என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
29 மார்., 2010
நண்பர் கண்ணனது மணிவிழா:
சென்ற சனிக்கிழமை என்னுடன் பணிபுரிந்த நண்பர் திரு கண்ணன் அவர்களது மணிவிழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. சாதாரணமாக நான் கூடியவரை எல்லா விழாக்களையும் தவிர்த்துவிடுவேன். எனக்கு மிக நெருக்கமானவர்களது விழாக்களில் மட்டுமே கலந்துகொள்வேன். அலுவலகத்தில் ஒருவொருக்கொருவர் உறுதுணையாக, நட்பாகக் பழகியதை மறக்கமுடியாமல் ஸ்ரீரங்கம் சென்று அவரது மணிவிழாவில் கலந்துகொண்டேன்.
அங்கே பல அலுவலக நண்பர்களை நீண்ட நாட்களுக்குப்பின் கண்டு அளவளாவ முடிந்தது. குறிப்பாக, பல ஆண்டுகள் சந்திக்காத நண்பர், விஞ்ஞானி, முனைவர் எம்.ஹரிஹரன் அவர்களைக் காணமுடிந்தது.
காலை ரயிலில் சென்று மாலை ரயிலில் திரும்பியதால் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது. ரயிலிலும் சரி, திருச்சி ரயில் நிலை ஏ.சி. வெயிட்டிங் ஹாலிலும் சரி நிறையப் படித்தேன். ஏனோ நான் வீட்டில் இருக்கும்போது இந்த அளவில் பாதி கூட படிக்க முடிவதில்லை. மொத்தத்தில் ஒரு மகிழ்ச்சியான பயணம், மகிழ்ச்சியான அனுபவம்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஸ்ரீரங்கம் கோபுரங்களை எனது கேமராவில் க்ளிக்கினேன். அப்பா, ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றி எத்தனை கோபுரங்கள்! ஸ்ரீரங்கத்தைப் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு: காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம், பூலோக வைகுண்டம் எனப்படுகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட 108 திவ்விய தேசங்களில் அதிக பாடல் பெற்ற தலம் இது. ஒரே வருத்தம் கால அவகாசம் சரியாக இல்லாமையால் கோவிலுக்குள் சென்று, ஸ்ரீரங்கநாதரை தரிசிக்கம் பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. இருக்கட்டும், அடுத்தமுறை கவனமாகத் திட்டமிட்டு கண்டிப்பாக தரிசனம் பெறவேண்டும்.
இந்த விழாவில் எடுத்த சில படங்களை மேலே பதிவு செய்துள்ளேன்.
கண்ணன் தம்பதிகள் சகல நலம் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக