25 நவ., 2009

நண்பர் கிருஷ்ணன் அவர்களது மணிவிழா






இன்று நண்பர், சாமி.கிருஷ்ணன் அவர்களது மணிவிழா. எனது மணிவிழா முடிந்து பத்து நாட்களில் இன்னொரு மணிவிழா!

முனைவர் சாமி.கிருஷ்ணன் எங்கள் அலுவலகத்தில் உலோக அரிமானப் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி. நான் அந்தப் பிரிவில் பணியாற்றியபோது எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

அவர் அன்னை-அரவிந்தர் மீது பற்றுக் கொண்டவர். எனது ஈடுபாடோ ஸ்ரீஇராமகிருஷ்ணர்-அன்னை சாரதாதேவி-சுவாமி விவேகானந்தர் மீது. நாங்கள் நேரம் கிடைக்கும்போது ஆன்மீகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.

வருடத்தில் மூன்று-நான்கு முறை பாண்டிச்சேரி சென்று அரவிந்த ஆஸ்ரமத்தில் தங்குவார். போகும்போதெல்லாம் என்னையும் அழைப்பார். இறுதியில் ஒருநாள் அவருடன் சென்றேன். தங்குவதற்கு ஆஸ்ரம சர்வதேச விடுதியில் அறை பதிவு செய்திருந்தார். அங்கே அவருடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன்.

அரவிந்தரின் மாபெரும் காப்பியமான சாவித்ரியைப் பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டேன். மில்டனின் 'பேரடைஸ் லாஸ்டுக்கு' (Paradise Lost) இணையான ஒரு பெருங் கவிதை. பேராசிரியர் நட்கர்னி அவர்களது தொடர் உரைகளை கேட்டு பிரமித்தேன், இன்புற்றேன். தினம் இரண்டு சிறப்புரைகள் என்று தொடர்ந்து பத்து நாளோ-பதினைந்து நாளோ நடைபெற்றது. நான் இரண்டு நாட்கள் மட்டுமே தங்கியிருந்ததால் நான்கு சிறப்புரைகளை மட்டுமே கேட்க முடிந்தது. மறக்க முடியாத ஒரு அற்புத அனுபவம் அது.

மேலும் என்னை அவர் ஆரோவில்லுக்கு அழைத்துச் சென்றார். அங்கே அன்னையின் ஆலயத்தில் (Matri Mandir) தியானம் செய்தோம். மற்றுமொரு மறக்கமுடியாத அனுபவம் இது.

பெரிய இடைவெளிக்குப் பின் நண்பர் கிருஷ்ணன் அவர்களை சந்தித்தது, அதுவும் அவரது மணிவிழாவில் சந்தித்தது மகிழ்ச்சியைத் தந்தது. மேலும் பல நண்பர்களை அங்கே கண்டேன். அங்கே எடுத்த சில படங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.

நண்பர் கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சகல நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கருத்துகள் இல்லை: