9 நவ., 2009

சிந்தனைகள்-4: "ஈ"

தமிழ்நாட்டில் குக்கிராமத்தில்கூட தெருவுக்கு குறைந்த பட்சம் ஒரு டீக்கடை இருக்கும். அந்த டீக்கடையில் மொறுமொறுவென்று வடை இருக்கும். விலை நம்பமுடியாது: ஒரு ரூபாய் மட்டும்! பார்த்தாலே சாப்பிடத்தோன்றும், அதாவது நீங்களும் என்னைப்போன்ற ஒரு போஜனப் பிரியனாக இருந்தால். (எண்ணெய், பருப்பு விற்கும் விலையில் இது எப்படி சாத்தியமாகிறது?)

டீக்கடையில் எப்போதும் நான்கைந்து பேர் வடையை சுவைத்து மென்றுகொண்டு, அரட்டை அடித்துக்கொண்டு, டீயை உறிஞ்சிக்கொண்டு இருப்பதைப் பார்க்கலாம். இதில் கொடுமை என்னவென்றால், அந்த வடைகளில் தவறாது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். கடைக்காரருக்கோ, 'கஸ்டமர்களுக்கோ' அதைப்பற்றிய எந்த உணர்வும் இருப்பதாகத் தெரியாது.

ஒருநாள் இதுபோன்ற ஒரு டீக்கடையில் வடை சாப்பிட கையை நீட்டியபின் நீட்டிய கையை பின்னே இழுத்துகொண்டேன். காரணம்: ஈ. நொந்துபோய் கடைக்காரரிடம், "ஏம்பா! வடையை ஒரு இலையாலோ அல்லது ஒரு பேப்பராலோ மூடிவைத்தால் ஈ மொய்க்காதிருக்கும் இல்லையா?" என்றேன். டீக்கடைக்காரரும், சுற்றியிருந்தவர்களும் ஏதோ விசித்திரமான பிராணியைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தார்கள். தர்ம சங்கடமாக இருந்தது; நான் ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டதைப்போல் உணர்ந்தேன். மெதுவாக நகர்ந்து விட்டேன்.

சிரமப்பட்டு சுவையான வடை தயார் செய்கிறார்கள். அதை மூடி சுகாதாரமாகப் பாதுகாப்பது எவ்வளவு எளிது! இருப்பினும் ஏன் செய்ய மறுக்கிறார்கள்? அந்த ஈ எங்கெல்லாமோ உட்கார்கிறது. அது நமக்குத் தெரியாமலா இருக்கிறது? ஏன் கொஞ்சம்கூட அருவருப்பு உணர்வே இல்லை.

பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழு தளைகள் (விலங்குகள்) இருக்கின்றன. அவற்றிலிருந்து விடுபடாதவரை முக்தி என்பது கிடையாது. அருவருப்பு அவற்றில் ஒன்று. நம்மவர்கள் அருவருப்பு என்ற தலையை உடைத்து ஆன்மீகத்தில் முன்னேறி விட்டார்களா என்று எடுத்துக் கொள்ளவா?

சரி, சாதாரண டீக்கடையில்தான் இப்படி என்றால், ஒருமுறை உலகப் புகழ் பெற்ற ஒரு மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டலில் அலுவலக வேலையாக, ஒரு தேசிய கருத்தரங்கத்திற்காகச், சென்றிருந்தேன். மூன்று நாள் கருத்தரங்கம் முடிந்து, கிட்டத்தட்ட ஏழு லட்ச ரூபாய் ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்தினார்கள். அங்கே 'பஃபே' முறையில் உணவு. ஒரு தட்டை கையில் எடுத்தாலே ரூபாய் 650 கணக்கில் ஏறிவிடும். என் நண்பர் சாப்பாட்டில் நாட்டமின்றி, கொஞ்சம் சுண்டல் மட்டும் சாப்பிட்டால் போதும் என்று ஒரு தட்டில் சுண்டல் எடுக்க, அதில் ஒரு முழு கரப்பான் பூச்சி இருந்தது. உடனே அதை மூடி மறைக்க பயங்கர பரபரப்பு.

ஏன் நம்மிடம் சுத்தம், சுகாதாரம் என்பது பெயரளவில் மட்டுமே இருக்கிறது. நம் சுத்தம், சுகாதார உணர்வுகள் முற்றிலும் மழுங்கிப் போய்விட்டனவா?

மறுபக்கம் சுத்தம், சுகாதாரம் என்பது ஒரு 'fetish' ஆக்கிவிட்ட ஒரு கூட்டம்.

ஒன்றும் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்தால் சொல்லுங்கள். நன்றி.

கருத்துகள் இல்லை: