4 நவ., 2009

சிந்தனைகள்-3:"குழி தோண்டல்"

நம்மவர்களுக்கு குழி தோண்டுவது என்றால் ஏக குஷி - மனிதருக்கு மனிதரும் சரி, சாலைகளிலும், சாலை ஓரங்களிலும் சரி. அதுவும் அரசு அமைப்புக்கள் ஒருவரை ஒருவர் கண்டுகொள்வதில்லை. ஏகப்பட்ட 'ஈகோ' பிரச்னை வேறு. அப்போதுதான் அழகாகப் போட்டு முடித்திருப்பார்கள் சாலையை. பின்னாலேயே வந்துவிடுவார்கள், குழி தோண்ட. ஒரு துறை குழி தோண்டி மூடிய பின் அடுத்த துறையினர் குழி தோண்ட வந்து விடுவார்கள். அதிலும் தோண்டுவார்களே தவிர சரியாக மூட மாட்டார்கள். சமயத்தில் எனக்குத் தோன்றும்: "அரசுத் துறைகள் ஒப்பந்தக்காரர்களின் வசதியை மட்டும்தான் பார்க்கிறதோ என்று". ஏன் சரியாக மூடவில்லை என்று கேட்கமாட்டார்கள்.

அதிலும் மழைக்காலத்துக்கு முன் தோண்டிப் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். மழை பெய்ய ஆரம்பித்ததும் மக்கள் நரக வேதனை அனுபவிக்க வேண்டாமா? மேலெல்லாம் சேற்றை வாரியிறைக்க வசதியாக குழிகள் சரியாக மூடப் படாமல் இருக்கும். மழை நீர் சாலையில் ஓட, குழி கண்ணில் படாமல், விழுந்து எழுவோர், விழும் வாகனங்கள் என்று நம் ரோதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் குழந்தைகள், பெண்டிர் படும்பாடு சொல்லிமுடியாது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் அரசு எந்திரங்களுக்குக் கவலை இல்லை.

இந்த வேதனைகளை எல்லாம் நான் நிறைய அனுபவித்திருக்கிறேன், நீங்களும் அனுபவித்திருக்கலாம்.

தற்போது இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் வந்து விட்டதுபோல் தோன்றுகிறது.

இரயில் பயணச்சீட்டு ஒன்றின் பின்புறம் கண்ட விளம்பரம் மனதிற்கு நம்பிக்கை தருவதாகவும், ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளது. (படம் ஆரம்பத்தில்). "குழாயோ, கேபிளோ அமைப்பதற்கு குழி தோண்டவேண்டாம்." ஒரு புதிய 'டெக்னாலஜி' வந்துள்ளது. மோகன் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் என்ற இந்தக் கம்பெனியின் விளம்பரம் உண்மையாயின், நல்ல காலம் பிறந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் இன்னொரு முட்டுக்கட்டையைத் தாண்டவேண்டும். அரசு அமைப்புக்கள் இந்த 'டெக்னாலஜியைப்' பயன்படுத்த முன்வரும் என்று கூறமுடியாது. ஒப்பந்தக்காரர்களின் நலம் நாடி செய்யப்படும் இவ்வாறான வேலைகளை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியுமா? என் நண்பர் கூறுவார்: "Government for the contractors, of the contractors and by the contractors" என்று கூறுவதுண்டு. அது முற்றிலும் உண்மையா என்று பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: