய உடன், இராமேஸ்வரத்தில் ஆற்றிய உரை கல்வெட்டில் பொறித்திருந்தார்கள் (தமிழிலும், ஆங்கிலத்திலும்). மேலும் அவர் கோவில் பணியாளர்களைப் பாராட்டி விருந்தினர் கையேட்டில் பதித்திருந்த குறிப்பும் கல்வெட்டில் பதித்திருந்தார்கள்.

வெளியே வந்ததும் தேவஸ்தான கேண்டீனில் காலை உணவு.

ரூபாய் 250 கொடுத்தால் ஆட்டோக்காரர்கள் நம்மை எட்டு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஸ்ரீ கோதண்டராமர் ஆலயம், கந்தமாதன பருவதத்தில் இராமர் பாதம், சீதா தீர்த்தம், இராமர் தீர்த்தம், லக்ஷ்மண தீர்த்தம், ஸ்ரீ நாகநாதர் கோவில் (குழந்தை வரம் வேண்டுவோருக்காக), சாக்ஷி ஆஞ்சநேயர் கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். இலவச இணைப்பாக, ஒன்பதாவது இடம், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்த வீடு.

மத்திய உணவிற்குப் பின், கோவில் வாசலிலிருந்து புறப்படும் மூன்றாம் நம்பர் பஸ்சில் தனுஷ்கோடி சென்றோம். பேருந்து தனுஷ்கோடியில் கடற்படை கண்காணிப்பு மையம் வரை மட்டுமே செல்கிறது. (கட்டணம் ஐந்து ரூபாய் மட்டும்) அங்கே இரண்டு சிறிய கடற்படை கட்டிடங்கள் தவிர ஏழெட்டு ஓலைக் குடிசைகள். ஓலைக் குடிசையில் தேநீர் மற்றும் சிற்றுண்டிக்கடை, நினைவுப் பொருட்கள் (சங்கு, பாசி மாலை போன்றவை) கடை. ஒரு நினைவுச் சின்னம் குறிப்பிடத்தக்கது: 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் நாள் இரவு கடல் விழுங்கிய இரயிலில் பயணம் செய்து பலியான அனைத்து உயிர்களுக்கும் - 111 பயணிகள் + நான்கு இரயில்வே சிப்பந்திகள். என்ன நடந்தது என்று சொல்வதற்குக் கூட யாரும் உயிர் பிழைக்கவில்லை.

அங்கிருந்து அரிச்சல் முனை, முற்றிலும் அழிந்துபோன தனுஷ்கோடி சென்றோம். வாஹனம் பழைய லாரி. பின் புறம், இரு பக்கமும் பலகை அடித்து வைத்திருந்தார்கள். அதில்தான் உட்கார வேண்டும். தலைக்கு ரூபாய் நூறு மட்டும். அரிச்சல்முனையில் இந்தியப் பெருங்கடலும், வங்காள விரிகுடாக் கடலும் இணைகின்றன. ஒரு சிறிய சமதளப் பரப்பு. அங்கு யாரும் இல்லை. கால் மணி நேரம் கீழே இறங்கி வேடிக்கை பார்த்தோம். ஸ்ரீலங்கா அந்த முனையில் இருந்து பதினெட்டு கிலோமீட்டர் தூரம் என்று சொல்கிறார்கள். பைனாக்குலரில் பார்த்தால் குருசடைத் தீவுகளில் ஒன்றான கச்சத் தீவு தெரியும் என்று சொன்னார்கள். கடல் சிறிது கொந்தளித்தாலும் அந்த இடம் காணாமல் போய்விடும். அரிச்சல்முனை பின் நோக்கி வந்துவிடும்.

திரும்புகையில் அழிந்துபோன தனுஷ்கோடி இரயில் நிலையம், ஒரு சிதைந்த சர்ச், சில குடியிருப்புகளின் சிதைவுகள் கண்டோம். அங்கும் சில குடிசைகள் மட்டுமே. அங்கு பத்துப் பதினைந்து குடிசைகள் கண்டோம். இரு புறமும் கடல். ஒரு குடிசை வாசலில் ஒரு வயதுக் குழந்தை ஒன்று தனியாக மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தது! பயமெல்லாம் நமக்குத்தான். அங்கும் பயணிகளுக்காக சில கடைகள்.

நாங்கள் தனுஷ்கோடி கடற்படை கண்காணிப்பு மையத்திற்கு வந்தபோது சூரியன் கடலில் மறையத் தயாராகிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கடற்கரை மண்ணில் அமர்ந்து வேடிக்கை. எங்கள் பேருந்து வந்தது. இராமேஸ்வரம் திரும்பினோம்.

மறுநாளும் காலை சீக்கிரம் எழுந்து காலாற இராமேஸ்வரம் கடற்கரையில் நடை பயின்றோம். கடற்கரை பெஞ்சில் அமர்ந்து அரட்டை. அக்னி தீர்த்தம் செல்லும் வழியில் ஒரு வீட்டு வாசலில் காஃபிக் கடை. சிவப்பழமாக ஒரு பெரியவர் அருமையான காஃபி கலந்து கொடுத்தார். நெல்லை போன்ற ஸ்ட்ராங் காஃபி பிரியர்களுக்குப் பிடித்த காஃபி.

காலை உணவிற்குப் பின் மீண்டும் அருள்மிகு இராமநாத சுவாமி கோவிலுக்குள் சென்றோம். முதல் நாள் பிரகாரங்கள் சுற்ற முடியவில்லை. எனவே பிரகாரங்கள் சுற்றி, பிரகாரத்தில் உள்ள மூர்த்திகளை வணங்கி வந்தோம். பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தைப் பார்த்தோம், படம் பிடித்தோம். ஒரே மாதிரியான 1212 தூண்கள். பிசிறில்லாமல் ஒரே மாதிரியாக எப்படிச் செய்தார்கள் என்று வியந்தோம். (கீழே படத்தைப் பார்க்கவும்).

அடுத்து மேலக் கோபுரம். இரு புறமும் ஸ்ரீ விநாயகரும். ஸ்ரீ பாலசுப்பிரமணியரும். வழிபட்டோம்.

மதியம் 1.55-க்கு எங்கள் ரயில். இராமேஸ்வரம்-திருச்சி பாசெஞ்சர். ஸௌகரியமான, கூட்டமில்லாத, வசதியான, கால்நீட்டி அமர, செலவு குறைந்த பயணம். மாலை 6.40 மணிக்கு கோட்டையூர் வந்து சேர்ந்தேன். மறக்க முடியாத பயணம். நெல்லை சொன்னான்: "முல்லா! இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இது போல எங்காவது சென்று வரவேண்டும்." "ஆஹா! கண்டிப்பாக" என்றேன் நான்.

கருத்துகள் இல்லை: