நேற்று, ஜூலை ஐந்தாம் நாள், பாரத் பந்த் நடந்து முடிந்துவிட்டது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஒரு மக்கள் விரோத நடவடிக்கை; ஆட்சியாளர்கள் வெறும் கணக்குப்பிள்ளை போல செயல்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு செயல்; பெட்ரோலியப் பொருட்கள் வாழ்வின் பல அங்கங்களோடு கலந்துவிட்ட ஒன்று; அதன் விலையேற்றம் அனைத்து மக்களையும் பாதிக்கும், விலைவாசி மேலும் மேலும் உயர வழிவகுக்கும், சாதாரண மக்கள் கடும் துயருக்கு உள்ளாவர்; அரசின் அனைத்து திட்டங்களையும் அர்த்தமற்றதாக்கிவிடும் என்பதும் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் மறுபடியும் மறுபடியும் வேறு வழியில்லை என்று சொல்லி, பெரும் நஷ்டக் கணக்கைக் காட்டி, விலையேற்றுவது ஆட்சியாளர்களின் திறமையின்மையையும், சிந்தனை வறட்சியையும், பொறுப்பற்றதன்மையையும் காட்டுகிறது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமான, மாற்றுத் தீர்வுகளைக் காண அரசு தீவிரமாக சிந்திப்பதாகவோ, முயல்வதாகவோ தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க, எதிர்க்கட்சிகளின் செயல்பாடோ வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. அர்த்தமற்ற 'பந்த்கள்', போராட்டங்கள் இவற்றால் என்ன சாதிப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்? அவர்கள் போராட்டங்களால் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. நாங்களும் இருக்கின்றோம் என்று தங்களைக் காட்டிக்கொள்ள மட்டுமே பயன்படுத்துகிறார்களா? இந்த 'பந்தினால்' பத்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று செய்தித் தாட்கள் கூறுகின்றன. இவ்வளவு இழப்பை ஏற்படுத்தும், பொதுமக்களுக்கு பல வகைகளில் இடையூறு விழைவிக்கும் இப்படி ஒரு போராட்டம் தேவைதானா? பேருந்துகள் உடைப்பு போன்ற பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் செயல்களால் யாருக்கு லாபம்? எதிர்ப்பைத் தெரிவிக்க வேறு வழியே தெரியவில்லையா? இங்கும் கடுமையான சிந்தன வறட்சியும், பொறுப்பற்ற தன்மையுமே வெளிப்படுகிறது.
பொதுமக்களைப் பொறுத்தவரை அரசியல்வாதிகளால் - அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி - துன்பம் மட்டுமே; நடக்கும் நிகழ்வுகள் இதனை உறுதி செய்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக