26 ஜூன், 2010

பாகனேரி தேர்த்திருவிழா-2010:







































சென்ற ஆண்டு  பாகனேரி   தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டதுபோல்  இந்த ஆண்டும் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

எவ்வளவு கவலைகள், கஷ்டங்கள் இருந்தாலும்,  திருவிழா என்று வரும்போது பெரும்பாலானோர்  எல்லாவற்றையும் மறந்து,  உற்சாகமாகிவிடுகின்றனர்.  பிரிந்த உறவினர்கள் கூடுவது,  பழைய நண்பர்களைப் பார்ப்பது இப்படி  உறவுகளை-நட்புகளைப் புதுப்பித்துக்கொள்ள  ஒரு வாய்ப்பாக திருவிழா அமைகிறது.   


எங்கள் வீட்டைப்பொறுத்தவரை  என் பெண்ணும், மாப்பிள்ளையும், பையனும் இந்த ஆண்டு வந்து கலந்துகொள்ள முடிந்தது பெருமகிழ்ச்சியைத் தந்தது. 

காலையில்  குடும்பத்தினருடன்  அருள்மிகு  புல்வாய்  நாயகி  அம்மன்  கோவிலுக்கும், அருள்மிகு மகாமாரியம்மன் கோவிலுக்கும்  சென்று வழிபட்டோம்.  நிலையில் தேர் அலங்கரிக்கப்பட்டு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தோம். அதேபோல கோவிலிலும் அருள்மிகு புல்வாய் நாயகி அம்மன் திருவுருவச் சிலை அலங்கரிக்கப்பட்டு  மாலை தேரில் பவனிவர தயாராக இருப்பதைப் பார்த்தோம். 

மாலை ஆறு மணிக்கு மேல்  தேரோட்டம் பார்க்கச் சென்றோம்.  சுற்று வட்டாரத்திலுள்ள  ஊர் மக்கள் பெருந்திரளென  வந்து கொண்டதைக் காண முடிந்தது.  மேலும் பாகநேரியைச்  சொந்த ஊராகக் கொண்டு ஆனால் பிழைப்பின் நிமித்தம் வெளியூரில் வசிப்பவர்கள்கூட நிறையப் பேர்  தவறாது தேர்த்திருவிழாவிற்கு பாகனேரி வந்து தேரிழுப்பது, கோவிலுக்குச் சென்று வழிபடுவது என்று பழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அனைவருமே உற்சாகமாக, சந்தோஷமாக காணப்பட்டனர்.  அதிலும் குழந்தைகளுக்குச் சொல்லவே வேண்டாம்.  பலூன் வியாபாரிகள், பூ வியாபாரிகள்,  விளையாட்டுச் சாமான் மற்றும் பிளாஸ்டிக் சாமான்கள் விற்பனை ஸ்டால்கள், மிட்டாய்க் கடைகள் என்று நிறையபேர் திருவிழாக்களை நம்பி வாழ்வதைக் காணமுடிந்தது.  நினைத்துப் பார்க்கிறேன், இவர்கள் எப்படி ஊர் ஊராக திருவிழாக்களுக்குச் செல்வது, வியாபாரம் செய்வது என்று தங்கள் வாழ்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று.  நம் பிழைப்பு  எவ்வளவோ  தேவலை  என்று  எண்ணிக்கொண்டேன்.

இரண்டு தேர்கள் மொத்தம்.  ஒன்று  சிறுவர்களுக்கானது.  முழுக்க முழுக்க சிறுவர்களால் இழுக்கப்படுவது.  பெரிய தேர் மற்ற அனைவருக்கும்.  தேர்களின் அலங்காரம் கலை நுட்பத்துடன் இருப்பதை அருகில் சென்று பார்த்தால் தெரியும் (படங்கள்). 

நேற்றைய பொழுது இப்படியாக உறவினர்களுடன் இனிமையாகக் கழிந்தது.  

கருத்துகள் இல்லை: