9 ஜன., 2010

தேடல்-1: "நோவாவின் பேழை"

இன்று காலை டிஸ்கவரி சானலில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியைப் பார்த்தேன். "Into the Unknown with Josh Bernstein" என்ற அந்த நிகழ்ச்சியில், ஜோஷ் "நோவாவின் பேழையைத்" தேடிச் செல்கிறார்.

பைபிளில் உள்ள நோவாவின் பேழை பற்றிய கதையை நீங்கள் அறிந்திருக்கலாம். நோவா ஒரு உத்தமர், நீதிமான். மனிதர்களின் தீய செயல்கள் அதிகரித்தபோது, சினம் கொண்ட இறைவன் உலகை அழிக்க முடிவு செய்தார். அதற்கு முன் நோவாவை ஒரு பேழை ஒன்றைச் செய்யச் செய்து, அதன் மூலம் அவர், தன குடும்பத்தினருடனும், வளர்ப்பு பறவைகள், விலங்குகளுடன் தப்பிச் செல்லுமாறு பணிக்கிறார். அதன் மூலம் மனித இனத்தையும், பறவை, விலங்கு இனங்களையும் காக்கச் செய்கிறார். அதன்படி நோவா பேழையில் செல்கிறார். அதன் பின் ஏழு நாட்கள் கழித்து, நாற்பது நாட்கள் தொடர்ந்து மழை பெய்து, ஊழிப் பெருவெள்ளம் உலகையே அழிக்கிறது. ஊழிப் பெருவெள்ளம் வழிந்தபின், கரை சேர்ந்து புதிய உலகைத் தொடங்குகிறார்.

ஜோஷ் ஆர்மீனியா, சிசிலி, இஸ்ரேல், சைப்ரஸ் என்று ஒவ்வொரு இடமாகத் தேடிச் செல்கிறார். பேழையின் ஒரு சிறு கட்டை ஆர்மீனியாவில் ஒரு கிறித்துவ ஆலயத்தில் இருப்பதாக அறிந்து அங்கே செல்கிறார். ஒரு பொக்கிஷமாக அந்தக் கட்டை அலங்கரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நம்பிக்கை தவிர அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் கிடைக்காமல், ஊழிப் பெருவெள்ளம் என்பதற்கு ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என்று தேடி, சிசிலி, இஸ்ரேல், சைப்ரஸ் என்று செல்கிறார்.

எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிசிலியிலுள்ள எட்னா என்ற எரிமலை வெடித்து அதனால் மத்தியதரைக்கடலில் ஏற்பட்ட சுனாமிதான் அந்தப் ஊழிப் பெருவெள்ளமா ? அந்த சுனாமி மத்தியதரைக்கட்லிலுள்ள நிலப்பரப்புகளை அழித்ததா?

இப்படி ஒவ்வொரு இடமாகச் சென்று அங்குள்ள நிபுணர்களிடம் ஆதாரம் தேடுகிறார். மிகவும் சுவாரஸ்யமாகப் நாடு நாடாகச் சென்று, ஊர் ஊராகச் சென்று தேடுகிறார். மிகவும் சிறப்பாகப் படமாக்கப் பட்டுள்ளது. அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் கிடைக்காவிட்டாலும் அந்தத் தேடல் இனிமையாக இருந்தது.

தமிழ்ச் சானல்களும் இது போன்ற சிறப்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாமே. சும்மா சினிமா, சினிமா, சதா சினிமா, இல்லை சீரியல், சதா சீரியல் என்ற நிலையை மாற்றலாமே.

இந்த டிஸ்கவரி சானல் நிகழ்ச்சி, தமிழில் நான் படித்த இரு புத்தகங்களை நினைவு படுத்தியது. அவை 'கௌதம புத்தரின் அடிச்சுவட்டில்' மற்றும் 'மாணிக்கவாசகரின் அடிச்சுவட்டில்'. இவற்றை தொடர்புடைய ஊர் ஊராகச் சென்று ஆதாரம் திரட்டி மிகச் சிறப்பாக, மிகச் சுவையாக திரு சிவபாதசுந்தரம் அவர்கள் எழுதியுள்ளார்கள். அனைவரும் படித்து அறிய, மகிழ வேண்டிய அற்புதமான புத்தகங்கள்.

2 கருத்துகள்:

nellaiappan சொன்னது…

நோவாவின் பேழை பற்றி நான் அறியேன்!
ஆனால் நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கும் போது
நீங்கள் சொல்லும் இரண்டு புத்தகங்களையும் உடனே
படிக்க வேண்டும் போல் தோன்றுகிறது.

SURI சொன்னது…

நன்றி, நெல்லையப்பா!