13 ஜன., 2010

தேடல்-2: "தங்க நகரம் டிம்பக்டு"

நேற்று டிஸ்கவரி சானலில் காலை "Into the Unknown with Josh Bernstein" என்ற வரிசையில் தங்க நகரமான டிம்பக்டுவைத் தேடி அவர் மேற்கொண்ட பயணம் குறித்த சுவையான நிகழ்ச்சியைப் பார்த்தேன். (ஜனவரி 12, 2010 - காலை 9 மணி முதல் 10 மணி வரை).

சென்ற
வாரம் (ஜனவரி 9, 2010) நோவாவின் பேழையைத் தேடி ஆர்மீனியா, இஸ்ரேல், சிசிலி, சைப்ரஸ் சென்ற ஜோஷ், இம்முறை தங்கத்தைத் தேடி சஹாரா பாலைவனம், மாலி, கினி, தங்க நகரம் டிம்பக்டு, ஜெனி சென்றார். இந்த நாடுகளையும், ஊர்களையும் நேரில் பார்ப்பதுபோல் படம் பிடித்துள்ளனர்.

சுவாரஸ்யமான இந்த நிகழ்ச்சியிலிருந்து பல செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது.

மேற்கு ஆப்பிரிக்காவின், மாலி நாட்டிலுள்ள ஊர், டிம்பக்டு. ஒரு காலத்தில் ஓஹோ என்று கொடிகட்டிப் பறந்த நகரம். உலகத்தின் தங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கிடைத்தது. மேற்கு ஆப்பிரிக்காவின் தங்கச் சுரங்கங்கள் நிறைந்த ஊர் டிம்பக்டு.

பதினான்காம் நூற்றாண்டில் மாலி சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னன் மன்ஸா மூஸா. இவரது மற்றொரு பெயர் கங்கன் மூஸா. தங்கப் பிரியரான இவர் மெக்காவிற்கு புனித யாத்திரை சென்றபோது, சென்ற இடமெல்லாம் தங்கத்தை வாரியிறைத்துச் செலவு செய்தார். ஆயிரம் டன் அளவில் அவரிடம் தங்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. புனித யாத்திரையின் போது ஏழை எளியவர்க்கு மட்டும் இரண்டு டன் தங்கத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ஜோஷ் டிம்பக்டூவை சுற்றிப் பார்க்கிறார். தற்போதும் அங்கு மக்கள் தங்கத்தைத் தேடுகின்றனர். எப்போதாவது சிறு துகள்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஜோஷ் ஒரு பழைய முப்பதடி ஆழமுள்ள, குறுகிய ஆபத்தான சுரங்கத்தில் இறங்கி அங்கிருந்து மண்ணைத் தோண்டி மேலே அனுப்புகிறார். அங்குள்ள பெண்கள் அந்த மண்ணை சலிக்க ஒரு துகள் தங்கம் அகப்படுகிறது. டிம்பக்டூவிலிருந்து எங்கே சென்றது அத்தனை தங்கமும் ?

அடுத்து ஜோஷ் ஜெனி நகருக்குச் செல்கிறார். அங்குதான் மன்னரின் தங்கப் பட்டறைகள் இருந்தன. ஜெனி ஒரு முக்கிய வணிகத்தலம். அங்குள்ள நோமா பழங்குடியினர் தங்க வேலைப்பாடுகளில் சிறந்து விளங்கினர். ஜோஷ் அங்கே ஒரு தங்கப் பட்டறைக்குச் செல்கிறார். தங்க ஆபரணங்கள் செய்யப்படுவதைப் பார்க்கிறார். தேடிவந்ததன் நினைவாக தான் கண்டெடுத்த தங்கத் துகளிலிருந்து ஒரு சிறு தங்கக் கம்பி செய்து வாங்கிக் கொள்கிறார்.

ஒரு காலத்தில் தங்கத்திற்கு உள்ள மதிப்பு உப்பிற்கும் இருந்தது. தங்கம் நிறையக் கிடைத்தது. ஆனால் உப்போ கிடைக்காத ஒன்று. வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட வேண்டிய ஒன்று. தங்கமும் உப்பும் பண்டமாற்று செய்யப்பட்டன. உப்பிற்கு அங்கே வெள்ளைத் தங்கம் என்று பெயர்.

பதினாறாம் நூற்றாண்டில் மொராக்கோவை ஆண்ட மன்னர் சுல்தான் அஹ்மத் அல் மன்சூர் தன நாட்டைப் பொருளாதாரச் சிக்கல்களிடமிருந்து மீட்க தங்க நகரங்களான டிம்பக்டூவையும், ஜெனியையும் கைப்பற்றினார். மாலியின் தங்கம் மொரோக்கோ சென்றது. இன்னும் எவ்வளவோ...

இன்னும் படங்களுடன் நிறைய விபரங்கள் அறியவிரும்புவோர் கீழ்க்கண்ட தளங்களில் காணலாம்:

டிம்பக்டு பற்றி:

http://www.history.com/classroom/unesco/timbuktu/mansamoussa.html


http://en.wikipedia.org/wiki/Timbuktu


ஜெனி நகரைப் பற்றி:

http://en.wikipedia.org/wiki/Djenn%C3%A9


மன்னர் மன்ஸா மூஸா பற்றி:
http://www.blackhistorypages.net/pages/mansamusa.php
http://en.wikipedia.org/wiki/Mansa_Musa



துவாரக் பழங்குடியினர் பற்றி:

http://en.wikipedia.org/wiki/Tuareg


மொராக்கோ மன்னர் அஹ்மத் அல் மன்சூர் பற்றி:

http://en.wikipedia.org/wiki/Ahmad_I_al-Mansur_Saadi


ஜோஷ் பெர்ச்டீனின் டிம்பக்டு ஸ்லைடுஷோ :

http://dsc.discovery.com/tv/josh-bernstein/slide-show/timbuktu.html


நன்றி: டிஸ்கவரி சானல், ஜோஷ் பெர்ன்ஸ்டீன், Black History Pages.net மற்றும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கீபீடியா

கருத்துகள் இல்லை: