இன்று காலை மரபின் மைந்தன் ம.முத்தையா அவர்கள் எழுதிய "ஒரு கப் உற்சாகத்தை" எடுத்துப் புரட்டினேன். (கையடக்கமான அழகான, நேர்த்தியான பதிப்பு (நன்றி: விஜயா பதிப்பகம், கோவை). பக்கத்துக்கு நச்சென்று நான்கு வரிகள், மனதில் உரைக்கும் வண்ணம். பலமுறை படித்தும் திரும்பத் திரும்ப வாசிக்கும், அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு ஒப்பற்ற நூல். தமிழில் இது போன்ற உற்சாகமூட்டும் சுய முன்னேற்ற நூல்கள் இருப்பது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. முத்தையா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.)
அதிலே "இரவல் வாங்குபவற்றைத் திருப்பிக் கொடுங்கள்" என்றொரு மணி வரி. இதை நான்கு முறை திரும்பத் திரும்ப போட்டிருந்தாலும் தவறில்லை. நான் என்னுடைய புத்தகங்கள், மிகச் சிறந்த புத்தகங்கள், சிலவற்றை இரவல் கொடுத்துவிட்டு திரும்பப் பெறமுடியாமல் இருக்கிறேன். (நான் சிலரிடம் புத்தகங்கள் இரவலாக வாங்கிவிட்டுத் திருப்பாமல் இருந்தது வேறு விஷயம்!).
பொதுவாக நம்மவர்களுக்கு இரவல் வாங்கினால் திரும்பக் கொடுப்பது என்பது ஒரு சிரமமான வேலை. அதிலும் இரவலாகப் பெற்ற பொருள் புத்தகமாக இருந்துவிட்டால், சிக்கல்தான். அவர்களது மனசாட்சி இடம் கொடுக்காது.
- அங்கே இருப்பது இங்கேயே இருந்துவிட்டுப் போகட்டுமே!
- திரும்பக் கொடுக்காவிட்டால்தான் என்ன செய்யப்போகிறார்?
- மறுபடியும் தேவைப்படும், மறுபடியும் போய் கேட்கவேண்டும், அதனால் இங்கேயே இருக்கட்டுமே.
- இன்னும் படித்து முடிக்கவில்லை, முடித்தபின் கொடுக்கலாம்.
- கேட்டால் கொடுக்கலாம். அல்லது நச்சரித்தால் கொடுக்கலாம்.
- அந்த முட்டாளுக்கு இதன் அருமை தெரியாது.
இப்படிப் பல சமாதானங்கள்.
எங்கேயோ படித்திருக்கிறேன். ஒரு பெரிய மனிதர் சொன்னார்: "என்னுடைய புத்தகங்களை நான் யாருக்கும் இரவல் கொடுப்பதில்லை. கொடுத்தால் அவர்கள் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள். சொல்லப்போனால், என்னுடைய புத்தகங்களெல்லாம் அப்படிச் சேர்த்ததுதான்!"
இன்னும் சில மேன்மக்கள் இரவல் கொடுக்கும் நிலை வந்தால், பேசாமல் அதை தன் கையொப்பமிட்டு அன்பளிப்பாகவே கொடுத்துவிடுகிறார்கள். இதனால் பெற்றவர்க்கும் குற்ற உணர்வு இல்லை. கொடுத்தவர்க்கும் பெற்றவர் மேல் மனதில் ஒரு மூலையில் கோப உணர்வோ, வெறுப்போ இல்லாமல் இருக்கும்.
ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைத்ததாலோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் என்னுடைய புத்தக அலமாரிகளைப் புரட்டி இரவல் வாங்கியவற்றை எல்லாம் தேடித் தேடி திரும்பக் கொடுக்க ஆரம்பித்தேன். அதிலும் ஒரு புத்தகம் பல வருடங்களாக கொடுக்க மனமில்லாமல், பாதி படித்ததோடு நின்றுவிட்ட, அருமையான புத்தகம், William Shirer's "The Rise and Fall of Third Reich". கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் சென்று திருப்பிக் கொடுத்ததும் நண்பராலேயே நம்பமுடியவில்லை. அவர் கேட்கவே இல்லை, முற்றிலுமாக மறந்தே போய்விட்டார். இன்னும் சொல்லப்போனால் அவருக்குத் தன் புத்தகமா என்றே சந்தேகம் வந்துவிட்டது.
தேவைக்கு அதிகமாகச் சேர்த்துவைப்பது ஒருவித வியாதி என்ற உணர்வும், அடுத்தவர் பொருள் நமக்கு ஏன் என்ற உணர்வும் வந்ததால்தான் இந்த மாற்றம். பிறனில் விழையாமை என்பது சிறு சிறு பொருட்களில் இருந்து ஆரம்பிக்கிறது என்று கருதுகிறேன். அதைச் சிறுவயதிலேயே நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது நலம்.
நான் தற்போது அதற்கு அடுத்த நிலைக்கு வந்துவிட்டேன். அறுபதைத் தாண்டிவிட்டேன். உடல் முழுவதும் உபாதைகள். இன்னும் எவ்வளவு காலம் இருக்கப் போகிறேன். நல்லபடியாக இருக்கும்போதே யாருக்கு எந்தப் புத்தகம் பயனுள்ளதாக இருக்குமோ அதை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், தொடர்ந்து கொடுப்பேன்.
"Fight The Hoarding Instinct. Be true to yourself. இரவல் பெற்றவற்றை சுடும் நெருப்பாக எண்ணி, சீக்கிரம் திரும்பக் கொடுங்கள்.
நன்றி, வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக