ஹோமியோ மேதை டாக்டர் கான்ஸ்டன்டைன் ஹெரிங் அவர்களது இந்தத் திருவுருவப் படம் நண்பர் அலெக்ஸ் அவர்களது கைவண்ணத்தில் உருவானது. காரைக்குடி ஹெல்த் இன்ஸ்டிட்யூட்டில் ஹெரிங் தினம் கொண்டாட்டத்திற்காக இதை அவர் உருவாக்கினார். வந்திருந்த ஹோமியோ அன்பர்கள் அனைவருக்கும் இப்படத்தின் ஜெராக்ஸ் பிரதி ஒன்று வழங்கப்பட்டது. விழாவில் பல சிறப்பு அம்சங்கள் நிறைந்த்திருந்தன. ஹோமியோபதியின் தூண்களில் ஒருவர் என்று போற்றப்படும் ஹெரிங் அவர்களது சாதனைகள் கணக்கில் அடங்கா. அவர் ஆய்ந்தறிந்த எத்தனையோ மருந்துகளில் குறிப்பாக லாக்கசிஸ் என்ற மருந்தைக் குறிப்பிடலாம். எண்ணிலடங்கா உயிர்களைக் காத்த அந்த மருந்து இன்றும் பலரைக் காத்து வருகிறது. தன் உயிரைப் பணயம் வைத்து தென் அமெரிக்காவில் வாழும் சுருக்குக்கு என்ற மிகக் கொடிய விஷப் பாம்பின் விஷத்தை ஹோமியோ முறைப்படி பக்குவம் செய்து அருந்தினார். அதனால் அவருக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டது. உதாரணமாக வாழ்நாள் இறுதிவரை காலர் வைத்த சட்டையை அவரால் அணியமுடியவில்லை. ஆனால் அந்த மருந்து ஹோமியோபதி பக்குவத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காத்துள்ளது, இன்றும் காத்து வருகின்றது. மேலும் நோய் குணமாவதை அறிவதற்கான விதிகளை அவர் கண்டறிந்தார். அந்த விதிகள் இன்றும் அவர் பெயராலேயே வழங்கப்படுகிறது. நோய் குணமாவதின் அறிகுறி, நோய்க் குறிகள் உள்ளிருந்து வெளியே வரும், முக்கிய உறுப்புகளிலிருந்து குறைந்த முக்கியம் வாய்ந்த உறுப்புகளுக்கு மாறும், உடம்பின் மேல் பகுதியிலிருந்து கீழ் நோக்கி நோய்க்குறிகள் மாறும். இவை அனைத்தும் நோயாளி நோயிலிருந்து விடுபட ஆரம்பித்துவிட்டார் என்பதனை உறுதி செய்கின்றன.
அந்த ஹெரிங் விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். அந்த நினைவுகள் இன்றும் பசுமையாக இருக்கின்றன, என்றும் இருக்கும் - சூரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக