29 ஏப்., 2010

எனக்குப் பிடித்த கவிதை-61:தபசியின் "எல்லாவற்றையும் விழுங்கியவன்"

எப்போது பார்த்தாலும்
எதையாவது
மென்று கொண்டும்
தின்று கொண்டும்
இருக்கிறான் அவன்.

முறுக்கு, சுண்டல், கடலை மிட்டாய்
பட்டாணி, மிக்சர், தட்டை
வத்தல், அப்பளம், சாக்லேட்... என
எது கிடைத்தாலும்
வாயில் போட்டுக் கொள்கிறான்.

சமையலறைக்குள் நுழைந்து
வெளியே வந்தால்
பொட்டுக் கடலையோ, சர்க்கரையோ இல்லை
ஹார்லிக்ஸ் , போர்ன்விட்டாவோ
அவன் வாயிலிருக்கும்.

இட்லி, தோசை, பொங்கல், பூரி, வடை என
எல்லாவற்றையும் சாப்பிடுகிறான்.
சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், தயிர்,
கூட்டு, பொரியல், அவியல், பச்சடி, ஊறுகாய் என
எதையும் மிச்சம் வைப்பதில்லை அவன்.

மணிக்கொரு முறை
டீயோ, காபியோ குடிக்கிறான்.
கோடை காலங்களில்
இளநீர், மோர், பழரசம், வெள்ளரி,
நுங்கு, தர்பூசணி என
வெளுத்துக் கட்டுகிறான்.

விருந்துகளுக்குச் செல்கையில்
வடை, பாயசம், ஐஸ்க்ரீம், வாழைப்பழம், பீடா என
மறுமுறை கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறான்.

எதுவும் கட்டுப்படியாகாமல் போக
ஒரு நாள்
பிளேடு, செங்கல், நட், போல்ட்,
ஆணி, உடைந்த ட்யூப் லைட் என
சாப்பிட ஆரம்பித்தான்.
அதுவும் கட்டாது போலிருந்தது.

தன பசியைத் தீர்த்துக் கொள்ள
ஓர் அரசியல்வாதியாக மாறினான்.
எல்லாவற்றையும் விழுங்கி
ஏப்பம் விட்டான்.

ஒரு நாள்
அவன் வாயைத் திறந்து காட்டச் சொல்லி
பார்த்தது
கட்சி மேலிடம்.
உலகமே அவன் வாய்க்குள் இருந்தது.

- இனிய உதயம், மாத இதழ், ஏப்ரல் 2010.

நன்றி: கவிஞர் தபசி மற்றும் இனிய உதயம்.

கருத்துகள் இல்லை: